இரண்டாவது முடக்கம் நாட்டை பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கும் | தினகரன் வாரமஞ்சரி

இரண்டாவது முடக்கம் நாட்டை பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கும்

இப்போதும் கூட முகக் கவசங்களை மூக்குக்கு கீழும் நாடியிலும் போட்டுக்கொண்டு திரிபவர்களையும் சமூக இடைவெளியைப் பேணாமல் காதுக்குள் மூச்சுவிட்டுத் திரிபவர்களையும் காணமுடிகிறது'

இலங்கையில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகலாம் என சுகாதாரத் தரப்பினர் அடிக்கடி விடுத்த எச்சரிக்கை உண்மையாக மாறியிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் சுற்றுலாத்துறை கொரோனாவால் மரண அடி வாங்கியுள்ள நிலையில் இப்போது ஏற்றுமதி வருவாயின் பெரும்பகுதிக்கு பங்களிப்புச் செய்யும் ஆடை தயாரிப்புத் துறையில் கொரோனாவின் இந்த இரண்டாம் அலைக்கான புதிய கொத்தணி உருவாகியுள்ளமை பொருளாதார ரீதியில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

மினுவங்கொட பகுதியில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதிலும் தற்போது சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஏனைய சில நிறுவன ஊழியர்களும் நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாகவும் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. அத்துடன் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் பலருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் ஏற்படாத நிலையில் பீசிஆர் பரிசோதனைகளின்போது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.

ஏனெனில் நோய் அறிகுறிகள் இல்லாத நிலையில் ஒருவர் சமூகத்திற்குள் நோய்க்காவியாக நெடுந்துாரம் செல்லமுடியும். அத்துடன் மினுவங்கொட கொத்தணியில் இனங்காணப்பட்ட நோயாளிகளின் குருதி மாதிரிகளில் நோய்க்காரணியாகிய கொரோனா வைரசின் செறிவு அதிகளவில் காணப்படுவதாகவும் சுகாதாரத்தரப்பு கூறுகிறது. இது நோய் பரப்பப்படும் வீச்சும் உயர்வாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாடுபூராகவும் சந்தேகத்திற்கு இடமான 8000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. சமூக ரீதியிலான நோய்ப்பரம்பல் எந்தளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதை அடுத்துவரும் இருவார காலப்பகுதியில் அறிந்து கொள்ளமுடியும்.

அதுவரையில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் மிக மந்தகதியிலேயே இடம் பெறமுடியும். முதலாவது அலையின் போது மிகச்சிறிய எண்ணிக்கை உடனடியாக பொருளாதாரத்தை முடக்கி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்திய அரசாங்கம் இம்முறை முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையினைக் கையாள்வதுபோலத் தெரிகிறது. ஒருசில நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் முழுமையான ஒரு முடக்கத்திற்குச் செல்லாமல் அடையாளங்காணப்பட்ட பகுதிகளில் மட்டும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளமைக்கு அநேகமாக பொருளாதாரக் காரணிகளே பின்னணியில் இருந்திருக்கக் கூடும்.

அத்துடன் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இரு பாடசாலைப் பரீட்சைகளையும் நடாத்த எடுத்திருக்கும் முடிவும் நோய்த்தொற்றை வெற்றிகரமாகக் கையாளமுடியும் என்ற அதன் நம்பிக்கையின் வெளிப்பாடாகவே கருதலாம். கொரோனா நோய் சம்பந்தமாக இதுவரை உலக நாடுகளின் அனுபவங்களை அவதானிக்கும் போது பல நாடுகள் நோய்த்தாக்கத்தின் இரண்டாவது அலை ஒன்று உருவாகியபோதுதான் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன.

இந்த அனுபவங்கள் குறித்து உரிய தரப்பினர் கவனத்திற் கொண்டிருப்பார்கள் என நம்புகிறோம். இப்போது இந்த இரண்டாம் அலையைக் கையாள ஒருங்கிணைந்த நடவடிக்கைப் பிரிவு தாபிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. நோயைக் கையாள உரிய உட்கட்டுமான வசதிகளும் அனுபவமிக்க பணியாளர்களும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் இதுவரை 4523 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 3296 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால் நோயாளர்களின் எண்ணிக்கை குறுகியகாலத்தில் துரிதமாக அதிகரிக்குமாயின் நிச்சயமாக அதனைக் கையாளுமளவிற்கு போதிய வசதிகள் இல்லை என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இதுவரையில் இந்நோயை வெற்றிகரமாகக் கையாண்ட அனுபவம் இலங்கைக்கு உண்டு. நோயைக் கையாள்வதில் இலங்கையின் அனுபவம் சர்வதேச ரீதியில் பலராலும் சிலாகித்துப் பேசப்படுகிறது. எனவே மிகுந்த அவதானத்துடன் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அசட்டுத் துணிச்சலுடன் எடுக்கப்படும் முடிவுகள் இதுவரை சாதித்தவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடக்கூடும்.

நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அதற்கான ஒத்துழைப்பு மிகவும் குறைவாக உள்ளமை மிகமோசமான ஒரு நிலைமையாகும். குறிப்பாக, மினுவங்கொட சம்பவத்தில் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் தாம் சந்தித்தவர்கள் தம்மைச் சந்தித்தவர்கள் போன்ற தகவல்களை உரிய தரப்பினர்களுக்கு வழங்குவதில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி சுகாதாரத் தரப்பினர் நோய் பரவாமல் தடுப்பதற்கு பரிந்துரை செய்துள்ள சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் விட்டேத்தியாகச் செயற்படுவதையும் நாடுபூராகவும் அவதானிக்க முடிகிறது.

இப்போதும் கூட முகக் கவசங்களை மூக்குக்கு கீழும் நாடியிலும் போட்டுக்கொண்டு திரிபவர்களையும் சமூக இடைவெளியைப் பேணாமல் காதுக்குள் மூச்சுவிட்டுத் திரிபவர்களையும் காணமுடியும்.

குறிப்பாக நாட்டின் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசம் அணிவதுபோன்ற அத்தியாவசிய தற்காப்பு நடைமுறைகளைக்கூட மாணவர்கள் பெரும்பாலானோர் பின்பற்றவில்லை. உரிய அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் இந்தநோயின் உண்மையான வீரியத்தை இலங்கையர்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இப்போது ஏற்பட்டுள்ள இரண்டாம் அலையின் போது பொறுப்புள்ள பிரசையாக ஒவ்வொருவரும் நடந்து கொள்ளாவிட்டால் சமூகத்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாததோடு அப்படி ஏற்படுமாயின் அத்தனை நோயாளர்களையும் கையாளமுடியாத சூழலில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

பொருளாதார ரீதியில் நாளாந்த வருமானம் ஈட்டும் மக்களின் நிலை மிகமோசமானதாக மாறலாம். முதலாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மெதுவாக சற்று எழும்ப எத்தனிக்கும்போது இப்போது இந்த இரண்டாவது அடி விழுந்துள்ளது. எனவே நாடு பூராகவும் முடக்க நிலையை ஏற்படுத்தி மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாமல் நிலைமையைக் கையாள அரசாங்கம் முனைவது தெரிகிறது.

உலகின் பல்வேறு நாடுகள் கோரோனாவுடன் வாழப்பழக்கப்பட்டு விட்டன. பொருளாதார நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நோயைக் கையாளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

நமது அண்டை நாடான இந்தியாவிலும் அண்மைக்காலத்தில் நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்தது. ஆயினும் நாட்டை முழுமையான முடக்கநிலைக்கு கொண்டு செல்லாமல் நிலைமையைக் கையாள முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை முற்றாக முடக்குவது விவேகமான ஒரு செயலாக அமையாது. அதேவேளை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அனுமதிப்பதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான ஒரு புறச்சூழலில் சீனாவிலிருந்து ஒரு உயர்மட்டத் தூதுக்குழு இலங்கை வந்து சென்றிருக்கிறது. இதன் மூலம் இரண்டு முக்கிய செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

சர்வதேச அரங்கில் ஐக்கிய நாடுகளிலும் மனித உரிமை தொடர்பான விவகாரங்களிலும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவதிலும் சீனா இலங்கைக்கு உதவுமென்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரு விடயங்களிலும் சீனாவின் ஈடுபாடு ஏற்கனவே இருந்துவருவது தெரிந்த விடயம் தான்.

இலங்கையின் கட்டுமானங்கள் பெரும்பாலும் சீனாவினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாத் தொற்றின் தாயகம் சீனாதான்.

இலங்கையில் தற்போது உருவாகியுள்ள இரண்டாம் கட்ட கொரோனாத் தொற்று ஏற்படுவதைக் தடுக்க சீனா இலங்கைக்கு பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் ஆக்கபூர்வமாக உதவலாமே? மறுபுறம் சிலுக்குச் சீனாவின் இந்த நெருக்கத்தை நமது பெரியண்ணன் இந்தியா எவ்வாறு பார்க்க விரும்புகிறது? எதிர்வரும் நாட்களில் செய்திகளுக்குப் பஞ்சமிருக்காது போலத் தோன்றுகிறது.

கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பே மிகமிக அவசியம்• நோயைக் கையாள்வதில் இலங்கையின் அனுபவம் சர்வதேச ரீதியில் பலராலும் சிலாகித்துப் பேசப்படுகிறது. எனவே மிகுந்த அவதானத்துடன் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அசட்டுத் துணிச்சலுடன் எடுக்கப்படும் முடிவுகள் இதுவரை சாதித்தவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடக்கூடும் •

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments