பாடும் நிலாவே! | தினகரன் வாரமஞ்சரி

பாடும் நிலாவே!

பாடும் நிலாவாகப் பாரில் வலம் வந்தவரே!
 
ஏடும், நாடும் போற்ற எழில் இசையைத் தந்தவரே!
 
கூடுவிட்டுன் ஆவி பிரிந்திட்ட செய்தியினால்
 
வாடுகின்றோம் துன்பத்தால்! வல்லவனே! எங்குற்றாய்?
 
‘ஆயிரம் நிலவில்’ தொடங்கி ஆயிரமாய் பாடல்களை,
 
நீயிங்கு பாடிவைத்தாய்! நெஞ்சங்கள் குளிரவைத்தாய்!
 
தாயினைப் போலே இனிய தாலாட்டும் பாடும் உமை
 
நோய் வந்து தாக்கியதால் நொந்து மடிந்தாயோ?
 
அன்பாலும், பண்பாலும் அனைவரையுமே கவர்ந்து
 
நின்பால் ஈர்த்துவிடும் நிகரில்லாக் கலைஞன் நீ!
 
உன் பாடல்கள் கேட்டு உள்ளம் மகிழ்ந்திருந்தோம்!
 
அன்பா! எதைப் பிரிந்த அவலத்தால் அழுகின்றோம்!
 
கண்ணதாசன், வாலியொடு கவிஞர்கள் பலபேரும்
 
எண்ணற்ற கவிதைகளை விண்ணகத்தில் எழுதிவிட்டு
 
பண்ணோடு பாடுதற்காய் உம்மை அழைத்தனரோ?
 
கண்கள் குளமாகிவிட்டு, கலைஞன் நீ சென்ற​ெதங்கோ?
 
உயிர் பிரிந்து போனாலும், உத்தமன் நீ பாடிவைத்த,
 
உணர்வான பாடல்களோ உலகெங்கும் ஒலித்திருக்கும்!
 
அயர்வின்றிப் பாடிவைத்த அற்புதனே! நினது
 
ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செய்கின்றோமே!
 
கலாபூஷணம் கீழ்கரவை குலசேகரன், அப்புத்தளை

Comments