20 ஆவது திருத்தம்; எதிரான மனுக்கள் மீதான விசாரணை நாளை 5ஆம் திகதி | தினகரன் வாரமஞ்சரி

20 ஆவது திருத்தம்; எதிரான மனுக்கள் மீதான விசாரணை நாளை 5ஆம் திகதி

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணை நாளை 05ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரதம நீதியரசர்  ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையிலேயே மேற்படி மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

கடந்த 02ஆம் திகதி மேற்படி மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது 39மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதனையடுத்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் அரசாங்கத்தினால் தன்னிச்சையாக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலே நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்ட அவர் அவ்வாறிருக்கையில் தற்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு க்காக விடப்பட வேண்டுமென்பது தர்க்கரீதியானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அப்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தற்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பிலும் அதே நடைமுறையை பின்பற்றலாம் என்பதையும் ஜனாதிபதி சட்டத்தரணி மாரப்பன சுட்டிக்காட்டியுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments