கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

‘பொங்கலோ பொங்கல்’ என்று உரத்துக்குரல் எழுப்புவோமே அதுபோல ‘மஞ்சளோ மஞ்சள்’ என்று சத்தம் எழுப்பத் தோன்றுகிறது. ஆனால் கூக்குரல்தான் இடவேண்டும் போலிருக்கிறது.

நிலைமை இடியாப்பச் சிக்கல். இன மத பேதமின்றி மஞ்சள் என்ற பொருள் அனைவர் இல்லத்துச் சமையலறைக்குள் மணம் பரப்பி, மறைமுக மருத்துவத்தூளாக இருந்த காலம் மலையேறிவிட்ட நிலைமை!  

ஏன், நீட்டி முடிக்க வேண்டும். ‘குடு’ என்றும் ‘தூள்’ என்றும் ‘ஐஸ்’ என்றும் போதைப் பொருட்களைக் கைப்பற்றும் கடமையைச் செய்து கொண்டிருந்த நம்ம அரச காவலர்கள் இலங்கைக் கடற்கரைகளில் கிலோ கிலோவாகக் கைப்பற்றிக் கொண்டிருப்பது மகிமை மிகு மஞ்சளைத்தான்! மாதிரிக்கு இரு செய்திகளை படித்துப்பார்ப்போம்.  

520 கிலோகிராம்  மஞ்சளுடன் மூவர் கைது  

மன்னார் முந்தலம்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்ட சுமார் 520கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் முந்தலம்பிட்டி கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போதே, இந்த 520கிலோகிராம் நிறையுடைய 12உலர்ந்த மஞ்சள் பொதிகளோடு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தோடு ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பல்லெமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 22முதல் 55வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அடம்பன் சுகாதார மருத்துவ அதிகாரடம் ஒப்படைக்கப்பட்டனர்.  

இலங்கைச் செய்தி இப்படி என்றால், தமிழக நாளேடுகளில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்.  

* ‘தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு 22மூட்டைகளில் சுமார் 800கிலோ கடல் அட்டைகளையும் 400கிலோ மஞ்சளையும் கடத்த மீனவர் படகுகளில் மறைத்து வைத்திருந்ததைக் கரையோரப் பாதுகாப்புப் பொலிஸ் கண்டு பிடித்தது.  

இந்த இரண்டு செய்திகளும் மிகமிக சமீபத்தியவை.. கடந்த மாதத்திலும் இம்மாத ஆரம்பத்திலும் இன்னும் நிறைய நிறைய.  

இப்படி மஞ்சள் மகிமை தூள் பறக்கிறது. எனக்கு நாகேஸ்வர ராவ் சாவித்திரி நடித்த ‘மஞ்சள் மகிமை’ மனத்திரையில் ஓடுகிறது!  

படம் இருக்கட்டும் இப்போதைக்கு!  

இவ்வாறு கைப்பற்றப்பட்டவை போக. கடல் அம்மா துணையில் கரையைத் தொட்டுத் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த கப்பல்களின் கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் சோதித்து வெளியே அனுப்பியதிலும், 33,000கிலோ மஞ்சளும் 3000கிலோ உளுந்தும் வாகனத் தரிப்பிடமொன்றில் வந்து நின்ற பாரவூர்திகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடந்தையாக இரு சுங்க அதிகாரிகளே இருந்துள்ளது தெரிந்து கைதாகியுள்ளனர். என்ன, ஆண்டவனே, மஞ்சளுக்குப் போன காலம்!  

சுங்கத் திணைக்களத்தின்படி, போதை கடத்தலுக்கு ஏட்டிக்குப் போட்டியாக கடந்த சில மாதங்களில் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் தொகை 1, 015தொன்கள். அதாகப்பட்டது 1, 015 547கிலோக்கள்.  

கடவுளே, கடவுளே! போதைவஸ்துக்களைத் தான் உபயோகத்திற்கு விடாமல் வைக்கலாம். அல்லது அழிக்கலாம்.  

இவ்வளவு தொகை மஞ்சளுக்கும் என்னதான் நடக்கப்போகிறது?  

கசப்பு வில்லைகளை விழுங்க  ஓர் அளவு வேண்டாமா?  

என் பத்தி எழுத்தின் அவல வரிகளுக்கு ஓர் ஆறுதல் செய்தியும் கடைசி நிமிசத்தில் கிடைத்தது.  

சிறுபயிர் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர வயிற்றில் பால் வார்ப்பது போல் ஒரு வார்த்தையை விட்டிருக்கிறார்.  

கைப்பற்றப்பட்ட மஞ்சளை அரசுடமையாக்கி, சதோச, கூட்டுறவு மொத்த விற்பனை’ நிலையங்களுக்கு விநியோகிக்கும் ஒரு யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளார்.  

உடனே முன்வைக்கட்டும். உடலுக்குள் போதிய மஞ்சள்’ தூள் செல்லாமல் கிருமிகள் கூட்டம் கூட்டமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன!  

இனிப்பு 1

இந்தவாரம் இரண்டு இனிப்புகளைத் தந்துவிட தவியாய்த் தவிக்கிறது மனம்! பார்ப்போம்!  

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அறபுமொழியில் வான்புகழ் வள்ளுவரின் ‘குறள்’ குரலாக ஒலிக்கத் தொடங்கிய சங்கதி எத்தனை பேருக்குத் தெரியும்?  

அதுவும், தமிழக அரச அனுசரணையில், சென்னைப் பல்கலைக்கழகம் புரிந்திருக்கும் கைங்கரியம் அத்தனை தூரம் காதுகளில் விழவில்லை என்றே படுகிறது.  

மேற்படி பல்கலைக்கழக அறபுத்துறைப் பேராசிரியர் கலாநிதி ஜாகீர் உசேன் இதைச் செய்திருக்கிறார். இரண்டாண்டு முயற்சியில் முடித்திருக்கிறார்.  

இப்போது இந்த ஆண்டில் முதல் பதிப்பில் சிலவற்றில் மாற்றம் ஏற்படுத்தி மீண்டும் மறுபிரசுரம்!  

முக்கியமான மாற்றம்! அறபுலக வழக்கப்படி, எந்த நூலும் வலது புறத்தில் இருந்து தான் வாசிப்பு அமையும். வலது – இடது முதல் பதிப்பில், இடமிருந்து வலமாக வழக்கமான முறையில் அச்சிடப்பட்டிருந்தது. இரண்டாம் பதிப்பில் மாற்றம்!  

அத்தோடு, ஒரு புறத்தில் திருக்குறளை அறபியில் அச்சிட்டு, மறுபுறத்தில் தமிழ் மொழியிலும் வெளியிட்டிருக்கிறார்கள். ஆஹா! அருமை!  

மேலும், சிற்சில இடங்களில் வார்த்தைப் பிரயோகங்களிலும் மாற்றம் செய்து எளிமையான புதிய வார்த்தைகளை வழங்கி கவர முயற்சி எடுத்திருக்கிறார் பேராசிரியர் ஜாகீர் உசேன்.  

அவர் சொல்லும் அபிப்பிராயம்! ‘தமிழில் உள்ள சில வழக்குச் சொற்களுக்கு அறபு மொழியில் பொருத்தமான சொற்களைத் தேடிப்பிடிப்பதில் கஷ்டப்பட்டேன். எவ்வாறாயினும், திருக்குறள் உலக மக்களை ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக உள்ளது. அதுதான் இன்றைய உலகின் தேவை. நான் உளமார உவந்து செய்திருக்கிறேன்.”  

பேராசிரியர் ஜாகீர் உசேன், தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருது பெற்றுள்ளார். சென்னை கம்பன் கழகம் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. ஓமன் – மஸ்கட் தமிழ்ச் சங்கம், குவைத் பெரியார் நூலகம், குவைத் கொங்கு தமிழ் மன்றம் என’ அறபுப் பிரதேசங்களில் இயங்கும் எம்மவர் அமைப்புகள் அவரை அடையாளங்கண்டு நல்லமுறையில் சிறப்பித்திருக்கின்றன.  

நாமும் பாராட்டுவோம்!  

முன்னொரு சமயம், கண்டிப் பகுதியில் ‘தினகரன்’ நட்சத்திர நிருபர்களுள் ஒருவராக ஜொலித்தவர். ‘ஸ்டார் ராஸிக்’. இவர் இன்று ஆழ்ந்த ஓய்வுறக்கம். ஊடகத்துறைக்கு அவர் விட்டுச் சென்ற ஒரு சொத்து மகனார் றம்ஸி!

‘சமூகச் செயற்பாட்டாளர்’ என்றறியப்பட்டார். முகநூல் பக்கங்களில் கெட்ட - நல்ல சைத்தான்களின் ஊசலாட்டத்திற்கு உள்ளாகியவர். பல வலைத்தளங்கள் வழி பெரும் மிரட்டல்களுக்கு ஆளானார். தன் குடும்பத்திற்கு ஏதாவது ஆகுமோ என்ற அச்சத்தில் காவல் நிலையத்தில் காவல் தேடிப்போக, அவரே சிறைக்கம்பிகளை எண்ண ஆரம்பித்தார்.  

சிறுநீரகப்பாதிப்பு, மூட்டு அழற்சி, ஈரல் பிரச்சினை, கால்காயங்கள் என அவதிப்பட்டவருக்கு இந்தச் சிறை அவதியும் சேர்ந்து கொண்டது.  

ஏப்ரல் 29ல் கூண்டுக்குள் நுழைக்கப்பட்டவர்,. ஐந்து மாதங்களின் பின்னர் இம்மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டு பிள்ளைச் செல்வங்கள் முகங்கள் கண்டு அமைதியும் ஆறுதலும் அடைந்திருக்கிறார்.  

அன்றைய அறேபியப் பாலைவனத்தில் அருமைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மானுக்குப் பிணையாகவும், துணையாகவும் நின்றது வரலாறு.  

அந்தத் தூதரின் வழியைத் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் பாதையிலேயே போய் ‘ஒரு மனிதனுக்குத் துணை நின்று, பிணை பெற உதவி செய்திருப்பது ஒரு வடபுல எம்.ஏ.சுமந்திரன்! அதுவும்! ஒரு செப்புக் காசும் பெறாமல்.  

நாளும் பொழுதும் பிரச்சினைகளில் மூழ்கி, தன் வாக்காள மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதே நடக்கப் பாடுபடும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணியான அவர், கண்டிச் சீமையாளருக்கும் காவல்காரனாக ஆனது வரலாறாகி விட்டது.  

இவருக்கு முன்னும் ஒரு வடபுலத்தவர் வரலாறு படைத்திருக்கிறார். அவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன்.  

அதே கண்டிப்பகுதியில் 1915ல் நடந்த கலவரத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கைதானவர்களை விடுவிப்பதில் முன்னின்றார்.  

உடல் நலம் குன்றிய நிலையில் துணைவியார் தடுத்தும் பொருட்படுத்தாமல், ஓர் அபாயகரமான கப்பல் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து (லண்டன்) சென்று வழக்குறைத்து வெற்றி வீரனாக மீண்ட மனிதர் அவர். அந்தப் பின்னணிச் சரித்திரம் பல நூல்களாகப் பரிணமித்துள்ளன.  

ஆக அன்று ஒரு பொன்னம்பலம் இராமநாதனும் இன்று சுமந்திரனும் தங்களைச் சரியானபடி சமூகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.  

என் பத்தி எழுத்துப் பேனா முனை இந்தளவுக்குத் தான் உழுது நிறுத்த வேண்டியுள்ளது.  

Comments