சில்லறைக் காற்றில் பறந்த டிரஸ்ட் வீடுகள் | தினகரன் வாரமஞ்சரி

சில்லறைக் காற்றில் பறந்த டிரஸ்ட் வீடுகள்

கண்டி மாவட்டத்தில் உடபலாத்த பிரதேசத்தில் தொழுவை அரசாங்க அதிபர் பிரிவில் புப்புரஸ்ஸ வீடென தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக் கூரைகள் அண்மையில் சிறிய ஒரு சில்லறை காற்றில் பறந்து போனது.  

16.06.2016 ஆம் திகதி அன்றைய டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் புத்திரசிகாமணியால் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதே இவ் வீட்டுத்திட்டம்.  

ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 வீடுகள் கட்டப்பட்ட வேண்டும். ஆனால் 34 வீடுகளே கட்டப்பட்டுள்ளன.  

கடந்த சில வருடங்களாக வீடமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களே மேசன் வேலைகளையும் மேற்கொண்டனர்.  

கூரை பறந்த வீடுகளுக்கு அருகில் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய லயன்களும் தற்காலிக கூடாரங்களும் ஏன் கொழுந்து நிறுக்கும் கூடாரங்களும் கூட காற்றில் பறக்கவில்லை. அந்த அளவுக்கு இந்த புதிய வீடுகள் உறுதியற்றவை என்பது இதன் மூலம் தெரிகிறது அல்லவா?  

டிரஸ்ட் நிறுவனம் தோட்ட நிர்வாகத்திடம் கட்டுமான பணிகளை ஒப்படைத்ததாகவும் தோட்ட நிர்வாகம் மிகத் தரம் குறைந்த வகையில் வீடுகளை அமைத்து வருவதாகவும் அறியமுடிகிறது. இக் காற்றில் 8 வீடுகளின் கூரைகள் முழுமையாகவும் 5 வீடுகளின் கூரைகளில் ஒரு பகுதியும்  பறந்துள்ளன.  

கூரைகள் காற்றில் பறந்தமைக்கு தோட்ட நிர்வாகமும் டஸ்ட் நிறுவனமும்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். மலைகளில் அமைக்கப்படும் வீடுகளின் கூரைகளை காற்று பதம்பார்க்கும் என்பது தெரிந்த விஷயம். எனவே அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அல்லவா கூரைகளை உறுதியாக அமைத்திருக்க வேண்டும்! சில்லறைக் காற்றிலும் கூரைகள் பறக்கத்தானே செய்யும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.  

ஆர்.நவராஜா
(படங்கள்: தெல்தோட்டை தினகரன் நிருபர்)

 

Comments