உயிர் காக்கும் ஊரடங்கை உறுதியாகப் பேணுவோம்! | தினகரன் வாரமஞ்சரி

உயிர் காக்கும் ஊரடங்கை உறுதியாகப் பேணுவோம்!

இலங்கையில் கொவிட் 19 பரவல் காரணமாக நேற்றுடன் 20ஆவது மரணம் சம்பவித்துள்ளது. எவ்வாறெனினும், முதல் தடவை ஏற்பட்ட மரணத்தைவிடவும் இம்முறை மிகக் குறைவானதாகும். இதற்குக் காரணம் அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவது தென்றால் மிகையில்லை.

கடந்த முறை ஏற்பட்ட பரவலால் பெற்றுக்ெகாண்ட அனுபவத்தினால், பொது மக்கள் தாமாகவே சுகாதார வழிமுறைகளை மிக இறுக்கமாகப் பின்பற்றுவதைக் காணக்கூடியதாக உள்ளது. சென்ற முறை ஏதோ ஒரு காாரணத்தைச் சொல்லி; ஏதாவதோர் ஆவணத்தைக் காண்பித்துப் பயணங்களை மேற்கொண்டாலும், இம்முறை மக்கள் அரசாங்கத்துக்குப் பூரணமான ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். பொலிஸாருக்குத் தொந்தரவு கொடுக்காமல், பொது மக்கள் தங்களின் பயணங்களைத் தவிர்த்து வருகிறார்கள்.

இதனையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. உலகளவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டபோது உலக அரசுகள், பொதுமக்களின் பங்களிப்பினையே கூடுதலாக எதிர்ப்பார்த்திருந்ததை நாம் அறிவோம். ஆனால், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை மக்களை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்து அரசாங்கத்தின் பங்களிப்புகளைக் கூடுதலாக வழங்கியது என்பதுதான் உண்மை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டுதலின்கீழ் சுகதார வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பொதுமக்களைப் பழக்கப்படுத்துவதற்கான திட்டங்களை அரச அதிகாரிகள், சுகதாரத்துறையினர், பொலிஸார், முப்படையினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனப் பல்வேறு துறையினரும் தத்தமது பொறுப்புகளை மிகக் காத்திரமாக மேற்கொண்டார்கள். அதன் காரணமாகவே இந்த இரண்டாவது அலைக்கான சவாலின்போது மக்கள் தங்களது பொறுப்புகளைச் சரிவரக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியே கொரோனாவில் இருந்து மக்கள் உயிரைக் காக்கும் என்று சுகாதாரத் துறைசார் நிபுணர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்கள்.

கொவிட் 19 தாக்கத்திலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, சமூக விலகல் என்கிறது மருத்துவ நிபுணத்துவம். முதலில் எந்த அறிகுறியும் தலைப்படாது. பதினான்கு நாட்கள் செல்ல வேண்டும். சிலவேளை, அறிகுறி இல்லாமலேயே உயிர் அடங்கியும் போகலாம். 

எனினும், 14 நாள், 21 நாள், 30 நாள், 67 நாள் என்ற அடிப்படையில் இலட்சக்கணக்கானோரைத் துவம்சம் செய்யுமாம் இந்தக் கொரோனா. அதற்கு இத்தாலி நல்லதோர் உதாரணமாகியிருக்கிறது. இப்போது பெல்ஜியம், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் முன்னிலையில் இருக்கின்றன. அமெரிக்காவின் நிலவரம் நாம் அறிந்ததுதான் என்றாலும் அங்கு மரண விகிதம் இப்போதே கட்டு மீறிச்சென்றுவிட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் உலக நாடுகள் பலவற்றில் போரில் ஈடுபட்ட காலகட்டத்தில்கூடஇத்தகைய இழப்புகள் ஏற்படவில்லை.
மேற்குலக நாடுகளில் ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் மரணிக்கும் மக்கள் சமூக விலகலூடேதான் அஸ்தமித்துப்போகிறார்கள். தனியே இருந்து; தனியே இறந்து, தனியே கல்லறைக்கும் செல்லவேண்டிய துயரத்தை ஏற்படுத்தி வருகிறது இந்தக் கொரோனா வைரஸ்! (இப்பொது கொவிட் 19 என்பது அகராதிச் சொல்லாக மாற்றம்பெற்றிருக்கிறது)

நாம் எந்தளவிற்குத் தனிமையைப் பேணுகின்றோமோ அந்தளவிற்கு இந்த வைரஸைத் தூர விலக்க முடியும். இந்த மருத்துவ தத்துவத்தை உணர்ந்துகொண்ட உலக நாடுகள், அதன் குடிமக்களைக் காப்பதற்குப் பகிரதப்பிரயத்தனப்படுகின்றன. வெள்ளைக்காரர்கள் ஒழுக்கமானவர்கள், இறுக்கமானவர்கள் என்று தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்ளும் ஏனைய சமூகத்தவர்கள், இன்று அவர்களின் நாடுகளைப் பார்த்து மூக்கின்மேல் விரல் வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இலங்கைதான்; வேறு எந்த நாடாகவும் இருக்க முடியாது!

சீனாவுக்கு அடுத்தபடியாக 130கோடி சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் இன்னமும் பல மாநிலங்கள் முற்றாக முடக்கிக்கிடக்கின்றன. எனினும், மேல் மாகாணத்தில் நாளையுடன் தொற்றொதுக்கல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படமாட்டாது என்கிறார் இராணுவத்தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சவேந்திர சில்வா.  ஊரடங்குக் காலம் அல்லது தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பின்னர் என்ன நடக்கும் என்று ஆரம்பத்தில் அங்கலாய்த்துக்ெகாண்ட நிலைமையை அரசாங்கம் கட்டுப்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் பொதுமக்களின் பங்களிப்புதான்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு கொரோனா நோயாளியிடமிருந்து 30 நாட்களில் 450பேருக்கு வைரஸ் பரவும். அதே நபரால் 67 நாட்களில் இரு இலட்சம் பேருக்குப் பரவும்! அதிலிருந்து மேலும் 14 நாட்களில் இரண்டு இலட்சம் பேருக்குப் பரவும் என்றாலும் இலங்கையில் கொவிட் 19 பரவலைச் சமூக மட்டத்திற்குச் செல்ல விடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருக்கிறது.

துணிச்சலாகம் உறுதியாகவும் தீர்மானம் எடுக்கக்கூடிய ஜனாதிபதியொருவர் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்குத் தலைமை வகிப்பதால் அரசாங்கத்தால் உறுதியான நடவடிக்ைககளை மேற்கொள்ள முடிகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்குப் புதிய 20 ஆவது திருத்தச் சட்டம் மேலும் வலுசேர்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது நாட்டு மக்களின் தலையாய கடமை. வாழ்வாதாரம், பொருளாதாரம் எனப் பல துறைகளையும் புரட்டிப்போட்டுள்ள இந்தக் கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டெழுவதற்கு ஒரே தேசத்தவர்களாக ஒன்றுபட்டு முன்வரவேண்டியது ஒவ்வோர் இலங்கையரின் கடமையாகும். தனிப்பட்ட ரீதியிலும் சமூகத்திலும் நாட்டிலும் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையிலிருந்து கடந்து வருவதற்கு, மருத்துத்துறையினரும் அரசும் அடிக்கடி வழங்கும் ஆலோசனைகளையும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்களையும் இறுக்கமாகப் பேண வேண்டும். அப்போதுதான் உலகத்தில் முதன்மை நாடாகத் தொடர்ந்து திகழ முடியும்.

Comments