தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரான எதுவும் 20 இல் இல்லை | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரான எதுவும் 20 இல் இல்லை

மக்களின் துயரங்களை போக்கவும், கண்ணீரைத் துடைக்கவும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தும் நாம் சேவை செய்தோம். அதற்காக எம்மை துரோகிகள் என்றார்கள். ஆனால் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கியது யார் என்பதை வரலாறு வெளிக்காட்டியுள்ளது என்கிறார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் தேர்தல்களில் மக்கள் பெருமளவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக தான் ஒருபோதும் சலிப்படைந்ததில்லை என்கிறார். நேர்காணலின் முழு விபரம்

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் உங்களைச் சந்தித்திருக்கின்றார் அவசரமாக இடம்பெற்ற அந்தச் சந்திப்பை அரசியல் கூட்டுக்கான சந்திப்பாகக் கொள்ளளாலமா?

பதில்: அது அவசரமான சந்திப்பு அல்ல. தவிரவும் நாடாளுமன்றத்தில் எப்போதும் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். நாங்கள் நீண்டகால நண்பர்கள். அந்த நண்பர்களுக்கிடையே எப்போதும் ஒரு நெருக்கம் இருக்கும். ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு தேசிய ஜனநாயக அரசியலுக்கு வந்தவர்கள் என்பதால் தோழர் செல்வம், தோழர் சித்தார்த்தன் போன்றவர்களோடும், நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களான ஜனா, வினோ போன்றவர்களுடனும் எங்களுக்குள் நெருக்கமான உறவு எப்போதும் இருக்கின்றது.

அரசின் 20ஆம் திருத்தச் சட்டத்துக்கான எதிரப்புகள் வலுவடைந்து வருகின்றனவே?. அந்த முயற்சிகளைக் கைவிட்டுவிட்டு புதியதோர் அரசியலமைப்பை ​நோக்கிச் செல்லவேண்டுமென நினைக்கின்றீர்களா? 20 நெருக்கடிக்கு அதுவொரு தீர்வாக அமையுமா?

பதில்: இருபதாவது திருத்தத்தை எதிர்ப்பவர்கள் 19ஆவது திருத்தச் சட்டத்தை பெரும்பான்மையான மக்களின் ஆணையைப் பெற்று நிறைவேற்றவில்லை. ஆனால் 20ஆவது திருத்தத்தை கொண்டுவரவுள்ள அரசாங்கமோ பெரும்பான்மையான மக்கள் ஆணையைப்பெற்று கொண்டுவருகின்றது. இதில் குறைபாடுகள், திருத்தங்கள் இருந்தால் அதை குழு நிலை விவாதங்களில் சரி செய்து கொள்ளலாம். நாட்டை சிறப்பாக வழி நடத்துவதற்கும், அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும், மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் இருபதாவது திருத்தம் அவசியமாக இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மறுதலிக்கு எவ்விதமான உள்ளடக்கத்தையும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்பதால் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே உங்கள் நிலைப்பாடு தற்போதைய சூழலில் அதற்கான சாத்தியக் கூறுகள் எந்தளவில் உள்ளன?

பதில்: இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிப்பதே கெளரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும் என்று கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றேன்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதன் அடிப்படையே மாகாணசபை முறைமையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்வதில்தான் தங்கியுள்ளது. ஆகவே நாம் கூறிய தீர்வுக்கான வழிமுறையானது நடைமுறைச்சாத்தியமானதும், நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இருக்கின்றது.

அது இலங்கை, இந்திய அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏற்பாடாகும். அரசாங்கம் என்றவகையில், ஜனாதிபதியோ, பிரதமரோ, அமைச்சரவையோ தேசிய கொள்கையாக மாகாணசபை முறைமைக்கு மாறாக கருத்துரைக்கவில்லை. அன்று நாம் வலியுறுத்திய மாகாணசபை முறையை எதிர்த்தவர்கள் இன்று அதை ஆதரிப்பதுபோல் போலியாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழர்களின் போராட்டம் பெற்றுத்தந்த உட்சபட்ச அதிகார அலகாக மாகாண சபைகளே உள்ளன. அதற்குப் பின்னர் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பலம்பெற்றிருந்தபோதும், மாகாணசபைகளுக்கு மேலான ஒரு அதிகாரம் பெற முடியாமற் போனதேன்?

பதில்: நடைமுறைச்சாத்தியங்களையும், பூகோள மாற்றங்களையும் புரிந்துகொள்ளமல் அந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்கள் அதை நிராகரித்ததுடன் தமிழ் மக்களை பாதாளம் நோக்கியே நடத்திச் சென்றார்கள். இறுதியில் இருந்ததையும் அழித்தொழித்ததுடன், ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களையும் காவு கொள்ள வழி செய்துவிட்டார்கள். அன்று மாகாணசபை முறைமையை பொறுப்பேற்று அதைப் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி தமிழ் மக்கள் வழி நடத்திச் செல்லப்பட்டிருப்பார்களேயானால் நாம் எதிர்பார்த்திருந்த சுய நிர்ணய உரிமையை நடைமுறையில் பெற்றுக்கொண்டிருந்திருக்க முடியும்.

துரதிஷ்டவசமாக அன்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை முறைமையை பொறுப்பேற்றுக் கொண்டவர்களோ, அர்த்தபூர்வமாக நிர்வகித்து, அதைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்.

மாகாணசபை அதிகாரத்தை தமிழ் மக்கள் ஈ.பி.டி.பியினராகிய எமது கரங்களில் ஒப்படைப்பார்களேயானால் நாம் மாகாணசபையை தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் விதமாக முன்னோக்கி கொண்டு செல்வதுடன், எமது தாயக பூமியான வடக்கு கிழக்கை வளமிக்க தேசமாக எழுச்சி பெறச்செய்வோம்.

முன்னர் மாகாண சபைகளை எதிர்த்த தமிழ்த் தலைமைகள் கூட தற்போது அதுவும் இல்லாமல் போய்விடும் என்று அச்சம் கொள்கின்றனர். ஆனாலும் அந்த அச்சம் நியாயமானதுதானே? மாகாணசபைகள் முறைமையை எதிர்க்கும் ஒருவரையே உள்ளுராட்சிகள் மாகாணசபைகள் அமைச்சராக அரசு நியமித்திருக்கின்றதே?

பதில்: நீங்கள் கூறும் பேரம் பேசும் பலமானது விவேகத்திற்கு இடமளிக்காமல் போகுமானால் கானல் நீராகவே போய்விடப்போகின்றது என்று கூறிவந்திருக்கின்றேன். இறுதியில் அதுவே நடந்து முடிந்தது. இன்று மாகாணசபைக்காக நீலிக்கண்ணீர் வடித்து அச்சம் கொள்வதாக காட்டிக்கொள்பவர்கள், கண்ணீர் வடிக்கின்றனர். அது போலித்தனமான அச்சமாகும். மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களோ, அல்லது மாகாணசபையின் அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றபோது அதை உச்சபட்சமாக பிரயோகித்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றியவர்களோ அல்லவே.

இன்று மாகாணசபை முறைமை மீது அவர்கள் காட்ட முற்படும் அக்கறையை அன்றே காட்டியிருந்தால், இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் சென்றிருக்கலாம்.

கிடைத்த மாகாணசபை அதிகாரத்தை கிழக்கில் வீணடித்தார்கள். வடக்கில் ஆளுமையற்ற தலைமைத்துவமும், அதனோடு சேர்ந்த அலிபாபாக்களுமாக கூட்டாக சேர்ந்து மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் செய்தார்கள். பிறகு தமது சகாக்கள் மோசடி செய்ததாக அவர்களே விசாரணைக் குழு அமைத்து விசாரித்து கண்துடைப்புச் செய்தார்கள். மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரியவாறு செலவு செய்யத் தெரியால் திரும்பிச்செல்லவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்.

இறுதியில் மாகாணசபை அதிகாரத்தை நிர்வகிக்க அக்கறை காட்டாமல் காலத்தைக் கடத்திவிட்டு, அதன் சுகபோகங்களை ஆட்சிக்காலம் வரைக்கும் அனுபவித்துவிட்டு இறுதியில் மாகாணசபைகளால் ஒன்றையும் செய்ய முயடிாது என்று அறிக்கைவிட்டார்கள்.

எனவே மாகாணசபைகள் தொடர்பாக பேசுவதற்கு இவர்களில் எவருக்கும் அருகதையில்லை. இன்று தென் இலங்கையில் சிலர் மாகாணசபை முறைமையை பலவீனமானதாக வாதிடுவதற்கு, அதை எதிர்த்தும், விமர்சித்தும் நின்ற தமிழ்த் தலைமைகள் என்போரே வித்திட்டவர்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்க வாக்குப் பலத்தைத் தருமாறு தமிழ் மக்களிடம் நீங்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றீர்கள். அதற்கு வழி சமைக்கும் முகமாக ஒரே பாதையில் பயணிக்கும் கட்சிகளுடன் நீங்கள் இணைந்து செயற்படவேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்த் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. மாகாணசபைத் தேர்தல்களிலாவது அவ்வாறானதொரு கூட்டு சாத்தியப்படுமா?

பதில்: காலத்துக்கு காலம் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள், முயற்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் தேர்தல் நெருங்குகின்ற காலத்தில் இவ்வாறான முயற்சிகள் பரபரப்பாக இருப்பதும், தேர்தல் வேளையில் தத்தமது சுய நலன், விருப்பு, வெறுப்புக்களுக்கு இடமளித்து இந்த கூட்டுக்கான முயற்சிகள் பலவீனடைந்து விடுவதே அனுபவப் பாடமாக இருக்கின்றது.

தவிரவும் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டு ஒன்றுக்குச் செல்வதை நாம் எப்போதும் விரும்பியதில்லை. எம்மைப் பொறுத்தவரை, கூட்டு என்பது முரண்பாடுகளுக்குள் உடன்பாடுகளை காணுகின்ற அதேவேளை பொது வேலைத்திட்டம், ஒன்றுக்கான அடிப்படை இணக்கத்தோடும், அர்த்தபூர்வமானதாகவும், உண்மைத் தன்மை கொண்டதாகவும் அமைய வேண்டும். நீங்கள் கூறுவதுபோல் எம்மோடு இணைந்து பயணிக்க முன்வரும் தரப்புகளை அரவணைத்து பயணிக்க நாம் தயாராகவே இருக்கின்றேம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தற்போதும் தொடர்ந்து வருகின்றது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு கண்டு வடக்கு மீனவர்களின் மீன்வளத்தைப் பாதுகாப்பதென்பது சாத்தியமானதா?

பதில்: இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும், அவர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் காரணமாகவும் எமது கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எமது கடல் வளங்கள் அழிக்கப்பட்டு எமது கடல் பிரதேசம் மலட்டுத் தன்மையடைகின்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. என்பதெல்லாம் உண்மைதான். அதேவேளை எமது மீனவர்களை அவர்கள் தாக்குவதும், தொழில் உபகரணங்களை சேதமாக்குவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்தப் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தைகள் நடத்தி, இரு தரப்பு மீனவர்களும் நன்மை பெறுகின்றவகையில் உடன்பாடொன்றை காணவேண்டும் என்ற பரிந்துரையை நான் இந்திய பிரதமர் மோடியிடம் கையளித்துள்ளேன். அண்மையில் இந்திய பிரதமரோடு தொலைபேசி மூலமாக உரையாடிய எமது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இவ்விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், இப்பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைக் காணவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சினையின் பாதிப்பையும், எமது நியாயத்தையும் இந்தியப் பிரதமர் மோடியும் புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. எனவேதான் இந்த விடயம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடனும் சம்பந்தப்பட்ட அமைச்சர் என்றவகையில் என்னுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்தியாவில் கடல் மற்றும் கரையோர விடயங்களை மத்திய, மாநில அரசுகளே கட்டுப்படுத்துகின்றன. எனவே தமிழ் நாட்டின் ஒத்துழைப்பும் இவ்விடயத்தில் அவசியமாகும்.

எனவே இவ்விடயங்கள் ராஜதந்திர ரீதியில் கவனமாக கையாளப்பட்டு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணமுடியும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடி பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பி கொள்கையில் உறுதியாக நின்று மக்களுக்காகவே உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். தேர்தல்களில் மக்கள் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவைத் தருவதில்லை. இது உங்களை எப்போதாவது சலிப்படையச் செய்திருக்கின்றதா?

பதில்: நீங்கள் கூறுவதைப்போல எமது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு கெளரவமானதும், சமத்துவமானதுமான வாழ்க்கைளை ஏற்படுத்துக் கொடுக்கக் கூடியதுமான தீர்வொன்றைக் காணும், உறுதியான கொள்கை வகுத்து அதில் உறுதியுடனும் நின்று கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்குகொண்டு அரசியல் ரீதியாக எனது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றேன்.

நான் மக்களுக்கு அழிவுக்கான பாதையைக் காட்டவில்லை. ஆக்கத்திற்கான பாதையையே காட்டி வருகின்றேன். சிங்கத்திற்கும், புலிக்கும் நடுவே சிக்கிக் கொண்ட மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவளிக்கவும் பாடுபட்டோம். மக்கள் பாதிக்கப்பட்டால்தான், மக்கள் மரணித்தால்தான் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் திரும்பிப்பார்க்கும், அங்கீகரிக்கும் என்று கூறியவர்களை நிராகரித்து மக்களின் துயரங்களை போக்கவும், கண்ணீரைத் துடைக்கவும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து நாம் சேவை செய்தோம். அதற்காக எம்மை துரோகிகள் என்றார்கள். தமிழ் மக்களை கொலைக்களத்தில் நிறுத்தினார்கள், அப்பாவி தமிழ் மக்களை மனித வேலிகளாக துப்பாக்கிகளுக்கு முன்னால் நிறுத்தினார்கள். தமிழ் மக்களை யார் அரசியல் அநாதைகளாக நிறுத்தினார்கள் என்பதை வரலாறு வெளிக்காட்டியுள்ளது.

நாம் கூறுவது சுய லாப அரசியல்வாதிகளுக்கும், மக்களின் துயரத்தில் சுகபோகம் அனுபவிப்பவர்களுக்கும் கசப்பாக இருக்கலாம். ஆனால் அதுவே யதார்த்தமாகும்.

இன்று நாம் கூறிய அரசியல் வழிமுறைக்கே அனைவரும் வந்து நிற்கின்றனர்.

எனவே நீங்கள் கூறியதுபோல் தேர்தல்களில் மக்கள் பெருமளவாக வாக்களிக்கவில்லை என்று நாம் சலிப்படையவில்லை. எமக்கு வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் நாமே சேவைகளை ஆற்றிவருகின்றோம்.

எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப்போயிருக்கின்றார்கள்.

யாருக்கோ வாக்களித்துவிட்டு தமது பிரச்சினைகளுக்காக எம்மை நாடி வந்தபோதே அவர்கள் தோற்றுப்போயிருக்கின்றார்கள் என்பதை அவர்களது மனச்சாட்சி உணர்த்தியிருக்கும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறை மக்கள் செய்யமாட்டார்கள் என்று நம்புகின்றேன். மக்களிடையே மனமாற்றத்திற்கான சமிக்ஞை தென்படுவதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மறுதலிக்கும் எவ்விதமான உள்ளடக்கத்தையும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்பதால் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

கிடைத்த மாகாண சபை அதிகாரத்தை கிழக்கில் வீணடித்தார்கள். வடக்கில் ஆளுமையற்ற தலைமைத்துவமும், அதனோடு அலிபாபாக்களுமாக கூட்டாக சேர்ந்து மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் செய்தார்கள்

வாசுகி சிவகுமார்

 

Comments