மலையக கல்வி அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் ஜனாதிபதி | தினகரன் வாரமஞ்சரி

மலையக கல்வி அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் ஜனாதிபதி

பெருந்தோட்டப் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டபோது காணப்பட்ட அதே நிலையே இன்னும் பறைசாற்றி நிற்கின்றது. பெளதீக ரீதியிலான வள அதிகரிப்பில் பாரிய புறக்கணிப்புகள் இருப்பதையே இது உணர்த்துகின்றது. தேசிய ரீதியிலான கல்வி கொள்கைக்கு மேலதிகமாக மலையகக் கல்வி அபிவிருத்திக்கென சிறப்பு ஏற்பாடுகள் அவசியம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஹப்புத்தளை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். அவரது பார்வையில் ஹப்புத்தளை தமிழ் மத்தியக் கல்லூரியும் பதிவானது. அதன் பேறாக இதனை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அறிவித்திருக்கிறார்.

உண்மையில் இது அவசியமான ஒரு காரியம். தேசிய ரீதியில் சுகாதாரத் துறையைப் போலவே கல்வித்துறையும் தென்கிழக்கு ஆசியவிலேயே முதன்மை நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ள பெருமை இலங்கைக்கு இருக்கிறது. ஆனால் மலையகத்தை பொறுத்தவரை இவ்விரு  துறைகளுமே பின்னடைந்து காணப்படுகின்றது. கொரோனா தொற்றால் நாடே முடக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான பெருந்தோட்டங்கள் நோய் தொற்று அச்சுறுத்தலையும் மீறி இயங்கின.  

அதிர்ஷ்டவசமாக கொரோனா  தொற்று ஏற்படவில்லை. அப்படி நடந்திருந்தால் வைத்தியசாலை வசதி கிடைத்திருக்காது. தனிமைப்படுத்தலுக்கு பெரும் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும். சுருக்கமாக சொல்வதாயின் மலையகத்தில் சுகாதார நிலைமை பெரும் சவாலையே எதிர்நோக்கியிருக்கும்.  

இதே போலதான் கல்வி நிலைமையும். கொரோனா முடக்கத்தால் சுமார் 43இலட்சம் மாணவர்கள் வீடுகளுக்குள்ளிருந்தே தமது படிப்பைத் தொடர வேண்டி நேர்ந்தது.

இதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவ்வாறான ஏற்பாடுகளுக்கான வாய்ப்பு எத்தனை மலையக மாணவர்களுக்கு கிடைத்ததென்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.  

நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தக்கூடிய அளவு பொருளாதார வசதி மலையக பெற்றோரிடம் இல்லை. இதனால்தான் கல்வியில் சமநிலை பேணல் இங்கு சாத்தியமாகாமலே போகின்றது. இதற்கு அடிப்படை காரணம் என்ன?  

பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கான கல்வி சம்பந்தமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு வரலாற்று ரீதியாக அதற்கான பொறுப்பை பெருந்தோட்ட முகாமைத்துவமே ஏற்றுக்கொண்டிருந்தது. பிரித்தானிய அரசாங்கம் ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளை அறிமுகப்படுத்தியதன் பின்னர் கட்டணமுறை நடைமுறைக்கு வந்தது. இது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வசப்படுத்த முடியுமாயிருந்தது. இதனால் பெருந்தோட்ட சமூகம் அந்த வாய்ப்பை அடைய முடியவில்லை.  

1820இல் தோட்டப் பகுதிகளில் கட்டாயக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1939களில் தோட்டப் பாடசாலைகளின் பாடத்திட்டம் சுதேச கல்விக்கு அப்பாலும் நடத்தக்கூடிய சட்டம் இயற்றப்பட்டது. 1832ஆம் ஆண்டு கோல்புறூக் சிபார்சு செய்த கல்வி முறைமையால் பெருந்தோட்டப் பிள்ளைகள் எதுவித நன்மைகளையும் பெறவில்லை என்பது ஆய்வாளர்களின் அபிப்பிராயம். ஏனெனில் ஏட்டளவில் திட்டங்கள் இருந்தாலும் தோட்டப்புற பிள்ளைகளை உள்ளீர்க்கும்படியாக அமையாமல் போனமை துரதிர்ஸ்டமே. தோட்ட முகாமைத்துவங்கள் தோட்டப் பிள்ளைகளுக்கு கல்வி என்னும் கொள்கையை ஆபத்தான விடயமாகவே கருதினர். அவர்களைப் பொறுத்தவரை சிந்திக்கத் தெரியாத தலைமுறையே தமது தொழிலை முன்னெடுக்க உதவியாக இருக்கும் என்ற கருதுகோள் இருந்திருக்கலாம். இக்காலகட்டத்தில் தோட்டக்கட்டமைப்பின் பொறுப்பில் இல்லாத வேறு பாடசாலைகளும் இங்கு ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான பாடசாலைகளை கிறிஸ்தவ மிஷனரிகளே நடத்தின. இவர்களின் நோக்கம் மதத்தை பரப்புவதேயாகும்.  

இதேவேளை இந்து சமயம் சார்ந்த நிறுவனங்கள், எச்சமயமும் சாராத தனியார் அமைப்புகள் பாடசாலைகளை அமைக்க தலைப்பட்டன. பாடசாலைகள் பெருமளவில் ஆரம்பித்தாலும் அதனால் பெருந்தோட்ட சமூகம் உரிய பயனை அடையவில்லை. தோட்டப் பாடசாலைகள் யாவும் அரசுடமையாக்கப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்துச் சமூகத்துக்கும் பொதுவான தேசிய கல்விக் கொள்கைக்கூடான வரப்பிரசாதங்களை பெருந்தோட்டப் பிள்ளைகளும் பெறவேண்டும் என்னும் கோரிக்கை மலையகத்தில் கற்ற சமூகத்தினால் அடிக்கடி எழுப்பப்பட்டது. எனினும் 1972வரை இதுபற்றி எந்தவொரு அரசாங்கமும் கரிசனை கொள்ளவில்லை. தோட்டங்களை நிர்வாகம் செய்த அந்நிய முகாமைத்துவங்களும் இதற்கு ஆதரவுதர முன்வரவில்லை. எனினும் 1972களில் பெருந்தோட்டங்களை வெளிநாட்டுக் கம்பனிகளிடம் இருந்து ஸ்ரீமாவோ அரசாங்கம் சுவீகரித்தது.  

1947இல் நாடு சுதந்திரமடைந்தது. அக்காலகட்டத்தில் காலனித்துவ கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு தேசியக் கல்விக் கொள்கையொன்று உருவாக்கம் பெற்றது. ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கான கல்வி இதனுடன் இணைக்கப்படவில்லை. தோட்டப்பாடசாலைகள் என்ற முத்திரையின் கீழ் தொடர்ந்தும் அப்பாடசாலைகள் தோட்ட முகாமைத்துவத்தின் பொறுப்பிலேயே இயங்கி வந்தன. அதே நேரம் அரச மானியங்களும் கிடைத்தன. இவற்றில் 350பாடசாலைகள் 1981இல் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. இவ்வாறு மொத்தமாக சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 845ஆகும். 2002ஆம் ஆண்டளவில் 945ஆக பாடசாலைகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. அதேநேரம் 563பாடசாலைகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் (சுவீடன்) அபிவிருத்தி கண்டன.  

ஆனால் 55வருடங்களாக இலவசக் கல்வியை அனுபவித்துக் கொண்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிற சமூக மாணவர்கள் பெற்றிருக்கும் அபிவிருத்தியைப் பெருந்தோட்டப் பிள்ளைகள் பெறமுடியாத தொய்வு நிலை இன்னும் நீட்சிபெற்றுள்ளது. இதற்கான காரணம் மலையக பாட சாலைகளை இன்றும் கூட தோட்டப் பாடசாலைகளாகவே எடைபோடும் கல்வி துறைச்சார் அதிகாரிகள் இருப்பதேயாகும்.  

1972க்குப் பின் அனைத்து தோட்டப் பாடசலைகளும் அரசுடைமையாக்கப்பட்டு அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு பெருந்தோட்டப் பாடசாலை பிரிவொன்று இயங்கி வருகின்றது.

இருந்தும் தேசிய ரீதியாக வளங்கள் பெற்றுக் கொடுக்கும் போது விகிதாசார நிலையில் பகிரப்படுவது இல்லை என்பது நெடுநாளைய குற்றச்சாட்டு. மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு பாதகம் இழைக்கப்படுகின்றது. ஒரு கல்வி வலயத்தில் தமிழ் மொழி மூலமான 75சதவீத பாடசாலைகளும் சிங்கள மொழி மூலமான 25சதவீத பாடசாலைகளும் இயங்கும் பட்சத்தில் வளங்கள் பகிர்வின்போது 25சதவீத சிங்களப் பாடசாலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதே நடைமுறையில் உள்ளது. சில பெருந்தோட்டப் பாடசாலைகள் மூடப்படும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஓர் அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருந்தது.   பொதுவாக பெருந்தோட்டப் பாடசாலைகள் வளப்பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. இது பெருந்தோட்டப் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டபோது காணப்பட்ட அதே நிலையே இன்னும் பறைசாற்றி நிற்கின்றது. பெளதீக ரீதியிலான வள அதிகரிப்பில் பாரிய புறக்கணிப்புகள் இருப்பதையே இது உணர்த்துகின்றது. தேசிய ரீதியிலான கல்வி கொள்கைக்கு மேலதிகமாக மலையகக் கல்வி அபிவிருத்திக்கென சிறப்பு ஏற்பாடுகள் அவசியம் என்பதை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது என்பதே புத்திஜீவிகளின் பார்வை. 1947ஆம் ஆண்டு மலையக கல்வி மேம்பாடு கருதியதான ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தோட்ட உரிமையாளர் தொழிலாளர் பிள்ளைகள் கல்வி கற்பதற்கான ஒரு தரமான கட்டிடத்தை வழங்குதல், தலைமை ஆசிரியருக்கான விடுதி, பாடசாலையை சூழவுள்ள பகுதியில் பிள்ளைகள் விளையாடுவதற்கும் பாடசாலை தோட்டத்திற்குமாக ஒரு ஏக்கருக்கு குறையாத காணி ஒதுக்கிடல் என அதில் உருப்படியான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

பன். பாலா 

Comments