யாழில் நீதிமன்ற தடையையும் மீறி தமிழ் கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

யாழில் நீதிமன்ற தடையையும் மீறி தமிழ் கட்சிகள் உண்ணாவிரத போராட்டம்

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர விதிக்கப்பட்ட தடை உத்தரவைக் கண்டித்து சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு முன்பாக நேற்று காலை 09மணி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டம் நேற்று மாலை 05மணி வரை தொடர்ந்தது. 

அத்துடன் காலை 10.48மணிக்கு திலீபன் மௌனித்த நேரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.  

மேலும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,2020 பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் பிரமுகர்கள் என கட்சி பேதமின்றி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். திடீரென சாவகச்சேரி பகுதியில் இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் வீதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.இதனால் சாவகச்சேரி பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி விசேட நிருபர்  

Comments