தமிழரின் அரசியல் வரலாற்றின் வழியே புதியனவற்றை நோக்கி நகர்தல் | தினகரன் வாரமஞ்சரி

தமிழரின் அரசியல் வரலாற்றின் வழியே புதியனவற்றை நோக்கி நகர்தல்

இலங்கையில் தமிழரின் அரசியல் எதிர்நோக்கியிருக்கும் சவால் என்பது, எது சரியான அரசியல் கொள்கை? எது சரியான – பொருத்தமான வழிமுறை? அதாவது கொண்டிருக்கும் கொள்கையை வெற்றி கொள்வதற்குரிய யதார்த்தமான நடைமுறை என்ன? அரசாங்கத்தையும் வெளியுலகத்தையும் ஆட்சிக்குரிய அதிகாரத்தை வழங்கும் சிங்கள மக்களையும் கையாளக்கூடிய ஆற்றலுள்ளவர் யார்? அந்த வகையில் யார் சரியான தலைமை எது? அல்லது எந்த அணி இதற்குப் பொருத்தமானது? தகுதியுடையது? என்ற கேள்விகளைக் கொண்டிருப்பதாகும்.

தமிழர்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு வடக்கிலும் கிழக்கிலும் பல கட்சிகள் உள்ளன. ஏராளமான தலைவர்களும் (ஆட்களும்) உள்ளனர். இங்கே தலைவர்களுக்கு அடையாளமாக அடைப்புக்குறிக்குள் ஆட்கள் என்று விளிப்பதற்குக் காரணம், உண்மையில் இவர்கள் தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறார்களா? என்ற சந்தேகத்தினாலேயே. (மலையக மக்களும் தமிழர்கள் எனினும் அவர்கள் குறித்து இந்தக் கட்டுரை இப்பொழுது நோக்கவில்லை)

மெய்யான தலைமைத்துவப் பண்பென்பது, ஆளுமையோடு பல் திறன்களை உள்ளடக்கியது. அவ்வாறான தலைமைகளாலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியும். ஏனையவை பிரச்சினைகளைக் காலம் முழுவதும் பேசிக் கொண்டிருப்பவையாகவே இருக்கும். இப்போதுள்ள தலைமைகள் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருப்பவை மட்டுமே. இவற்றினால், உரிய தீர்வைக் காணவே முடியாது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது இதுவே.

இதேவேளை இன்று மட்டுமல்ல, 1970 களுக்கு முன்னும் பல கட்சிகளும் பல தலைமைகளுமான சூழல் இருந்தது. பிறகு, இயக்கங்களின் காலத்திலும் பல இயக்கங்களும் தலைமைகளும் இருந்தன. இப்பொழுதும் அப்படித்தான், பல கட்சிகளும் தலைமைகளும் தாராளமாக உள்ளன. ஆனால், எந்தத் தலைமை பொருத்தமானது – சரியானது என்பதே கேள்வி. ஏனென்றால், இவ்வாறு ஏராளமான கட்சிகள், இயக்கங்கள், தலைமைகள் இருந்தாலும் அவற்றினால் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் ஒரு மில்லி மீற்றர் கூட நகரவுமில்லை. வெற்றி காணவும் இல்லை.

இதற்கு பொதுப்பரப்பில் வெவ்வேறு வகையான பதில்களும் விளக்கங்களும் பலராலும் முன்வைக்கப்படலாம். அந்த வகையில் ஒவ்வொருவரும் தமக்குரிய கட்சிகளையும் தலைமைகளையும் அடையாளப்படுத்தக் கூடும். ஆனால், உண்மையில் அப்படி அடையாளப்படுத்தப்படும் கட்சியும் சரி, தலைமையும் சரி தமிழர்களின் அரசியலை – தமிழ் மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் நெருக்கடியை கையாண்டு வெற்றியடையக் கூடியவைதானா? என்பதை தங்களுடைய அறிவுக் கண் கொண்டும் மனச்சாட்சியைக் கொண்டும் சொல்ல வேண்டும்.

என்னுடைய பார்வையில் இன்று சரியாக தலைமை, சரியான கட்சி என்று அடையாளப்படுத்தக் கூடியவையாக எவையும் இல்லை என்றே சொல்வேன். அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் தரப்பினரும் சரி, அரசாங்கத்துக்கு வெளியே செயற்படும் தரப்பும் சரி, எவற்றிலும் தகுதி நிலைப்பட்டன அல்ல. உள்ளதுக்குள் பரவாயில்லை அல்லது இதை விட்டால் வேறு என்ன வழி என்ற நிலையில்தான் இன்றுள்ள கட்சிகளையும் தலைமைகளையும் மக்கள் ஆதரிக்கிறார்கள். மற்றும்படி நம்பிக்கையும் மதிப்பும் வைத்து மக்கள் இந்தக் கட்சிகளையும் தலைமைகளையும் ஆதரிக்கவில்லை. இன்னொன்று தொடர்ந்து தமிழ் மக்களிடம் வளர்க்கப்பட்டு வந்த அரச எதிர்ப்பு மனநிலையே சில கட்சிகளையும் அவற்றின் தலைமைகளையும் ஆதரிப்பதற்குக் காரணம் என்பதையும் இங்கே கவனத்திற் கொள்ள வேண்டும்.

மக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மனநிலைக்குக் காரணம், கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கை வீழ்ச்சியே. ஒரு காலம் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியையும் அதனுடைய தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தையும் நம்பினர். இங்கே மக்கள் என்பது தமிழ்ச்சமூகத்தில் பெரும்பகுதியினரையே குறிக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையைத் தமிழரசுக் கட்சியினால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இறுதியில் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று செல்வநாயகம் கைகளை விரிப்பதில் போய் முடிந்தது. இதனால்தான் பிறகு ஒரு மாற்றீடாக தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. அதாவது தமிழரசுக் கட்சியின் போதாமை அல்லது இயலாமை கூட்டணியை வலியுறுத்தியது. இதில் தமிழரசுக் கட்சியோடு தமிழ்க்காங்கிரசும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்தன.

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த நம்பிக்கையை வெற்றியடைய வைக்கவில்லை. இதனால் இயக்கங்கள் உருவாகின. பிறகு ஒரு கட்டத்தில் இயக்கங்களின் கூட்டிணைவு ஈழதேசிய விடுதலை முன்னணி என்ற பேரில் ஏற்பட்டது. பாலகுமாரனும் பிரபாகரனும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் கைகோர்த்தனர். இதுவும் ஒரு பெரும் நம்பிக்கையை போராளிகளிடத்திலும் மக்களிடத்திலும் உண்டாக்கியது. ஆனாலும் அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை. பதிலாக அது முரண்களிலும் கொலைகளிலும் போய் முடிந்தது. மக்களுடைய நம்பிக்கை அந்தக் கனவை விரித்தவர்களாலேயே காலடியில் போட்டு மிதிக்கப்பட்டது. இறுதியில் மாபெரும் கனவாக உருவான அந்தக் கூட்டிணைவு பெரும் துயரத்தில் வீழ, மிஞ்சியதோ அந்தக் கரங்கோர்த்த படம் மட்டுமே.

இதற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. அல்லது உருவாக்கப்பட்டது. சரி பிழைகளுக்கு அப்பால், வடக்குக் கிழக்கிலிருந்து 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கூட்டமைப்பின் மூலம் தெரிவாகியிருந்தனர். இதுவும் ஒரு வகையில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், அந்த நம்பிக்கையை பின் வந்த காலத்தில் கூட்டமைப்பே உடைத்துச் சிதறடித்தது. இப்போது கூட்டமைப்பும் சிதறிப்போயுள்ளது. இப்போதுள்ளது வெறும் கோது மட்டுமே.

இந்த நிலையில்தான் மாற்று அணியைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மாற்று அணி என்பதை பலரும் கூட்டமைப்புக்கு எதிரான ஒன்றாக அல்லது கூட்டமைப்புடன் முரண்பாடுள்ள அணியாகவே அடையாளப்படுத்துகின்றனர். இது தவறு. உண்மையில் மாற்று அணி என்பது மாற்று அரசியலை முன்னெடுப்பாக இருக்க வேண்டும். கொள்கை ரீதியிலும் வழிமுறை, நடைமுறை சார்ந்தும் மாற்று அரசியலை முன்னெடுக்கும் அணியாகவே அது இருக்க வேண்டும்.

இந்த மாற்று அரசியல் அடையாளம் குறித்தும் அதை அடையாளப்படுத்துவதைக் குறித்துமே ஏராளம் குழப்பங்கள் தமிழ்ச் சூழலில் நடக்கின்றன. கூட்டமைப்பின் சாயலோடு உருவாகும் அல்லது உருவாக்கப்படும் அணிகளே மாற்று அரசியலுக்குரியவை அல்ல என்பதைப் புரிந்து கொண்டு, அதை மனந்துணிந்து ஏற்றுக் கொள்வதிலிருந்தே மாற்று அரசியலையும் மாற்று அணியையும் அங்கீகரிக்க முடியும். அப்படி அங்கீகரிக்கப்படும் மாற்று அரசியலும் மாற்று அணியுமே இன்று தேவை.

இதற்குக் கடந்த காலத் தவறுகள், பின்னடைவுகள், போதாமைகள் எவை என்பதை விஞ்ஞான ரீதியாகப் பகுத்து ஆராய வேண்டும். எதிர்கால அரசியலை நடைமுறை ரீதியாக முன்னெடுப்பதற்குப்பொருத்தமான அரசியல், அதற்குத் தகுதியான தலைமை அல்லது அணி எது என்று கண்டறிய வேண்டும். இது முதலில் செய்யப்பட வேண்டியது.

அப்படியென்றால், அதற்குத் தகுதியான தலைமைகள் எவை? கட்சிகள், அணிகள் எவை என்ற கேள்வி உங்களுக்குள் எழக் கூடும். இது நியாயமானதே. எனவேதான் நாம் வரலாற்றனுபவங்களுக்குச் செல்ல வேண்டும் என்கிறேன். ஏற்கனவே நம்பிக்கை அளித்த அணிகள் அல்லது கூட்டுகள் அந்த நம்பிக்கையை வெற்றி கொள்ள முடியாமல் போனதேன்? அதற்கான பொறுப்பினை அவை ஏற்றுள்ளனவா? அப்படி அந்தத் தவறுகளுக்கான பொறுப்பினை ஏற்காமல் எப்படித் தொடர்ந்தும் அரசியல் பரப்பில் தலைமையேற்பதற்கு இவை துணிந்திருக்கின்றன? என்று நாம் கேட்க வேண்டும். இந்தக் கேள்வி எமக்குத் தெளிவான பதிலைத் தருகிறது.

உண்மையில் இந்தக் கட்சிகளும் தலைமைகளும் மக்களை மதிக்கவில்லை என்பதே அந்தப் பதிலாகும். இதனால்தான் இவை தொடர்ந்தும் பழைய – 40 ஆண்டுகளுக்கு முந்தி – போருக்கு முந்திய சரக்கை வைத்து அரைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கப்பால் இவற்றிற்கு புதிய உணர்திறனோ, புதுமை நோக்கோ, புதியன பற்றிச் சிந்திக்கும் திறனோ இல்லை. அதற்காக உழைப்பும் முயற்சியும் கிடையாது.

ஆனால், இதற்குள் மக்கள் இழந்தவைகளோ மிக அதிகம். அவர்கள் செய்த தியாகமோ மிக உச்சம். இந்த அரசியலினால் மக்கள் அடைந்த பாதிப்போ மிகமிகப் பாரியது. இதற்குப் பிறகு கூட சிறிய அளவில் கூட மனச்சாட்சி இல்லாமலே இவை தொடர்ந்தும் தமது அரசியலை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றன. இது மக்களுக்கு இழைக்கப்படுகின்ற மாபெரும் அநீதியாகும். மிகப் பெரிய வரலாற்றுத் துரோகமாகும். அரசோ ஆட்சித் தரப்புகளோ இழைக்கின்ற தவறுகளையும் விட இவற்றின் தவறுகளும் துரோகமும் அதிகமாகும். என்பதால்தான் இந்தத் தலைமைகளைப் பற்றியும் கட்சிகளைப் பற்றியும் நாம் கடுமையான தொனியில் பேச வேண்டியுள்ளது.

இதேவேளை இந்த அணிகள் நமக்குப் பல பாடங்களைச் சொல்கின்றன. தன்முனைப்பும் தனிநபர் மேலாதிக்கப்போக்கும் மக்கள் விரோத அரசியல் நிலைப்பாடுகளும் வெறுமனே திரட்சியடைந்த வாய்ப்பாட்டு அரச எதிர்ப்புமே இந்த அணிகளின் தோல்விக்குக் காரணம். இதை விடவும் வேறு சில பல காரணங்களுமுண்டு. அவையெல்லாம் இணைந்தே இவற்றை வரலாற்றில் தோல்விக்குள்ளாக்கின. இவையும் தோல்வியை மக்களுக்குக் கொடுத்தன.

இந்த நிலையில்தான் நாம் மாற்று அணியைக் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த மாற்று அணியானது, புதிய அரசியல், புதிய வழிமுறை, புதிய நடைமுறை என்பதை வரலாற்று அனுபவங்களோடும் கள யதார்த்தத்தோடும் உலகப் போக்கோடும் முன்னெடுப்பதாக இருக்க வேண்டும். திறனும் ஆற்றலும் ஆளுமையும் உள்ளதாக இருக்க வேண்டும். மக்களுக்கு விசுவாசமானதாக இருக்க வேண்டும். கால நிர்ணயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வுகளைக் காண்பதாகத் தமது செயற்திட்டத்தை உருவாக்கும் பொறுப்புடையதாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு செயற்படுவதாக இருக்க வேண்டும். சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடியொற்றி நடக்க வேண்டும். மொத்தத்தில் மாற்று அரசியற் பண்பாடொன்றைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

இது இயலாத ஒன்றல்ல. மட்டுமல்ல, இதைச் செய்தே தீர வேண்டும். இதைக் குறித்து நாம் தொடர்ந்து உரையாடுவதும் அதன்வழியாக மாற்று அரசியலையும் மாற்று அணியையும் கண்டறிய வேண்டும். இது காலக் கட்டளை. இதுவன்றி வேறு வழி ஏதுமில்லை, தமிழர்களுடைய அரசியல் மீட்சிக்கு.

கருணாகரன்

Comments