சந்தோசம் தரும் சைக்கிள்! | தினகரன் வாரமஞ்சரி

சந்தோசம் தரும் சைக்கிள்!

செல்லமுத்து கிருஷ்ணகுமாராகிய கிருஷ்ணாவுக்கு இப்போது நாற்பது வயதாகிறது. மனைவி தேவி. மகன் கோபி. பாவம் கிருஷ்ணா! வீதி விபத்தில்...இறைவன் அவனுடைய ஒரு ‘கரத்தை’ எடுத்தான். அவன் கவலைப்படவில்லை.ஆனாலும் அவனுக்கு வாழ்க்கையில் ஒரு கைதான் எடுத்தான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு கை தான் இருக்கிறது. நம்பிக்கை! வாழ்க்கையிலும் ஒரு கைதானே இருக்கிறது! அவனுடைய தள்ளுவண்டிக் கரத்தைக்கு என்ன பெயர் தெரியுமா...? எஸ்.கே. வண்டி! 

ஞாயிற்றுக்கிழமைகளில்... காலை ஆறு மணிக்கே புறப்பட்டு விடுவான். பாலத்துறையிலிருந்து பொரளையும் தாண்டிப் போய்... பாராளுமன்றம் நோக்கித் தொடரும் பிரதான வீதி ஆரம்பிக்கும் சந்தி வரை... விற்று விட்டு அவன் வீடு வந்து சேரும் போது இரவு ஏழு மணியாகி விடும். இன்றும் அதே! இதோ.... கிருஷ்ணாவின் ‘எஸ்.கே. வண்டி’ இப்போது – ஒறுகொடவத்தைச் சந்தியில் நின்று கொண்டிருக்கிறது! 

உதடு சுடுபட்டது. சூடுபட்டதும், பீடித்துண்டை வீசியெறிந்து, காறித்துப்பி இருமினான். கரத்தையிலிருந்து அந்த சைக்கிளை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டான். 

இன்று காலையிலும் அவனுடன் சைக்கிள் கேட்டுச் சண்டை போட்டுக் கோபித்தழுதான், கோபி. 

சிணுங்கிச் சிவந்த அந்தச் சின்ன முகத்தில் படர்ந்த ஏக்கம்... கிருஷ்ணாவின் இதயத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது. தன்னிலை திட்டி...அவனுக்கவனே பகையானான். ஆனாலும், ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான். 

கவலையோடு வந்தவனுடைய முகத்தில் இப்போதுதான் புன்னகை தவழ்கிறது. சைக்கிள் தந்தவரை வாழ்த்தி அவனது உள்ளம் மகிழ்கிறது.  

‘எவ்ளோ நல்ல மனசு அவரு நல்லா இருக்கணும்...!’ 

காலையில், சாத்திரி ஐயா சொன்னது சரிதான். 

துலாம் ராசிக் காரருக்கு இன்று அதிர்ஷ்ட நாள்தான்!  

சந்தோஷப் பரிசாக இந்த சைக்கிள் கிடைத்திருக்கிறது. பொரளைக் கப்பால் வீடமைப்புத்திட்ட வீடொன்றில்,  

‘இத எடுத்திட்டு எட்டு நூறு ரூபாத்தா’ என்று கேட்ட அந்த ஹாஜியார். இறுதியில், ‘தம்பி இந்த சைக்கிள் எடுத்துக்கோ’ என்று அதை அன்பாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவனுக்கு ஐநூறு ரூபாவும் கொடுத்தார். ‘முன்ரோதய ரிப்பெயார் பண்ணி ஒன்ட மகனுக்குக் குடு’ என்றார். 

மனிதம்! 

அவனது ஆழ்மனதின் பிரார்த்தனை ஆனந்தக் கண்ணீரானது. இனியென்ன இனிவரும் நாட்களெல்லாம்.  

மின்னும் தாரகைகள்... சின்ன மகன் கோபியின் கண்களிலே ஒரு நூறு கனவு வரும். 

                                                **** 

கரத்தை இப்பொழுது களனிப் பாலத்தில்...! 

மகனை மகிழ்ச்சியிலாழ்த்தப் போகிற மகிழ்ச்சியில் பரபரத்தது மனசு. 

ஒற்றைக் கரத்தால் சைக்கிளை ஒரு தரம் தூக்கிப் பார்த்து சந்தோஷித்தான். 

கற்பனைக் கதவோரம் கோபி வந்து நின்றான். 

‘கிருஷ்ணா வந்தாச்சு!’ நடிகர் விக்ரம் மாதிரிச் செய்தான் மிமிக்ரி! 

பதிலுக்கு ‘கோபி வந்தாச்சி’ என்றும் சொல்லிச் சிரித்தான். லூஸுப் பய...  

பிள்ளைகள் ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா’ வாங்கித் தருகிற போது வருகிற சுகமே தனி! 

இதயத்திற்கு சிறகுகள் முளைக்கிற தருணம் அது! தவணை முறையில் வந்து போகிற சொர்க்க நிமிஷங்கள்...! ஏழையாக இருந்தாலும் அப்பாக்கள் அப்பாக்கள் தான்! 

வகுப்பறையில்... டீச்சர் கேட்ட ‘வருங்கால யார் நீ’ என்ற கேள்விக்கு, 

‘நான் இன்ஜினியராகத்தான் வருவேன்’ என்றவன், இன்று இரும்பு விற்கிறதும், 

‘இரும்புக் கடையில் அப்பாவுக்கு உதவியாக நிற்பேன்’ என்றவன், இன்று இன்ஜினியராகி நிற்பதுவும்... கவிஞர் நா. முத்துக்குமாருடைய கவிதையில் மாத்திரம் வந்த கற்பனை மட்டுமல்ல; நிகழ்கால நிஜமும்தான்! 

கிருஷ்ணாவும் இன்ஜினியராக வந்திருப்பான்... அப்பா செல்லமுத்து அகால மரணம் அடையாமல் இருந்திருந்தால். 

இங்கே தலைகீழாகச் சிலருடைய தலையெழுத்து வாசிக்கப்படுகிற போது, அவர்களுடைய வாழ்க்கை குறுக்கெழுத்தாகிப் போய் விடுகிறது. அப்படியா(க்)கப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் குழம்பி வரும் சொற்களே அதிகம். 

மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக... எவர் எப்படி எழுதினாலும் விதியை மாற்றி எழுதவா முடியும்? இறைவன் தீர்ப்பே இறுதியானது. 

தூர இருந்தே தேடியலைந்த அவனுடைய கண்களுக்குத் தென்பட்டது சைக்கிள்கடை. 

இரண்டாயித்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கிய சைக்கிளாம் அது. இரு நூற்றி ஐம்பது ரூபாய்தான் செலவு. திருத்திய பிறகு... முன்ரோதையும் அழகுதான்! 

சைக்கிளும் அழகுதான்! 

அப்போது அவன் மனக்கண்ணில் வந்த முகம் 

அன்பளிப்பாய்ச் சைக்கிள் தந்த அந்த முகம் 

பக்கத்தில் பள்ளிவாசல் 

வாசலுக்கு வந்தான், கிருஷ்ணா 

இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து பள்ளிவாசல் உண்டியலில் போட்டான். 

‘அந்த ஹாஜியாரு நல்லா இருக்கணும்’ 

இறைவனைக் கேட்டான். 

பின்னேரத் தொழுகை அழைப்பு பள்ளியில் கேட்டது. 

‘அல்லாஹு அக்பர்!’ 

**           **           ** 

கேரளா வெள்ளம்... பேரழிவு... 

தொலைக்காட்சியில் செய்திகளாகப் பார்த்த மனிதாபிமானங்கள் 

அந்த மறக்கமுடியாத காட்சிகள்...அவனது ஞாபக விழியோரம்  

தொடர் நிழலாகி நின்றன 

தேவாலயத்தைத் திறந்து தருகிறார் பாதிரியார். 

அங்கே ஒரு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்து மதத்தவர் பள்ளி வாசலில்... 

இஸ்லாமியர் கோயிலில்... 

அகதிகளாய்த் தஞ்சம். 

கீதை, பைபிள், குர்ஆன் எல்லாம் அன்பைத் தானே சொல்கின்றன 

தீதை நாடிப் பாதை மாஜி மனிதம் எங்கே செல்கிறது? 

‘குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாரதிபாடிய பாட்டு வரித் தலைப்பில், பத்தாம் வகுப்பில், கிருஷ்ணா தமிழ்மொழித் தினப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றவன்தான். இளையதம்பி தயானந்தா சேர் எழுதித் தந்த அந்தப் பேச்சை அவன் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றான். 

இனிமையாக இருப்பதனால்தான் தமிழ் இன்னும் மறக்காமல் இருக்கிறது. 

கேரள வெள்ள அனர்த்தங்களும்... சில மனிதாபி மானங்களும் அவன் மனதில்... அழியாத காட்சிகளாய்ப் பதிவான காரணத்தால் மனிதநேய உயர்பண்பைக் கற்றுக் கொண்டான். 

சில்லறைக் கடையோரம் ‘எஸ். கே' வண்டி யை நிறுத்தினான். 

அரிசியலிருந்து சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கினான். 

உழைப்பில் கிடைத்த உணவு. 

தொழில் புருஷ லட்சணம் அல்லவா! 

சில அவலட்சணச் சோம்பேறிகளுக்கு...இவன் ஒரு கையால் தள்ளிக் கொண்டோடி வரும் இந்த ‘வண்டி’ ஒரு பாடம்.  

சாபத்தொடர்களாய்ச் சில பாவப்பட்ட ஜீவன்களும் இரத்தக் கண்ணீர் சிந்தவும் கூடும். பிள்ளைகளைப் பின்தொடரும் சில பெற்றோர்களின் பாவக் கணக்குகள் தீர்க்கப்படும்வரை நியதியின் நியாயங்களை ஏற்றுக்கொண்டு துயர் சுமந்த அந்த இயலாமைகள் வேதாந்தம் பேசும். 

எண்பது காலடிகள் ஒரு நிமிஷ நிதான நடை... என்பது கிருஷ்ணா, நடந்து பார்த்துப்போட்ட கணக்கு. அந்த எண்ணிக்கையையும் தாண்டிவிடாமல்..அதிவேக நடையும், அவன் முணுமுணுக்கும் ஏதாவது ஒரு சினிமாப் பாட்டும். வீட்டுக் கருகில் வந்து விட்டான் என்பதற்கான அடையாளம். பேலியகொட, பழைய பாலம். மேடேறி இறங்கினால் அவனது வீட்டுக்குத் திரும்பும் முன் ஒழுங்கைதான்... பாலத்தொடக்கம் கீழிறங்கும் பள்ளத்துப்படியில்... அடி தடி தடி அடி. 

‘வெறிக்குரலால் தெரு நாறிக் கொண்டிருந்தது. 

‘பொடி லமயாட்ட கஹண்ட எபா அநே...’ 

ஒரு தாயின் ஒப்பாரி. 

தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான் ஒரு சிறுவன். 

விறகுக் கட்டையால் அவனுக்கு அடித்துக் கொண்டிருந்தான் அப்பா. 

‘எய் அம்மே?’ 

சண்டையின் சாராம்சத்தை விசும்பலில் சொல்லி முடித்தாள் அந்த அம்மா. 

இங்கும் ‘சைக்கிள்’ அடம்தான். 

பக்கத்துவீட்டுச் சிறுமியின் சைக்கிளை அவளுடைய சின்னமகன் உடைத்து விட்டானாம். 

இயலாமைகளும்... ஆத்திரங்களும்.. 

சினம் போய்ச் சேருமிடம் பிள்ளைகளின் முதுகுதானோ? சிறுவன் பாவம்... அந்த அம்மேயும் பவ்! 

பெறுவதில் அல்ல; தருவதில்தான் இருக்கிறது சந்தோஷம். 

‘மென்ன மல்லி மே சைக்கிள் ஒயாட்டத் தமாய். என்றான். கிருஷ்ணா. 

சைக்கிளை எடுத்துக் கொள்ளச் சொன்னான். 

முதலில் மறுத்தாள். பின்னர், எடுத்தாள். 

அவனது காலில் விழுந்தாள். ‘அனே ரத்தரங் மஹத்தயோ.’ 

இது உடைந்த சைக்கிள் அல்ல. 

சில உள்ளத்துக் கவலைகளை உடைத்த சைக்கிள். 

கிருஷ்ணாவின் மனத்திரையில் ஒரு குறும்படம் ஓடியது. 

அப்பா வாங்கித்தந்த புதுச்சைக்கிளோடு களனிப் பாலத்தில் 

விழுந்ததும், ‘சேற்றுத் தண்ணி’யுடன் எழுந்ததும், அப்பாவின் அடிகள் முதுகில் விழுந்ததும்... 

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே...  

விழிநீர் துடைத்து, வீட்டுக்குத் திரும்பும் ‘முன் ஒழுங்கை’ முடக்கில் நுழைந்தான், கிருஷ்ணா. 

‘கிருஷ்ணா வந்தாச்சு!’ என்றபடி கோபியைத் தேடினான். 

தேவியையும் காணோம் 

மீண்டும் குரலுயர்த்தினான் 

‘கிருஷ்ணா வந்துட்டேன்!’ 

ஒரு பதிலும் இல்லை 

‘கமலாக்கா... தேவி எங்கே போச்சு...?’ 

‘இப்ப இருந்துச்சே கிருஷ்ணா... எங்க போனீச்சி... நடா கடைய்ல பாத்தியா..’ என்றாள், அடுத்த வீட்டுக் கமலா. வீட்டுக்குப் பின்புறமிருந்து கோபி, சத்தமாகக் கத்தினான். ‘கோபி வந்தாச்சு!’ தொடர்ந்து, ‘தேவி வந்தாச்சு!’ என்றாள் தேவி. ‘குடும்பமே வந்தாச்சு!’ என்றான் கிருஷ்ணா. 

“அப்பா அப்பா... சைக்கிள் கெடச்சிரிச்சப்பா... அப்பா...சூச அங்கிள் வாங்கித் தந்துச்சி... புதுசு’ என்று துள்ளித் துள்ளிக் கூத்தாடினான், கோபி. 

மறைத்து வைத்திருந்த சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வந்தாள். தேவி. ‘அடேய்...கள்ளா... கள்ளிச்சி...’ கன்னங்கள் கிள்ளிச் சிரித்தான் கிருஷ்ணா புத்தம் புதிய சைக்கிள்! 

‘அம்மோவ்... சைக்களத் தாமோவ்’ பாய்ந்தோடி வந்து, முகத்தைப் பெருமையாக வைத்த கோபி, ஸ்டைலாகச் சைக்கிளில் ஏறினான். ‘சூச மாமா வந்தாரு.... சைக்கிள் வாங்கித் தந்தாரு ஹா... டண்டடக்கா டணனனக்கா’.... ஏறியும், இறங்கியும், ஆட்டியும், தள்ளியும், ‘சைக்கிள் டான்ஸ்’ ஆடினான், கோபி. ஆனந்தத்தின் எல்லை! 

கிருஷ்ணா ‘வாங்க நினைத்த’ அதே சைக்கிள். 

ஏழாயிரம் ரூபாய் பெறுமதியான சிகப்புச் சைக்கிள்! 

‘எண்ணங்களை, இதயங்களைப் பார்க்கின்றவன்’ தந்த பரிசெண்ணி மெய்சிலிர்த்துப் போனான் கிருஷ்ணா. 

கடவுள், இறைவன். அல்லாஹ், ஒருவன். 

பெரியவன்! 

தருவோருக்குத் தருகின்றான்! 

‘மேரியும் சூசையும் வந்துச்சுகள்’ என்று சொல்லத் தொடங்கினாள் தேவி. 

‘இப்ப... எங்க இருக்குதுகளாம்?’ கேட்டான் கிருஷ்ணா. ‘பதுளயியலாம். சூச பெரிய பெக்டரீல வேலயாம். மேரியும் காமண்ட் போவுதாம். குடும்பத்தாக்க சேர்த்துக்கிட்டாய்ங்களாம். ஒண்ணும் பிரச்ன இல்லியாம். தம்பியக் கொழும்புக்குக் கூட்டிக்கிட்டுப் போயி.... சூச இத வாங்கிக் குடுத்திச்சி...’ 

அழுத விழி துடைத்து அனைத்தையும் சொல்லி முடித்தாள். அதற்குள்ளே ஆறு வருஷங்கள் ஆயிற்றா? 

மேரியைக் கூட்டிக் கொண்டோடி வந்தான் சூசைதாசன். 

காலப்போக்கில்.... ‘நடந்தே வந்திருக்கலாமோ....’ என்ற உண்மை ஓடிப்போனவர்களுக்கு மாத்திரமே தெரியும். 

நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் என்று சூழ்நிலைக் கைதிகளாகிப் போகிறபோது – தப்பியோட வேண்டித்தான் இருக்கிறது. 

உள் வீட்டு உண்மைகள் வெளியுலகத்திற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. 

மேரியைக் குத்திக் கிழிக்கக் கத்தியை எடுத்துக் கொண்டோடி வந்தான். அவளுடைய மச்சான். 

ஆணும் பெண்ணும் சம்மதிச்சா அதுக்கு மேலே என்னடா பயப்படாமக் கல்யாணத்த நடத்திக் காட்டச் சொல்லடா...’ என்று யார் சொல்லியும் யாருமே கேட்கவில்லை 

மேரியின் மச்சான் ‘கத்தி’ கொண்டு ஓட.... மேரி கத்திக் கொண்டு ஓட.... ஒரே களேபரம்! கலவர நிலவரம்... 

கிருஷ்ணா பாய்ந்தான். 

பாலத்துறைச் சந்தைக்குள் பிடித்த சண்டை பிரதான வீதி வரை நீடித்தது. 

ஆக்ரோஷ அடி பிடி... அல்லோல கல்லோலம்... 

ஆளுக்காள் எறிந்து அல்லோல கல்லோலம் அபாய நிலைமையில் அபயக் குருவிகளாய் மேரியும் சூசையும்... 

‘அடைக்கலம்’ தருவதற்காக.... கிருஷ்ணாவின் பகீரதப் பிரயத்தனப் போராட்டம். 

மாதம்பிட்டி வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டான், கிருஷ்ணா. 

அந்தக் கணம் தான்... 

வாழ்க்...? 

“கை” போயிற்று...! 

கைகொடுத்து வாழ்க்கை கொடுத்தவன் கிருஷ்ணா. இரு வீட்டார் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுத்துச் சமாளித்து பாலத்துறைச் சந்தை நண்பர்களோடு சேர்ந்து, ‘சூசை – மேரி’ திருமணத்தை முடித்து வைத்தான். 

ஆறேழு மாதங்கள் கழித்து 

மேரியின் அம்மாவின் பிரிவோடு...குடும்பங்கள் ஒற்றுமையாயிற்று. ஹற்றனுக்குப் போய்ச் சேர்ந்தார்கள் மேரியும், சூசையும். நாளடைவில்... ஹலோ.... வென்று காதோரம் வந்தவர்கள்... காணாமல் போனார்கள். 

கிருஷ்ணாவிடம் என்வலப் ஒன்றை நீட்டினாள் தேவி, 

‘சூச தந்தான் இந்தா....!’ 

‘என்னாதிது.... லவ்லெட்டரா....என்று சிரித்த கிருஷ்ணா... என் வலப்பைப் பிரித்தான். 

ஐயாயிரம் ரூபாய்கள், ஆறு தாள்கள். ஆறுதல்கள்...! 

‘அநே ரத்தரங் மஹத்தயோ’ 

இறைவனுக்குக் கேட்டிருக்கிறது. 

‘தந்து மகிழ்’ என்ற தத்துவத்தைக் கற்றுத் தந்த அந்த ஹாஜியாரும், ‘மதம் பாராதே.... மனிதம் பார்’ என்ற நேயத்தைக் காண்பித்த அந்த கேரள.... பாதிரியாரும் தன்னை ஆசீர்வதிப்பதாக உணர்ந்தான். ‘தம்பி சூச நல்லா இருப்பேடா... படுவா... பெரிய ஆள்டா நீ...’ கோலெடுத்தழுதான், சூசையும்தான்! 

‘கிணிங்... கிணிங் சைட்சைட் மங்எனவோவ் யண்ட... யண்ட அநே.... அம்மோவ் அங்கிட்டு தள்ளிப்போ...’ புதுச்சைக்கிளோன்’ கோபியின் மிடுக்கு. சைக்கிள் பந்தயத்திடலாயிற்று முன் ஒழுங்கை- முடுக்கு. நிமிஷத்திற்கு கொருதரம் சைக்கிள் மணி ஒலித்துக் கொண்டேயிருந்தது.  

“சூச மாமா வந்தாரு 

சைக்கிள் வாங்கித் தந்தாரு” 

கிருஷ்ணாவுக்கு 

-‘ஆச அப்பா வந்தாரு 

காசப் பார்த்து நொந்தாரு’ என்றுபாட வேண்டும். 

போல் இருந்தது. 

சின்ன மகன் கோபியின் ‘சைக்கிள் ரேஸை’ ரசித்துக் கொண்டே ‘எஸ்.கே. வண்டி’ யிலிருந்து இரும்பு சாமான்களை யெல்லாம் அந்த ‘மூன்று கைகளும்’ வெவ்வேறாகப் பிரிக்கத் தொடங்கின.  

‘சிறிதோய்ந்து...’  

தேநீரோடு வந்தாள் இருகைக்காரி. 

ஆசையாகக் கேட்டாள்: ‘அடேய், பிகில் பார்க்கப் போவோமாடா?” “என்னாமாடா?” சிலேடையாகச் சிரித்தான் கிருஷ்ணா. 

தேவியின் உள்ளார்த்தப் புன்னகை புது உற்சாகம் தந்தது. 

சோர்வுக்கான பரிசு அது! 

இறைவன் மிகவும் நல்லவன். 

பகல் முழுவதும் இரைதேடிப் பறந்து திரிந்து – இரவிலே கூடடையும் பறவைகளைப் போல... 

பகல் முழுவதும் ‘கூவித் திரியும்’ மனிதக் குருவிகள்’ வந்தடைகிற பலகைக் கூடுகளாய் இந்தச் சின்னஞ்சிறிய வீடுகள். மாடிகள் காணாத மகிழ்ச்சிகள். கோடீஸ்வரனுக்கும் கிடைக்காத நிம்மதி! இந்த ‘அன்றாடக் காய்ச்சி’களின் வாழ்க்கை சுகம்! 

‘சூசமேரி எத்தன மணிக்கு வந்தாங்க?’ என்று கேட்டான் கிருஷ்ணா.  

‘ஒரு ரெண்டு மணி போல வந்துச்சுகள் கோபியும் சூசயும் சைக்கிளோட வந்தப்பதான் பள்ளீல அல்லா அக்பர் சொல்லிச்சு...’ என்றாள் தேவி. சினிமாவுக்குச் செல்லும் அவசரத்தில் அவள். 

‘என்னடா இது...?’ ஆச்சரியப் பட்டான் கிருஷ்ணா. 

‘ஏன்டா இது?’ அதிசயப்பட்டாள்,தேவி. 

‘இல்லதேவிமா... பள்ளிவாசல் உண்டியல்ல காசு போட்டன்.. 

அங்கேயும் வாங்கு சொன்னாங்க...’ 

அவன் கண்கள் கலங்கின.   

கிண்ணியா அமீர் அலி

Comments