மாலைதீவு-இலங்கை இருதரப்பு ஒப்பந்தம் | தினகரன் வாரமஞ்சரி

மாலைதீவு-இலங்கை இருதரப்பு ஒப்பந்தம்

கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப, அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கின்றதென்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் மாலைதீவில் கைது செய்யப்படுகின்ற இலங்கை கடற்றொழிலாளர் விவகாரத்தை இருதரப்பு ஒப்பந்தம் ஊடாகக் கையாள வேண்டுமெனவும் தெரிவித்தார். 

மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஒமர் அப்துல் ரசாக், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அமைச்சரினால் இவ் விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. 

இச்சந்திப்பின்போது மாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் உற்பத்திகளுக்கு இலங்கையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையில், கொவிட் 19காரணமாக அண்மைக் காலமாக இந்த இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கவலை வெளியிட்ட மாலைதீவு தூதுவர், இத் தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்தார். 

அண்மைக்காலமாக இலங்கையில் கடற்றொழில் செயற்பாடுகள், மீன்பிடி இறங்குதுறைகள் விபரங்கள் மற்றும் நீர்வேளாண்மை முன்னேற்றங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்காவிடம் மாலைதீவுத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். 

அத்துடன், கடற்றொழில்சார் விடயங்களில் மாலைதீவின் தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் அனுபங்களை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேபோன்று நீர்வேளாண்மையில் இலங்கையின் அறிவுசார் அனுபங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் பரிமாற்றங்கள் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற வகையில் இக்கருத்தை வரவேற்றார். 

கொவிட் 19காரணமாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள மாலைதீவு கடற்றொழில்சார் உற்பத்திகளின் இறக்குமதிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

Comments