லங்கா ப்ரீமியர் லீக்; ஐந்து அணிகள் பங்​கேற்பு: தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

லங்கா ப்ரீமியர் லீக்; ஐந்து அணிகள் பங்​கேற்பு: தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு

லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 தொடரின் போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட் சபையினால்  (22) வெளியிடப்பட்டிருக்கின்றது.
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்த எதிர்பார்க்கப்பட்ட லங்கன் ப்ரீமியர் லீக் தொடர், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த வாரம் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் , இந்த தொடரினை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் தொடக்கம் கண்டி, ஹம்பாந்தோட்டை ஆகிய இரண்டு மைதானங்களில் மாத்திரம் நடாத்த தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

அதன்படி, ஐந்து அணிகள் பங்குபெறும் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற நிலையிலேயே, இதன் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.

வெளியிடப்பட்டிருக்கும் போட்டி அட்டவணையின் அடிப்படையில், இறுதிப் போட்டி அடங்கலாக மொத்தம் 23 போட்டிகள் இடம்பெறவிருப்பதுடன் லங்கன் ப்ரீமியர் தொடரின் முதல் போட்டி காலி கிளேடியட்டர்ஸ் மற்றும், கொழும்பு கிங்ஸ் அணிகள் ஆகியவை இடையே, தொடரின் அறிமுக நிகழ்வுடன் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

இதன் பின்னர், நவம்பர் 28ஆம் திகதி வரை லங்கன் ப்ரீமியர் லீக் தொடரின் குழுநிலைப் போட்டிகள் யாவும் ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலேயே நடைபெறவிருக்கின்றன. இதில், தொடரின் முதல் நாள் தவிர்த்து நவம்பர் 28ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இரண்டு குழுநிலை மோதல்கள் இடம்பெறவிருக்கின்றன.
பின்னர், மூன்று நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் தொடரின் எஞ்சிய குழுநிலைப் போட்டிகளும், அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், குழுநிலைப் போட்டிகள் யாவும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதுடன், தொடரின் முதல் அரையிறுதி டிசம்பர் மாதம் 10ஆம் திகதியும், இரண்டாவது அரையிறுதி டிசம்பர் மாதம் 11ஆம் திகதியும் இடம்பெறவிருக்கின்றன.

பின்னர், டிசம்பர் மாதம் 13ஆம் திகதி லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இடம்பெறவிருக்கின்றது. இந்த இறுதிப் போட்டிக்காக மேலதிக நாள் ஒன்றினையும் இலங்கை கிரிக்கெட் சபை ஒதுக்கி வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments