இறந்தும் இறவா மனிதன் | தினகரன் வாரமஞ்சரி

இறந்தும் இறவா மனிதன்

பாடும் நிலா! பாலுவே நீ
பிரிந்தாலும் புவியை விட்டு
பிரிய வில்லை உன் நினைவுகள் உன்
பிரியமான ரசிக நெஞ்சங்களில்!
பொன் வண்ணக் குரலால்
பூ உலகை இன்னும் நீ ஆளுகிறாய்! உன்
பாட்டுக்களாயே பல்லாயிரம்  நெஞ்சங்களில்
பல நூறு ஆண்டு காலம் நீ உயிர் வாழ்வாய்!
பட்டி தொட்டி எல்லாம் உன்
பாட்டே பட்டையைக் கிளப்பும்!
படித்தவர் முதல் பாமரர் வரையிலும் மனப்
பாரத்தை அவை இறக்கி வைக்கும்!
திரும்பும் திசை எல்லாம்
உன்பாட்டே ஒலிக்கும்
விரும்பி ரசித்த மனங்கள் இன்றும்
தாராளமாகவே அதை கேட்கும்!
வருந்தும் மனங்களுக்கு அவை
ஆறுதல் அளிக்கும்! மன
வருத்தம் துடைத்தே தேறுதல் வழங்கும்!
வருடங்கள் கடந்து போனாலும் உன்
வண்ணக் கானங்கள் விருந்து படைக்கும்!
பாடும் நிலா பாலுவே நீ
பன்முக திறமை கொண்டே
பாரினில் வாழ்ந்தாய்!
பல்லாயிரம் ரசிகர் இதயத்தில்
இருக்கை இட்டு அமர்ந்தாய்
சங்கீதம் கற்காமலே நீ
சரித்திரம் படைத்தாய் உன்
சாரீரத்தாலே சாகா வரம் பெற்று
சரித்திர பொன்னேட்டில்
-          உயிர் வாழ்கிறாய்!
காதலையும் வளர்த்தாய் உன் பாட்டால்
கவலைகளையும் களைந்தாய்!
தேனூறும் கானம் தந்து இசைத்
தாகம் தீர்த்தாய்
சோகம் மறக்க இதய
சுமை இறக்க சுகராகம் பல தந்தாய்
சங்கடங்கள் விலக்கி
சந்தோஷ வெள்ளத்தில் நீந்த
அள்ளித் தந்தாய்!
வசந்த கானங்கள் பாடி
வாழ்வோடு கலந்தாய்
இசையாய் வந்து வாழ்வில்
இன்ப வெள்ளம் தந்து
வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டாய்!
இறவா வரம் பெற்றவனே நீ
இல்லை என்ற துன்பம்
எமக்கு இல்லை! நீ
இன்னும் இருக்கிறாய்
இசையாய் கவியாய்
கானமாய் கலையாய் காதலாய்
இரசிக நெஞ்சங்களின் இதயத்தில்!

காரைதீவு வி.ஏ. வசந்தராணி

Comments