இராணுவத் தளபாட உற்பத்தியும் போருக்கான சாத்தியங்களும் | தினகரன் வாரமஞ்சரி

இராணுவத் தளபாட உற்பத்தியும் போருக்கான சாத்தியங்களும்

உலகளாவிய அரசியல் களம் கொரனோவுடன் மெளனமாகாது தொடர்ச்சியாக ஒரு பெரும் ஆயுத பேரத்துக்கான தயாரிப்புகளுடன் செயல்பட முனைகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் கொரோனா பெரும் அபத்தமாக தென்படுகிறது. ஆனால் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கமும் அத்தகைய இழப்பீடுகளை பெரிதாக கருதாது போரையும் அதற்கான தயாரிப்பையும் நோக்கி நகர்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் கொல்லப்பட்ட இரண்டு இலட்சம் மக்களைவிட அந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தல் முக்கியமாக தெரிவதோடு தற்போதைய ஜனாதிபதி அதற்கான அனைத்து சுகாதார பொறிமுறையையும் தூக்கி எறிந்து விட்டு தேர்தலில் இறங்கியுள்ளார். இக்கட்டுரையும் உலகளாவிய ரீதியில் கடந்த குறுகிற காலத்தில் நிகழ்ந்துள்ள ஆயுதப் போட்டியின் நோக்கத்தினைத் தேடுவதாக அமையவுள்ளது.

அணுவாயுதம் வைத்திருக்கும் நாடுகளால் உலகம் அணுவாயுதப் போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்துகொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். அணுவாயுதத்தை முற்றிலும் ஒழித்தல் தொடர்பிலான தினத்தில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அணுவாயுதத்தை வைத்திருப்பது மட்டுமல்ல அதனை தொடர்ச்சியாக விருத்தி செய்வதுவும் பரிசோதிப்பதுவும் நாடுகளிடையே நிகழ்ந்து வருகிற ஆயுதப் போட்டியாக உள்ளது.

வடகொரியா தனது ஆளும் கமியூனிசக் கட்சியின் 75 ஆவது (10.10.2020) ஆண்டினை கொண்டாடும் விதத்தில் நடாத்தியுள்ள இராணுவ அணிவகுப்பில் அதிக செய்திகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டினை காட்சிப்படுத்தியதுடன் அவை பாரிய விளைவைப் இப்பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகளாவிய தளத்தில் ஏற்படுத்துமென அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு ஆய்வாளர் மல்கம் டேவிஸ் குறிப்பிடுகின்றார். இது அமெரிக்காவின் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஏவுகணை எப்போது பரிசோதிக்கப்பட்டதென்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவுக்கான வடகொரிய ஆய்வு மையம் கருத்து தெரிவிக்கும் போது 2017 இல் வடகொரியா பரிசோதித்த ஹவாசோங்-15 இன் திட எரிபொருளால் தயாரிக்கப்பட்ட ஏவுகணை எனவும் இது முன்கூட்டியே கணிக்கப்பட்டதெனவும், இது அணுவாயுதத்தை காவிச் செல்லும் ஏவுகணை எனவும் குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமன்றி இத்தகைய கண்காட்சியானது புதிய ஆயுத தளபாடங்களை முதன்மைப்படுத்தியதுடன் ஏறக்குறைய ஓர் ஆயுதக் களஞ்சியமாக தெரிந்தது எனவும் புதிய வகை ஆயுதங்கள் அதிகம் காணப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் புதிய நீர்மூழ்கியில் பொருத்தப்படக் கூடிய ஏவகணைகள் காணப்பட்டதாகவும் அதற்குரிய பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தகைய காட்சிப்படுத்தலின் மத்தியில் வடகொரியத் தலைவர் கிம்ஜோன் உங் குறிப்பிடும் போது மக்களின் பாதுகாப்புக்கானது எனவும் தற்காப்புக்கான வழிமுறையெனவும் யுத்தத் தடுப்பினை தொடர்ந்து பலப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார். இத்தகைய வரலாற்று மக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பில் வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது கவனத்திற்குரியதாகும். எங்கள் தேசிய அரசு மக்களின் அதிகாரத்தையும் பாதுகாப்பையும் இணைக்கும் விதத்தில் அணுசக்தி மூலோபாயத்துடன் சதுக்கத்திற்குள் உள்நுழைகின்றது. சதுக்கம் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுகின்றன எனக்குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வடகொரியாவின் இராணுவ பிரசன்னம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பிராந்திய மட்டத்தில் அதிக அதிருப்தியை உருவாக்கியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஜப்பானின் நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதத்தில் தமது ஏவுகணை தடுப்பரண் முறைமை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் பத்திரிகைக்கு ஜப்பானிய அமைச்சரவை செயலாளர் தெரிவித்த கருத்துக்களின் படி வடகொரியாவின் புதிய ஏவுகணைகளில் சிலவற்றை வழக்கமான ஏவுகணைகள் கொண்டு எதிர்கொள்வது கடினமானது. அதே சமயம் பன்முகப்படுத்தும் சிக்கலான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கான எங்கள் விரிவான ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த நாங்கள் உறுதியாகச் செயல்படுகிறோம் எனத் தெரிவித்தார்.

இதனோடு தொடர்புபடும் விதத்தில் கடந்த காலப்பகுதியில் இந்திய இராணுவம் தனது பங்குக்கு சீனாவுடனான முரண்பாட்டை கையாளும் விதத்திலும் பிராந்திய அரசை எதிர்கொள்ளும் வகையிலும் ஆயுத தளபாட உற்பத்தியில் அதிக முனைப்பு காட்டிவருகிறது. இந்திய இராணுவஆய்வுமற்றும் விருத்தி அமைப்பானது ( ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தி வருகின்றது. இவ்வமைப்பு கடந்த ஐந்து வாரங்களில் சுமார் 10க்கும் குறையாத ஏவுகணை பரிசோதனைகளை நடத்தியுள்ளது. அவற்றுள் ஹைப்பர் சோனிக் ஏவுகணை, பிரம்மோஸ் தூர ஏவுகணை, அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி ஏவுகணை,ஹைப்பர் சோனிக் ஏவுகணைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு வாகனங்கள்,கதிர்வீச்சு எதிர்ப்புத்திறன் கொண்ட ருத்ரம் -ஐந்து ஏவுகணை போன்றன முக்கியமானவையாகும்.

இந்தியாவின் ஆக்கத் திட்டத்தில் அணுஆயுதங்களைச் சுமந்துசெல்லும் ஏவுகணைகள் தாயாரிக்கு திறனுடையதாக வளர்ச்சியடைந்துள்ளது.

குறிப்பாக சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் சாதாரண ஏவுகணைகள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளது. இதனால் அதிக இராணுவத் தளபாடங்களை தயாரித்துவரும் DRDO ஏவுகணைகளை பரிசோதிப்பதன் மூலம் பிராந்திய சூழலை தமக்கு சாதகமாக எதிர்கொள்ளவும் ஆயத்தமாவதனைக் காட்டுகிறது இத்தகைய இராணுவ விருத்தி தொடர்பில் டி ஆர் டி ஓ வின் தலைவர் சதீஸ் ரெட்டி தெரிவிக்கும் போது, லடாக் எல்லைப் பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியேற மறுக்கும் சீன இராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டால், அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இந்தப் பரிசோதனைகளை வேகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

கலாநிதி
கே.ரீ. கணேசலிங்கம்

Comments