மனைவியா தெய்வமா? | தினகரன் வாரமஞ்சரி

மனைவியா தெய்வமா?

பங்கு தாவென்ற தம்பியும் தம்பியோடு இன்புற்று வாழாத் தமயனும் வல்லாண்மை பேசும் மனையாளும் இம் மூன்றும் சொல்லாமல் வந்த கூற்றுவன்” இந்த வார்த்தைகளை அச்சிட்டு சட்டம் போட்டு ஒரு வர்த்தகரின் கடையில் சுவரில் மாட்டியிருந்தார்கள். 

சில பொருட்களை வாங்குவதற்காக அந்தக் கடைக்குள் நுழைந்த என்னை அந்த வார்த்தைகள் தான் கவர்ந்தன. எனது குறிப்புப்புத்தகத்தில் தெளிவாக அவற்றை எழுதிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். என்னை எதிர்கொண்ட மனைவி மல்லிகா “வள்" என்று என் மீது பாய்ந்து என்னென்னவோ கூறினாள். எனக்கு கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது! 

மௌனமாக என் அறைக்குள் நுழைந்து குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதிக்கொண்டு வந்த வாக்கியங்களை எண்ணிப்பார்த்து ஆகவேண்டிய காரியங்களை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தேன். உண்மையில் எனக்கு அந்த வாக்கியங்கள் பேருதவி புரிந்ததோடு நல்லதோர் அறிவுரையையும் கொடுத்திருப்பதை எண்ணி நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன். 

தம்பி என்பதனால் தான் அவன் தன் பங்கை கேட்கின்றானா? அண்ணன் என்பதனால் தான் அவன் தம்பியை ஒதுக்குகின்றானா? மனைவி என்பதனால் தான் அவள் வல்லாண்மை பேசுகின்றாளா? என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அந்த வாக்கியங்களை மனதிற்கொண்டு அதன்படியே செயற்படுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். 

என் அப்பா ஒரு வர்த்தகர் அவருக்கு இரண்டு கடைகள் இருந்தன. அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்ததால், மூத்தவனான நானே அந்த இரண்டு கடைகளையும் ஏற்று நடந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தம்பி தயாளனுக்கு வயது பதினைந்து அவன் படித்துக் கொண்டிருந்தான். 

“ஹாட்வெயார்” என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இரும்பு பித்தளை வாகனங்களுக்கும் தேவையான எல்லாமே எங்களிடம் இருந்தன. தம்பி தயாளன் படித்து முடிந்ததும் அப்பா விட்டுச் சென்ற இரண்டு கடைகளில் ஒன்றைத் தனக்குத் தருமாறு அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தான். அவன் கொஞ்சம் முரடன் என்பதால், அம்மா விரும்பவில்லை நானும் மௌனமானேன். 

நோய் என்பது எல்லாருக்கும் சொல்லிக்கொண்டா வருகிறது? என்ன தான் பணம் பட்டம் பதவி என்று இருந்தாலும் நோயில் விழுந்த பின்னர் அவையெல்லாம் பலனைத் தருவதில்லையே? அம்மாவும் பாரிசவாதம் என்ற நோயால் படுத்து கொஞ்சக் காலத்தில் போய்விட்டார்! இப்போது நானும் தம்பியும் தான் எஞ்சினோம். எங்கள் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வேறு பிள்ளைகள் கிடையாது. தம்பி தன் எண்ணப்படி நடந்தான். நானும் ஒதுங்கினேன். காலமும் வேகமாக ஓடியது. 

எங்கெங்கோ சுற்றித்திரிந்து தம்பி ஒரு பெண் பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்! யாருமே திருமணம் முடித்துவிட்ட பின்னர் வேறுபட்டு விடுவது இயல்பு தானே? என்னதான் அண்ணன், தம்பி, அக்கா, தங்கையர் என்று ஒற்றுமையாக வாழ்ந்தாலும், அவரவர் மணமுடித்து வாழும் போது பலவிதமான பிரிவுகள் இயல்பாகவே ஏற்பட்டு விடுவதைத் தவிர்க்க முடியாது. 

தம்பி திருமண முடித்த பின்னர் எங்கள் வீட்டில் இதனை என்னால் நன்றாக உணர முடிந்தது. மேலும் வீட்டை அப்பா அவன் பெயருக்கு தான் எழுதியிருந்தார். நான் ஹோட்டல்களிலும் நண்பர்களது வீடுகளிலும் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்தச் சூழ் நிலையில் தான் கம்பளையில் ஒரு விருந்து வைபவத்தில் மல்லிகா எனக்கு அறிமுகமானாள். 

மூக்கும் முழியுமாக அழகாக இருந்தாள்! துடிப்பும் துள்ளலுமாக அவளது நடை இருந்தது! நீண்ட கருங்கூந்தல்! சிவந்தமேனி. துடுக்குத்தனமான பேச்சு. மிரள மிரள விழிக்கும் கண்கள். இவையெல்லாமே ஒன்று கூடி என்னை அவள் பால் ஈர்த்து விட்டது! அத்தோடு அவளே என்னருகில் ஓடி வந்து என்னென்னவோ கதைத்தாள்! 
நானும் பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டினேன். அவளது அப்பா ஒரு வக்கீல் என்பது பின்னர் தான் எனக்குத் தெரியவந்தது. அவருக்கும்

என்னை பிடித்திருக்க வேண்டும். என்னோடு தாராளமாக கதைத்தார். அவளது அம்மாவும் அப்படித்தான். பக்கத்தில் தான் அவர்களது பங்களாவும் இருந்தது. என்னையும் அழைத்தார்கள். நானும் அடிக்கடி போக ஆரம்பித்தேன். அழகான ஒரு வீட்டை கட்டி அவளையும் கூட்டி வந்து விட்டேன். 

ஆரம்பத்தில் பழகும் போது மிகவும் அன்போதும் ஆதரவோடும் ஒற்றுமையோடும் உயிரையே கொடுப்பது போன்றும் செயற்படும் பெண்கள் மணமுடித்து வீடு வந்து சேர்ந்த கொஞ்ச காலத்தில், நம் உயிரையே வாங்கி விடுவது என்னவோ உண்மை தான்! என் மல்லிகாவும் அப்படித்தான். அப்போதைய மல்லிகா அல்ல இப்போது அவள். 

சிந்தனையிலிருந்து விடுபட்ட நாள் என் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். மல்லிகா அருகில் தென்படவில்லை. வீர்ரென்று வெளியே வந்து என் காரை எடுத்துக்கொண்டு நேராக தம்பி தயாளனிடம் வந்தேன். எதிர்பாராத விதமாக என்னை அங்கே கண்ட தம்பி ஓடிவந்து என்னை வரவேற்றான். அவனது மனைவி மேகலாவும் என் எதிரே வந்து நின்று என்னையும் அவளது கணவனையும் மாறிமாறிப்பார்த்தாள். 

சுமார் பத்து வருடங்களுக்குப் பின் நான் பிறந்து வளர்ந்த வீட்டுக்குப் போனேன். அம்மா அப்பா இருவரதும் பெரிய படங்கள் மின் விளக்குகளில் பளிச்சிட்டன. நான் வந்த விடயத்தை தம்பியிடம் கூறினேன். அவன் அதிர்ந்து போனான்! ஆச்சரிப்பட்டு என்னை நிமிர்ந்து பார்த்தான். 
ஏன் இப்படியொரு முடிவிற்கு வந்தீர்கள் என்று அவன் என்னை பார்த்துக் கேட்பது போலிருந்தது. அவளது பார்வை தம்பியின் மனைவி மேகலா ஒன்றும் விளங்காமல் மிரள மிரள விழித்தாள். எதிரே தெரிந்த சோபாவில் அமர்ந்த நான் அவர்களையும் அமரவைத்தேன் குடும்ப ஒற்றுமையை பங்கு பிரச்சினை பெருமளவில் பாதித்துவிடுமென்பதை அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். 

எல்லோரும் கருதுவது அவரவர்களது நலனை மாத்திரமே என்பதே என் கருத்து. சுயநலம் பலகுடும்பங்களைக் கெடுத்து விடுகின்றது! அதனால் உற்றார் உறவினர் சொந்த பந்த உறவுகள் எல்லாவற்றையும் அது பாதித்தது. மனிதர் தனித்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர் என்பதையெல்லாம் அவர்கள் உணரச்செய்தேன். அண்ணா உங்க விருப்பம் எதுவோ எப்படியே செய்யுங்கோ” என்று தம்பி என்னை பார்த்து கூறினான். 

அவனையும் அவனது மனைவியையும் அழைத்துக்கொண்டு நேராக வக்கீல் நடராஜாவை அணுகி உறுதிப்பத்திரங்களை எழுதி “ஸ்டார் ஹாட்வெயார்” என்று என் பெயரிலிருந்த கடையை என் தம்பியிடம் ஒப்படைத்தேன். அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி! என் கால்களில் விழுந்து வணங்கினான். மேகலாவும் என் கால்களைத் தொட்டுத் தனது கண்களில் ஒற்றிக்கொண்டாள். 

இப்போது எனக்கு ஒரு பெரிய பாரம் குறைந்தது போலிருந்தது. தம்பி தயாளனையும் மேகலாவையும் அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கே வந்தேன். மனைவி மல்லிகா வாசலில் நின்றாள். தம்பியும் மேகலாவும் அவளைக் கண்டதும் சற்றுத் தடுமாறினார்கள். ஏனெனில் அவளது குணம் அவர்களுக்கு நன்கு தெரியும். 

காரினுள்ளிருந்து வெளியே வந்த எங்களை என் மனைவி மாறிமாறிப் பார்த்தாள். ஏதோ ஒரு திருட்டு வேலையை செய்தவன் போல் நானும் கொஞ்சம் தடுமாறினேன். பரவாயில்லை அவள் வல்லாண்மை பேசட்டும்! அவள் என் மனைவி தானே? அவளை உள்ளே அழைத்துச் சென்று எல்லா விடயங்களையும்  அவளிடம் கூறினேன். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி மல்லிகா, “இப்ப தான் உங்களுக்குப் புத்தி வந்ததா?” என்றபடி வாய்விட்டு சிரித்தாள்! நானும் தம்பி தயாளனும் மேகலாவும் வாயடைத்து அதிர்ந்து போய் நின்றோம். இவள் மனைவியா தெய்வமா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை!  

இரா. மோசஸ்

Comments