3 புதுமுக வீரர்களை அணியில் இணைத்துள்ள பாகிஸ்தான் | தினகரன் வாரமஞ்சரி

3 புதுமுக வீரர்களை அணியில் இணைத்துள்ள பாகிஸ்தான்

சுற்றுலா சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  (29) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள முதல் போட்டிக்கான குழாத்தின்படி, அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பாபர் அஷாம், அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பாபர் அஷாம் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் ரி 20 போட்டிக்கான பாகிஸ்தான் அணிக்கான தலைவராக செயற்பட்டிருந்த போதும், முதன்முறையாக பாகிஸ்தான் ஒருநாள் அணியை வழிநடத்தவுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை புமுதுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் மூஷா, மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் குஷ்டில் ஷாஹ் மற்றும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் காதீர் ஆகியோரை சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இதேநேரம், பாகிஸ்தான் ரி 20 அணிக்காக அறிமுகமாகி, இதுவரையில் 5 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள ஹரிஸ் ரஹூப் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான புதுமுக வீரர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக பிரகாசித்துவரும் இமாம் உல் ஹக், பக்ஹர் ஷமான், ஹரிஸ் சொஹைல், சஹீன் அப்ரிடி, மொஹமட் ரிஷ்வான் மற்றும் இமாட் வசீம் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், முன்னணி அனுபவ வீரர்களான மொஹமட் அமீர், சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் அபீஸ் ஆகிய வீரர்களுக்கு முதல் போட்டிக்கான குழாத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணி

இமாம் உல் ஹக், அபிட் அலி, பக்ஹர் ஷமான், பாபர் அஷாம் (தலைவர்), ஹரிஸ் சொஹைல், மொஹமட் ரிஷ்வான், இப்திகார் அஹமட், குஷ்டில் ஷாஹ், பஹீம் அஷ்ரப், இமாட் வசீம், உஸ்மான் காதீர், வஹாப் ரியாஷ், சஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரஹூப், மூஷா கான்

Comments