ஹந்தானை ஐந்தாம் கட்டை தோட்டத்தில் ஒரு அரைகுறை வீடமைப்புத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

ஹந்தானை ஐந்தாம் கட்டை தோட்டத்தில் ஒரு அரைகுறை வீடமைப்புத் திட்டம்

கண்டி ஹந்தானை குறூப் ஐந்தாம் கட்டை தோட்டத்தில் நான்கு வருடங்களுக்கு முன்னர் வீடமைப்புத் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. குறைந்த வருமான, குறைந்த வசதிகள் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுப்பதே இதன் நோக்கம். 24குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வீடுகளும் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகின.

இந்த வீடமைப்புத் திட்டம் ஏனைய வீட்டுத் திட்டங்களை விட சிறப்பு வாய்ந்தது.  தொழிலாளர்கள் தரமான வீடுகளைத் தாமாகவே அமைத்துக் கொள்ளும் திட்டம் இது.  இத்திட்டத்தின் பயனாளிகளாக தமிழ்க் குடும்பங்கள் மட்டுமன்றி  சிங்களக் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.  வீடுகளை அமைக்கத் தெரிவு செய்யப்பட்ட இடமும் சிறப்பானதாகவும் பாதையோரமாகவும் அமைந்திருந்தது.

வீடு ஒன்றை கட்டுவதற்கான நிதியின்    தொகை    ஐந்து இலட்சம் ரூபாவாகும்.   வீடுகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட வரைபடத்திற்கேற்ப அவர்களின் ஆலோசனைப்படி கட்டுமானப் பணிகள்  மேற்கொள்ளப்பட்டன.  

கட்டம் கட்டமாக கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் குறித்த அந்த கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் அடுத்த கட்டத்திற்கான நிதி வழங்கப்படும்.  

இப்படியான சட்டதிட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களுக்கு மேலாகின்றன.  

கடந்த இரண்டு வருடகாலமாக அடுத்த கட்ட கட்டுமான பணிக்கான பணம் கிடைக்கவில்லை. இதனால் கட்டுமான பணிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வீடுகளற்ற வசதிகள் இல்லாதவர்களுக்கு என கட்டப்பட்டுவரும் வீடுகள். இவை ஏன் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தமக்கு தெரியாது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.  

தமது வீடுகள் விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என ஆடு மாடுகளை விற்று நகைகளை அடகு வைத்தும் விற்றும் ஏன் வட்டிக்கு பணம் வாங்கியும் இந்த கட்டுமான பணிகளை முன்னெடுத்துள்ளனர்.  

இநத வீடுகட்டும் முறை ஏனைய வீட்டுத்திட்டங்களைவிட சிறப்பு கொண்டது. தொழிலாளர்கள் தாமாக தரமாக வீடுகளை அமைத்து கொள்ளக்கூடியதாக உள்ளது.   இந்த வீட்டுத்திட்டத்தில் உள்ள இருபத்தி நான்கு குடியிருப்புகளில் தமிழ் சிங்கள தொழிலாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த இடம் பாதையோரமாகவும் சிறப்பானதாகவும் உள்ளது.  

ஆர். நவராஜா

Comments