கொவிட் 19 வைரஸ்; கொத்தணி தொற்று 1083 | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் 19 வைரஸ்; கொத்தணி தொற்று 1083

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்று அதிகாலை வரையான 24 மணி நேரத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இவர்களில் ஐந்து (5) பேர் வெளிநாடுகளிலிருந்து  வந்துள்ளவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்துள்ள இருவரும், இந்திய பிரஜைகள் இருவரும் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 24 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களாகும். 03 பேர் தொழிற்சாலை ஊழியர்களாகும். ஏனைய மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

நேற்று அதிகாலை வரை மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் 1,083 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

50,364 பேர் இதுவரை இலங்கையில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 10,181 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 3,19,146 பி.சீ.ஆர். பரிசோதனைகள் இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments