கொவிட் 19 வைரஸ் தொற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களும்! | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் 19 வைரஸ் தொற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களும்!

கொவிட் 19 நோய் தொற்று பரவலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குத் துரிதமாக நடவடிக்கை எடுத்த நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு முதன்மையான ஓர் இடம் உண்டு. உலக சுகாதார ஸ்தாபனம்கூட இலங்கையின் நடவடிக்ைககளைப் பாராட்டியிருந்தது.

இந்தப் பாராட்டுகளில் மகிழ்ந்து மூழ்கியிருந்த நமக்கு இப்போது பாதகமான பலன்கள் தென்படத்தொடங்கியிருப்பது மனத்தைப் பிழியும் வேதனையாக இருக்கிறது. சிலவேளை, நாம் நம்மீது அதீத நம்பிக்ைக கொண்டுவிட்டோமோ! என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

உலகம் முழுவதும் கொவிட் 19 தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், எதுவுமே நடக்காததைப்போன்று எல்லாவற்றையும் மறந்துவிட்டுச் செயற்பட்டதன் விளைவுதானோ இது? என்று புலம்பும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது இந்தக் கொரோனா வைரஸ்.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அரசாங்கம் ஜனவரி முதல் பின்பற்றிய வழிமுறைகளின் மூலம் நோய் நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்கு முடியுமாகவிருந்தது. வைரஸ் பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகித்தது. அம்முன்னேற்றத்தை மேலும் அதிகப்படுத்தி மக்களின் சுகாதார நிலையைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இயலுமானளவில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தனர்.

கொவிட் 19 நாட்டினுள் பரவுவதைத் தடுப்பதற்கு மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், விழாக்களை இயலுமானளவு குறைத்துக்கொள்வதற்கு அப்போது தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா தடுப்புச் செயலணிக்கு நிலையான அலுவலகமொன்றை ஸ்தாபித்து தகவல்களை ஒன்றுசேர்த்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். நோயைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை துரிதப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் உதவிகளுடன் பரிசோதனை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இலங்கையில் நோய் பரவுவதைத் தடுப்பதற்கு மேற்கொண்ட வழிமுறைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க உலக சுகாதார அமைப்பு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

முகக் கவசங்களை எந்தவொரு இடத்திலும் பெற்றுக்கொள்ளும் வகையில் முறையாக விநியோகிப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்னெடுப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு விலையின் கீழ் எந்தவொரு நபருக்கும் முகக் கவசத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முகக் கவசங்களை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை கொண்ட நிறுவனங்கள் இனங்காணப்பட்டும் இருந்தன.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து மற்றும் புகையிரதங்கள் கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். அதற்காகப் பாதுகாப்புப் பிரிவினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சீனாவில்கூடத் தற்போது மிகச் சிறப்பாகக் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை நோய்த் தடுப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க சீனா முக்கியத்துவம் கொடுத்தது. அந்நாடு பின்பற்றிய வழிமுறைகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியே உலகின் பல்வேறு நாடுகளும் கொரோன தடுப்பு நடவடிக்ைககளை முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

அரச நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை முன்னெடுத்தல், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக வீட்டிலிருந்து செயற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை எல்லாம் இரண்டே இரண்டு மாதங்களில் மறந்துவிட்டிருக்கின்றோம். இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் நோய் பற்றி மக்களைத் தெளிவுபடுத்த வேண்டுமே தவிர சமூகத்தில் குழப்ப நிலையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படாதிருத்தலின் முக்கியத்துவம் பற்றியும் இங்கு வலியுறுத்த வேண்டும். அந்த இரண்டுமாதகால அலட்சியப்போக்ேக இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இரண்டு மாதங்களின் பின்னர் திடீரென ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவருக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து பல இடங்களிலும் பலர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. என்றாலும், இன்னமும் சமூகத் தொற்றாக மாற்றம்பெறவில்லை என்கிறார்கள் சுகாதார அதிகாரிகள். இருப்பினும், நாம் மேற்சொன்ன வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய நடவடிக்ைக எடுக்க வேண்டியது கட்டாயம். அப்போதுதான் இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். சில மருத்து நிபுணர்கள் சொல்வதைப்போன்று இந்தியா போன்று இலங்கையிலும் ஒரு நிலைமை உருவாகுமாக இருந்தால், நம்மால் தாங்கிக்ெகாள்ள முடியாது. ஏற்கனவே மேற்கொண்ட முழு முடக்கத்தால், பொருளாதார ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே, மற்றுமொரு முடக்க நிலை வந்தாலும் அரசாங்கத்திடமிருந்து பொருளாதார ரீதியான உதவிகளை எதிர்பார்ப்பது உசிதமாகாது.

ஆகவே, நம்மை நாமே இந்த நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்ெகாள்வதற்குப் பொறுப்பேற்றுக்ெகாள்வதே சிறந்தது.

இன்றைய தினம் நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையின்போதும் நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சையின்போதும் அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்!

அத்தோடு நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புதைத் தவிர்த்துக்ெகாள்வதும் பொதுமக்களுக்குச் செய்யும் உபகாரமாகவும் இருக்கும்!

Comments