இருபதை நிறைவேற்றியதால் உறுதியான நிலையில் அரசு | தினகரன் வாரமஞ்சரி

இருபதை நிறைவேற்றியதால் உறுதியான நிலையில் அரசு

20 ஆவது திருத்தம் நிறைவேறியதால் உறுதியான அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ளது என்று தெரிவிக்கிறார். அரச தரப்பின் அமைச்சர் ஒருவர். நல்லது. கடந்த (நல்லாட்சி)அரசாங்கம் உறுதியற்றுத் தளம்பியதைப் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே, இந்த அரசாங்கத்தை உறுதிமிக்கதாக அவர்கள் கருதுகிறார்கள். உறுதியான அரசாங்கத்தினால்தான் ஆட்சியைத் திறனுடன் பரிபாலிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையே. அப்படியான அரசாங்கத்தினால்தான் பொருளாதாரப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்ற நிரந்தரப் பிரச்சினைகளுக்கான தீர்வைத் திடகாத்திரமாகக் காண முடியும். புதிய திட்டங்களை உசாராகச் செய்யவும் செயற்படுத்தவும் முடியும். மொத்தத்தில் நாட்டை முன்னுயர்த்த முடியும். ஆகவே, உறுதி மிக்க அரசாங்கத்துக்கு ஏராளம் பணிகளுண்டு. ஆட்சியில் பலமான தரப்பாக – அறுதிப் பெரும்பான்மைப் பலத்தோடிருக்கும் அரசாங்கம், இனி எந்த விதமான சாட்டுப் போக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. என்பதால் பல விதமான மாற்றங்கள் நாட்டில் நடக்கும், நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். சனங்கள் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள்.

அப்படியென்றால், இந்த அரசாங்கத்துக்கு பாரிய பொறுப்புகள் உண்டெனலாம். இந்த இடத்தில் இன்னொன்றையும் சேர்த்து வாசிக்க வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தத் தரப்பினரின் அரசாங்கமே போருக்குப் பிந்திய ஐந்து ஆண்டுகளும் (2010 – 2015) ஆட்சியிலிருந்தது. அந்த ஐந்தாண்டுகளிலும் புனர்வாழ்வு அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு என்ற இரண்டு அமைச்சுகளை இது முன்னர் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தபோது) உருவாக்கியிருந்தது. போர் நடந்த வடக்குக் கிழக்கில், வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என இரண்டு சிறப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது. அதன் மூலமாக ஒரு குறித்த எல்லை வரையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் சில வேலைகளைச் செய்ததும் உண்டு. கூடவே இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வில் 13 + வரையில் செல்லலாம் என அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பகிரங்கமாவே அறிவித்துமிருந்தார்.  

ஆனால், இதில் உள்ள போதாமைகள், நடைமுறைப் பிரச்சினைகளினாலும் நாடு முழுவதிலும் காணப்பட்ட ஜனநாயக நெருக்கடி போன்றவற்றினாலும் 2015 இல் அந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, நல்லாட்சிக்கான கூட்டு அரசாங்கம் கொண்டு வரப்பட்டது. அந்தக் கூட்டரசாங்கமோ அதிகார இழுபறி, பொறுப்பின்மை, கூட்டுக்குதம்ப முசுப்பாத்திகளால் தன்னைத் தானே தோற்கடித்தது. இதனால் அது ஏற்றுக் கொண்ட வேலைகள் எதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. இப்பொழுது மறுபடியும் ராஜபக்ஷ தரப்பினரின் அரசாங்கம் வந்திருக்கிறது. அதுவும் பலமானதாக.  

ஆகவேதான் நாம் இந்த அரசாங்கத்திடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்க வேண்டியதாக உள்ளது. ஆனால், அரசாங்கத்துக்கு சுலபமாகச் சொல்லக் கூடியமாதிரி, களச் சூழல் இல்லை. முதலாவது கொரோனா நெருக்கடி. அதை எப்படி அரசாங்கம் கையாளப்போகிறது? என்பது பெரும் சவால். கொரோனா நெருக்கடியானது அரசாங்கத்தின் திட்டங்கள் பலதையும் பாதிக்கக் கூடியது. முக்கியமாக பொருளாதாரப் பிரச்சினைகளை உண்டு பண்ணும். இதற்குப் பொருத்தமான பொறிமுறை, வழிமுறை, நடைமுறைகளை அது வெற்றிகரமாக உருவாக்க வேண்டும். கொரோனா முதல் அலையின் போது ஓரளவுக்கு அது வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது நெருக்கடி அப்படியல்ல.

அது கைக்குள் அடக்க முடியாதவாறு சமூகத் தொற்றாக விரிவடைந்துள்ளது. இதை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் பாதுகாக்க முடியும். அதுவே ஏனைய விடயங்களில் கவனத்தைச் செலுத்துவதற்கான களத்தைத் திறக்கும். ஆனால், இதை முன்னிறுத்தி, நல்லாட்சி அரசாங்கத்தைப்போல ஒரு தந்திரோபாயமாக கையாள முற்பட்டால் அதுவே பின்னாளில் பல நெருக்கடிகளை உண்டாக்கும். மக்களுடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறும்போது அந்த நெருக்கடிகள் இயல்பாகவே உருவாகும். ஆட்சித்தரப்புகளுக்கான அரசியல் நெருக்கடிகள் பெரும்பாலும் இவ்வாறான காரணங்களினால் உருவாகுவதுண்டு.  என்பதால், முதலில் கொரோனா நெருக்கடிக்குப் பொருத்தமான நடவடிக்கைகள் அவசரமாகவும் அவசியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு அரசாங்கம் தான் மட்டும் இதைத் தலையில் தூக்கிக் கொள்ளாமல் கூட்டுப் பொறிமுறையை, கூட்டிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் இயல்பைப் பொறுத்து அது எதையும் தனித்துச் செய்யவே வாய்ப்புண்டு. கூட்டுக்களின் அனுபவங்கள் அதற்குக் கசப்பாக இருக்கக் கூடும். அத்துடன், இதற்கான கூட்டுகளை உருவாக்குவதிலும் சவால்கள் உண்டு. ஆனால், அரசாங்கத்தின் தலைமைத்துவம் மிக இறுக்கமானது, உறுதியானது என்ற கோணத்தில் பார்த்தால், அதற்கான அதிகார வரப்புகளும் மிகப் பலமானதாக இருக்கும் பட்சத்தில் வலுவானதொரு நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். அதன் வெற்றி தோல்விகள் எப்படி அமையும் என்பதை உடனடியாகக் கணிப்பிட முடியவில்லை.  

கொரோனாவினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்குத் தணியக் கூடும். ஆனாலும் அது காலடியில் உள்ள பெரியதொரு பிரச்சினையே. ஏனெனில் உலகப் பொருளாதார வலையமைப்பே இன்று சிக்கலடைந்து வருகிறது. சவால்கள் அதிகரித்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் தனியே சுதேசப் பொருளாதாரக் கட்டமைப்பின் மூலம் எந்தளவுக்கு உடனடியாக நெருக்கடிகளைத் தணிக்க முடியும் என்பது கேள்வியே. அதேவேளை இந்தச் சூழல்தான் சுதேசப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஏற்றதும் கூட. இப்பொழுது அரசாங்கம் விவசாயப் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளித்துப் பல திட்டங்களை முன்மொழிந்திருக்கிறது. நடைமுறைகளையும் உருவாக்கி வருகிறது. அடுத்த வரவு செலவுத்திட்டத்தின்போதுதான் இதன் முழுத்தன்மை புலப்படும். தீட்டப்படும் திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்படும் நிதி போன்றன அப்போதே தெரியவரும்.  

பொருளாதார நெருக்கடிகளைகளுக்கும் தீர்வு காணப்பட்டால், அடுத்த நெருக்கடியாகக் கையில் இருப்பது, இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதாகும். ஆனால், அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல்கள் மிகச் சிக்கலானவை. பலரும் கூறிவருவதைப்போல பொருளாதார நெருக்கடிகளுக்குத்தீர்வைக் காண்பதன் மூலமும் நிறைவான அபிவிருத்தியைச் செயற்படுத்துவதன் வழியாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியும் என்பதே இந்த அரசாங்கத்தின் எண்ணமாக உள்ளது. இது எந்தளவுக்கு நிறைவான சாத்தியங்களைத் தரும் என்பது கேள்வியே. மிகச் சிக்கலாக்கப்பட்டிருக்கும் இந்த விடயத்தை இவ்வாறான எளிய வழிமுறைகளின் மூலம் தீர்த்து விடலாம் என்றில்லை. ஆனால், இது ஓரளவு ஆற்றுப்படுத்தல்களைச் செய்யக் கூடும். ஏற்கனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வடக்குக் கிழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அரசியல் வெளிப்பாடானது – அரசு ஆதரவுத்தரப்புக்குக் கிடைத்திருக்கும் ஆதரவானது – அரசாங்கத்தின் எண்ணத்தை மேலும் வலுவூட்டவே செய்யும். முதன்மைப்படுத்தப்படும் அபிவிருத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்துறை சார்ந்த பொருளாதாரப் பற்றாக்குறைகளை தீர்ப்பதன் மூலம் தன்னுடைய நோக்கினையும் இலக்கினையும் எட்டி விடலாம் என்பதிலேயே அரசாங்கம் குறியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  

இதேவேளை இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுடன் அரசாங்கம் செயற்பட முனையும்போது அது தமிழ்த்தேசிய அரசியலாளர்களுக்குச் சவாலானதாகவே இருக்கும். ஏற்கனவே தமிழ்த்தேசிய அரசியலில் தளம்பல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் சவால்கள் ஏற்படும் – ஏற்படுத்தப்படும் – போது இந்தத் தளம்பல் நிலை மேலும் அதிகரிக்கலாம். இதனை தனக்குச் சாதகமாக்க அரசாங்கம் முனையும்.  

இவையெல்லாம் இன்றைய நிலையில் தெரியும் காட்சிகள். ஆனால், இவற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அது சர்வதேச ரீதியான அரசியல், பொருளாதார உறவுகளும் நடவடிக்கைகளுமாகும். இந்த அரசாங்கத்தோடு பிராந்திய சக்திகளாகிய இந்தியா, சீனா போன்றன எத்தகைய நிலைப்பாட்டையும் அணுகுமுறையையும் கொள்ளப்போகின்றன? அல்லது இவற்றோடு அரசாங்கம் எத்தகைய உறவுகளைப் பேணப்போகிறது? மேற்குலகோடு கொள்ளப்போகும் உறவு? போன்றன இவற்றில் தாக்கம் செலுத்தும்.  

ஆனால், ஏற்கனவே 2010 – 2015 காலப்பகுதியின் ஆட்சி அனுபவங்கள் புதிய அரசாங்கத்துக்கு சில புரிதல்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அதனால் அது தன்னை நிதானமாக நிலைப்படுத்த முயற்சிக்கலாம். அப்படித்தான் தெரிகிறது. குறிப்பாக இந்தியாவையும் சீனாவையும் எதிர்நிலையில் வைத்துக் கையாளாமல் நேர் நிலையில் வைத்துக் கையாள முற்படும் காட்சிகள் தென்படுகின்றன. இதனால் சில அனுகூலங்கள் கிட்டலாம்.  

எல்லாவற்றுக்கும் அப்பால், இதில் சரி பிழைகளை உரிய முறையில் பேசக்கூடிய நிலையில் வலுவான எதிர்த்தரப்புகள் இல்லை என்பது முக்கியமானது. கூக்குரலிடுவது எதிர்த்தரப்பின் அரசியற் பணியல்ல. அறிவு பூர்வமாகவும் நியாயமாகவும் செயற்படுவதே எதிர்த்தரப்புகளுடைய பொறுப்பாகும். அத்தகைய பொறுப்பை எதிர்த்தரப்புகள் உணர்ந்து செயற்பட்டால், அது பயன் விளைக்கும். அப்படியெல்லாம் நடக்குமா என்பதும் கேள்வியே!  

எப்படியோ இன்று இலங்கைத்தீவு நெருக்கடிகளின் மையத்தில் உள்ளது. அரசாங்கமோ பலமானதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

கருணாகரன்

Comments