இன்று தரம் 5 புலமைப் பரீட்சை; நாளை க.பொ.த உ/த ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இன்று தரம் 5 புலமைப் பரீட்சை; நாளை க.பொ.த உ/த ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமைகளை உணர்ந்து நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் இன்று நடைபெறும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு, சுகாதாரப் பிரிவினர், பொலிஸார், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உட்பட பல்துறையினர் பூரண ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு பரீட்சை மத்திய நிலையத்தில் 160 மாணவர்கள்தான் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களில் சென்று கல்வி பயின்ற மாணவர்களின் சுகாதார நன்மையை கருத்திற்கொண்டு அவர்களுக்கு அருகாமையிலுள்ள பொலிஸ் பிரிவுகளிலேயே விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு மாவட்டங்களில் இருந்து கம்பஹா மாட்டத்தில் கல்வி பயின்றவர்களுக்கும் விசேட ஏற்பாடுகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களை போன்று புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் இவ்வாறு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தொற்று நீக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் கனேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு புளுகஹாகொட ஸ்ரீ விஜய மகா வித்தியாலயத்திலும், யக்கல,கம்பஹா, வீரகுல பொலிஸ் எல்லை பிரதேசங்களுக்கு உட்பட மாணவர்களுக்கு மிரிஸ்வத்த கெப்பட்டிபொல மகா வித்தியாலயத்திலும், கிரிந்திவெல பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கிரிந்திவெல மகா வித்தியாலயத்திலும், வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாணவர்களுக்கு வெலிவேரிய மத்தும பண்டார மகா வித்தியாலயத்திலும், தொம்பே, பூகொட பொலிஸ் எல்லைக்கு உட்பட மாணவர்களுக்கு சியனூ தேசிய பாடசாலையிலும், நிட்டம்புவ, வெயங்கொடை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிட்டம்புவ பௌத்த வித்தியாலயத்திலும், மீரிகொட, பல்லேவெல பகுதி மாணவர்களுக்கு கல்ஹெலிய ஸ்ரீ விஜயகீர்த்தி ஆரம்ப பாடசாலையிலும் மினுவாங்கொட பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாணவர்களுக்கு கொட்டுகொட ருவுனு வித்தியாலயத்திலும், திவுலுப்பிட்டிய பகுதி மாணவர்களுக்கு துனகா ரணசிங்க மகா வித்தியாலயத்திலும், சீதுவ பகுதி மாணவர்களுக்கு முகலன்கமுவ பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்திலும், ஜாஎல, கந்தான பகுதி மாணவர்களுக்கு தெஹியாகாத ஹோலி ரோசரி வித்தியாலயத்திலும், களனி பகுதி மாணவர்களுக்கு கிரில்லவெல்ல மத்திய மகா வித்தியாலயத்திலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று நடைபெறும் 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக இன்று காலை 9 மணிக்கு பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும். இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காகவும் விசேட அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக இந்த பரீட்சை ஆரம்பமாகவுள்ள தினத்தன்று காலை 7.30 மணி அளவில் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும்.

இடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோருக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன், உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் ஏனைய விடயங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவவலக தொலைபேசி இலக்கமான 0112785211 / 0112785212 இற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்துக்கொள்ள முடியும். பாதுகாப்பு தொடர்பிலான தகவல்களை 0112421111 / 19 என்ற பொலிஸ் தலைமையகத்தின் இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments