யாழ். பல்கலைக்கழக மோதல் விவகாரம்; 21 மாணவர்களுக்கு வகுப்பு தடை விசாரணைக்கு தனிநபர் ஆயம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ். பல்கலைக்கழக மோதல் விவகாரம்; 21 மாணவர்களுக்கு வகுப்பு தடை விசாரணைக்கு தனிநபர் ஆயம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காகத் தனிநபர் விசாரணை ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

விசேட பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை கூடியபோதே யாழ். பல்கலைக்கழக முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் எம். நடராஜசுந்தரம் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 08 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, அந்தப் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கலைப்பீடச் சபையால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் ஈடுபட்டு, பல்கலைக்கழகத்துக்கும், துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாதென்றும் கலைப்பீடச் சபை

ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதுடன், மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களென கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான தடையுத்தரவுக் கடிதம் (09)இரவு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் வழங்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய - காணொலி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாமென்று பல்கலைக்கழக வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

Comments