மாணவரின் சுகாதார பாதுகாப்புக்கு 7 ஆயிரம் பொலிசார் பணியில் | தினகரன் வாரமஞ்சரி

மாணவரின் சுகாதார பாதுகாப்புக்கு 7 ஆயிரம் பொலிசார் பணியில்

க.பொ.த உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் சுமார் 7,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகத் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்குநேர அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடத்தப்படுவது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் உயர்தர மற்றும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படவிருக்கின்றன. ஏனைய சந்தர்ப்பங்களை விடவும் இது விடயத்தில் பொலிஸாரின் உயர் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

பரீட்சை மத்திய நிலையங்கள், பரீட்சை தொடர்புபடுத்தல் நிலையங்கள் மற்றும் பரீட்சை வினாத்தாள்களை ஒன்று சேர்க்கும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 7,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Comments