வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் வினைத்திறனுடன் செயல்படும் பரீட்சைத் திணைக்களம் | தினகரன் வாரமஞ்சரி

வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் வினைத்திறனுடன் செயல்படும் பரீட்சைத் திணைக்களம்

'அரசதுறை ஊழியர்கள் தமது ஏதேச்சாதிகாரத்தை மக்கள் மீது பிரயோகிப்பதற்காக  சம்பளம் வழங்கி வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை. அவ்வாறு நிகழுமாயின் அத்தகைய  நிறுவனங்களின் உள்ளகக் கட்டமைப்புகள் முறையாக இயங்கவில்லை அல்லது அதற்கான  பொறிமுறை பொருத்தமாக இல்லை'

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வினைத்திறன்மிக்க தாபன ரீதியான கட்டமைப்புகளும் நிறுவனங்களும் இன்றியமையாதவை. அவ்வாறான கட்டமைப்புகள் முறையாகத் தாபிக்கப்பட்டு நிருவகிக்கப்படுமாயின் அந்நாட்டின் ஜனாதிபதி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சென்று சரியாக வேலை செய்யுமாறும் பொதுமக்களை அலைக்கழிக்க வேண்டாமென்றும் எச்சரிக்க வேண்டியிருக்காது.  

அரசுதுறை நிறுவனங்களின் சேவை வழங்கும் செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விசனத்துடன் கருத்துத் தெரிவிப்பதை அடிக்கடி காணமுடிகிறது. பொதுமக்களுக்கு சேவை வழங்கவே அரச நிறுவனங்களில்  பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசுதுறை ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  மாறாக அரசதுறை ஊழியர்கள் தமது ஏதேச்சாதிகாரத்தை மக்கள் மீது பிரயோகிப்பதற்காக சம்பளம் வழங்கி வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை. அவ்வாறு நிகழுமாயின் அத்தகைய நிறுவனங்களின் உள்ளகக் கட்டமைப்புகள் முறையாக இயங்கவில்லை அல்லது அதற்கான பொறிமுறை பொருத்தமாக இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கும். 

அரசதுறை நிறுவனங்களுக்கு எதிராக பொதுவாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் வெகு அபூர்வமாக பொறுப்புணர்வுடன் தமக்கு வழங்கப்பட்டுள்ள அரச கடமைகளை குறைவான வளங்களைக் கொண்டிருந்தாலும் சிறப்பாக இயங்கி பொதுமக்களுக்கு அர்ப்பணிப்புடன் சிறப்பாகச் சேவை வழங்கும் அரச நிறுவனங்களும் இல்லாமலில்லை. என்றாலும் விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிச்சமிட்டுக் காட்டப்படுவதைப் போல சிறப்பாக இயங்கும் நிறுவனங்கள் செய்யும் சேவைகள் வெளிப்படுத்தப்படுவதுமில்லை பாராட்டுப் பெறுவதுமில்லை. 

அவ்வாறு குறைவான வளங்களைக் கொண்டிருந்தாலும் தேசிய ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பான ஒரு பணியில்  அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள அதிகாரிகளையும் ஊழியர்களையும் கொண்டியங்கும் ஒரு முக்கிய நிறுவனம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களமாகும். 

இலங்கையில் அரசதுறைப் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த ஒவ்வொருவரும் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தொடக்கம் கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொண்டிருப்பர். இதில் தோற்றிய ஒவ்வொருவருக்கும் பரீட்சைக்கு விண்ணப்பித்ததும் பரீட்சை எழுதியதும் பெறுபேற்றைப் பெற்றதும் மட்டுமே நினைவிருக்கும். ஆனால் அந்த ஒவ்வொரு பரீட்சையையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து பெறுபேற்றை வழங்க ஆயிரக்கணக்கானவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பின்னணியில் இருந்துள்ளது  என்பதைத் தெரிந்திருக்க பெரிதும் வாய்ப்பில்லை. 

ஒவ்வொரு பரீட்சையையும் நடத்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே அதற்குரிய தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  குறிப்பாகப் பாடசாலைப் பரீட்சைகளின் போது இலட்சக்கணக்கான மாணவர்கள் தோற்றுவதால் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டிருப்பர். பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் மிகுந்த அனுபவம் வாய்ந்த வளவாளர்களின் சேவை இரகசியமான முறையில் பெறப்படும். மாணவருக்கு தமது கண்முன்னே பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வினாத்தாள் இருப்பது மட்டுமே தெரியும்.   

ஆனால் கல்வியலில் வெவ்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்வதை நோக்காகக் கொண்டே ஒவ்வொரு வினாவும் அதன் பகுதிகளும் உருவாக்கப்படும். ஒவ்வொரு வினாப்பத்திரமும் பல தடவைகள் சரிபார்க்கப்பட்டு மூன்று மொழிகளிலும் ஒத்திசைவு உள்ளமை உறுதிசெய்யப்பட்ட பின்னரே அச்சுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த ஒவ்வொரு செயன்முறையின் போதும் பரீட்சையின் இரகசியத்தன்மையைப் பேண முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். காவல் துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கும்.  

இப்பணிகள் இடம்பெறும் கிளையில் பணியாற்றும் அதிகாரிகளும் இரவு பகலாக இக்கிளையில் தங்கியிருந்து கண்ணில் எண்ணெய் விட்டுக் கண்காணித்துக் கொண்டிருப்பர். பரீட்சை ஒன்றுக்கான ஆயத்தங்கள் தொடங்குவதிலிருந்து அது நடத்தி முடிக்கப்படும் வரை இக்கிளையின் அதிகாரிகள் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்பணர்வுடனும் நேரகாலம் பாராது கடமைகளைச் செய்வதை வியந்து நோக்கத் தோன்றும். ஜப்பானிய அரசாங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பல தசாப்தங்கள் பழைமையான பரீட்சைத் திணைக்களக் கட்டடத்தில் உள்ள சிறைக்கூட அறைகள் போன்ற சிறிய செல்களில் தான் வினாத்தாள்கள் உருவாகின்றன.  தங்கியிருந்து வேலை செய்வதற்கான முறையான வசதிகள் ஏதும் இங்கில்லை. ஏன் முறையான கழிவறை வசதிகள் கூட போதுமானளவு இல்லை. உடைந்துபோன தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற வசதியீனங்களுக்கு மத்தியில் ஒரு சமூகக் கடமை என்ற பொறுப்புணர்வுடன் அங்குள்ளவர்கள் தமது பணிகளில் தொய்வின்றி ஈடுபடுகின்றனர். போக்குவரத்து பகுதிக்குப் பொறுப்பானவர்கள் வினாத்தாள் பொதிகளையும் காகிதாதிகளையும் உரிய மத்திய நிலையங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பர். பரீட்சையை நடத்தும் பொறுப்பான விடயத்திற்கு ஆசிரிய சமூகத்தின் பங்களிப்பு அதிகளவில் பெறப்பட்டிருக்கும். பரீட்சை முடிந்ததும் பரீட்சைத் திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கிளை மதிப்பீட்டுக் கடமைகளை ஆரம்பிக்கும். அப்பணிகளில் பல்கலைக்கழகங்களின் வளவாளர்களும் பாடசாலை ஆசிரியர்களும் ஈடுபட்டு மதிப்பீட்டை முடிப்பர். ஒவ்வொரு விடைத்தாளும் குறைந்தபட்சம் இரு மதிப்பீட்டாளர்களால் பரீட்சிக்கப்படும். அதற்கு மேலதிகமாக தெரிவுசெய்யப்பட்ட விடைத்தாள்கள் மேலும் இரு சந்தர்ப்பங்களில் பரீட்சிக்கப்படும். பெறுபேறுகள் வந்த பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பித்தால் மேலும் இருவரால் அவ்விடைத்தாளின் புள்ளியிடல் சரிபார்க்கப்படும்.  

இவ்வாறு பரீட்சையொன்றின் மதிப்பீட்டுப்பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் அவற்றிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக் கிளைக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படும். ஆய்வு முடிவில் பெறப்படும் முடிவுகள் பரீட்சை வினைத்தாள் ஆக்கக் குழுவுக்கு வழங்கப்பட்டு அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் கலந்துரையாடப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்படும். 

ஆகவே ஒவ்வொரு பரீட்சையின் போதும் பரீட்சைத் திணைக்களத்தின் பல்வேறு கிளைகளில் பணியிலுள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் தமது கடமைகளைச் சரியாகச் செய்தால் மட்டுமே பரீட்சைகளின் இரகசியத் தன்மையைப் பேணி பரீட்சைகளை நடாத்தி உரிய காலத்தின் நம்பகத்தன்மையுடன் பெறுபேறுகளை வழங்க முடியும். இற்றைவரையில் அவ்வப்போது சிற்சில சலசலப்புகள் வந்தபோதிலும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் வினைத்திறனுடனும்  இயங்கும் நிறுவனம் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமைக்கு பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளையும் ஊழியர்களையும் பாராட்டுவது எல்லாவிதத்திலும் தகும். 

பாடசாலைப் பரீட்சைகள் மட்டுமன்றி அரசதுறையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைகளையும் பரீட்சைத் திணைக்களத்தின் மற்றுமொரு பிரிவு நடத்தி வருகிறது. இவ்வாறு தேசிய ரீதியில் அதிமுக்கியமான பணியை ஆற்றும் பரீட்சைத் திணைக்களம் தற்போது டிஜிட்டல் மயமாகியுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தில் பார்க்க வசதி வழங்குவதுடன் சர்வதேச தரத்திலான சான்றிதழ்களையும் உறுதிப்படுத்தி வழங்குகிறது. நேர விரயத்ததை தடுக்கவும் நெடுந்தொலைவில் உள்ளவர்கள் கொழும்புக்கு வராமலேயே தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் இதன்மூலம் முடியும்.   பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி சேவை வழங்கும் பரீட்சைத் திணைக்களத்தை சிறப்பான அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனமாகக் கருதி அத்தியாவசியமான இடவசதியையும் ஏனைய சிறப்பு வசதிகளை வழங்கினால் இந்நிறுவனத்தின் அதிகாரிகளும் ஊழியர்களும் மேலும் வினைத்திறனுடன் தமது கடமைகளைச் செய்வதற்கான பணம் சாராத ஊக்குவிப்பாக அது அமையும்.  

பரீட்சைத்திணைக்கள வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுவரும் புதிய கட்டடத் தொகுதி இடப்பற்றாக்குறைக்கு தீர்வாக அமைந்தாலும் பழைய கட்டடங்கள் உடனடியான பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அத்துடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு சேவை வழங்கவரும் வளவாளர்களுக்கு அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் மிகவும் முக்கியம்.

குறிப்பாக பரீட்சை மதிப்பிட்டுக் கடமைகளுக்காக கொழும்புக்கு வரும் ஆசிரியர்கள் போதிய வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களின்றித் தவிப்பதை காணமுடிகிறது. பலர் பாடசாலை வகுப்பறைகளில் தங்கி நுளம்புக்கடிக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்ட சம்பவங்களும் கடந்த காலத்தில் நிகழ்ந்தன. மதிப்பீட்டுக் கடமைகள் மன அமைதியுடன் செய்யவேண்டிய கடமை என்பதால் அதில் ஈடுபடுபவர்களுக்கு அதிகூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சரியான மதிப்பீட்டிற்கும் வினைத்திறன் அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும்.  

கதிரைகளைச் சூடாக்கி மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும் அரசுதுறை நிறுவனங்கள் மத்தியில் மதிப்பிட்டின் இரகசியத்தன்மை நம்பகத்தன்மை, பொறுப்புடைத்தன்மை என்பவற்றைப் பேணி இயங்கும் பரீட்சைத் திணைக்களத்திற்கு உரியவளங்களை வழங்கி ஊக்குவிப்பது அவசியம். பொதுமக்களுக்குத் தெரியாமல் திரைமறைவில் பரீட்சைத்திணக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பற்றி இப்போது ஓரளவு தெரிந்திருக்கும் அல்லவா?    

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments