முரளிதரனின் படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? | தினகரன் வாரமஞ்சரி

முரளிதரனின் படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி?

இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக்கொண்டு தயாரிக்கப்படும் ‘800’ திரைப்படத்தில் முன்னணி தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் பெரும்பாலான தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த திரைப்படத்தின் தலைப்பு ‘800’ என்று வெளியாகி, விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கும் நிலையில் எதிர்ப்பு வெகுவாக வலுத்து வருகிறது.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் விஜய் சேதிபதி அப்படத்தில் நடிக்கக்கூடாதென்று வலியுறுத்தி வருகின்றனர்.

"இலங்கை கிரிக்கெட் வீரரான முரளிதரனின் திரைப்படத்தில் நடிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.

ஆனால், ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களின் மனதையும் புரிந்துகொண்டு அவர் நடந்தால் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜுவும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கக்கூடாதென்று இப்படி ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும், நடிகை ராதிகா, நடிகர் அரவிந்தன் சிவஞானம் உள்ளிட்டோர் “கலைஞனை கலைஞனாக பார்க்க வேண்டும். அவனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நடிக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தக்கூடாது” என்று கூறிவருகின்றனர்.

ஆனாலும் பெரும்பாலான தமிழர்கள் தன்னை நடிக்கக்கூடாது என்றே சொல்லி வருவதால், 800 படத்திலிருந்து விலகுவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தனக்கு நெருங்கிய இயக்குநர்களை அழைத்து அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். ஆலோசனையின் முடிவில் விஜய்சேதுபதி, 800 படத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,“நடிகர் விஜய் சேதுபதி மீது அன்பும் கூடுகிறது. தமிழர்களின் மன உணர்வை மதித்தமைக்கு நன்றி’’ என்று இயக்குநர் கீரா தெரிவித்திருப்பதால், 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக முடிவெடுத்துவிட்டாரென்பது உறுதியாகிறது.

Comments