அபிவிருத்தியே எனது இலக்கு அதனாலேயே 20ஐ ஆதரித்தேன் | தினகரன் வாரமஞ்சரி

அபிவிருத்தியே எனது இலக்கு அதனாலேயே 20ஐ ஆதரித்தேன்

அபிவிருத்தியே எனது இலக்கு அதனாலேயே 20ஐ ஆதரித்தேன்-A Aravind Kumar

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார்

எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.  குறைந்தது ஒரு அரச தொழில் வாய்ப்பை கூட என்னால் பெற்றுக்கொடுக்க இயலாது. புதிய பாராளுமன்ற உறுப்பினராக நியமனமானதன் பின்னர் கடந்த 3 மாதத்தில் காவல் நிலையங்களிலும், அரச அலுவலகங்களிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அணுகியபோது அதற்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையே தோன்றியது. அதனாலேயே 20ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறுகின்றார் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார். அதனால் மலையக அரசியலில் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் அவர் தனது நிலைப்பாட்டை தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுக்கு விளக்குகின்றார்...

கேள்வி: இலங்கையின் தேசிய அரசியலில் பேசப்படும் நபராகி விட்டீர்கள். உங்களை திட்டுபவர்கள்தான் அதிகம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஏன் தோன்றியது?

பதில்: எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து வந்த இந்த மூன்று மாத காலத்தில் நான் மெல்ல மெல்ல செல்லாக்காசாக மாறி வருவதை உணர்ந்தேன். எனது அரசியல் பயணம் அபிவிருத்தியை இலக்காக கொண்டு அமைந்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆட்சியின் பங்காளராக இருந்த நாம் ஆட்சி இறுதி வரை பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டோம். பதுளை மாவட்டத்தில் நான் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளேன். கல்வி அபிவிருத்தி, சமூக நலன் பேணும் வேலைத்திட்டங்கள் என்பவற்றில் எனது பங்களிப்பு அளப்பரியது. எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதை நான் வெளிப்படுத்தியிருந்தேன்.

இவ் ஆவணம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இம்முறை தேர்தலிலும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே வெற்றி பெற்றேன். தேர்தல் வெற்றியில் எனக்கு கிடைத்த வாக்குகளில் 10வீதமான வாக்குகளே நான் சார்ந்த தொழிற்சங்கம் சார்ந்ததாக இருந்திருக்கும். ஏனைய வாக்குகள் அரவிந்தகுமார் என்ற தனிநபரின் செல்வாக்கை அடிப்படையாக கொண்டு அளிக்கப்பட்ட வாக்குகளாகும். எமது கட்சி தேர்தலில் தோல்வியை தழுவியதால் எதிர்பாராத விதமாக நாம் எதிர்க்கட்சியில் அமரவேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. குறைந்தது ஒரு அரச தொழில் வாய்ப்பை கூட என்னால் பெற்றுக்கொடுக்க இயலாது. புதிய பாராளுமன்ற உறுப்பினராகிய கடந்த 3 மாதத்தில் காவல் நிலையங்களிலும், அரச அலுவலகங்களிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தொடர்புகளை மேற்கொண்டபோது அதற்கு உரிய தீர்வு கிடைக்காத நிலை தோன்றியது.

எமது மக்களின் பிரச்சினைகள் மறுபட்ட கோணங்களில் அணுகப்பட வேண்டியவை. அதற்கு ஆளும் தரப்பு அரசாங்கத்தின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்தேன். பெரும்பான்மை சமூக மக்கள் அதிகமாக வாழும் பதுளை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ் மக்கள் குறைவாகவே உள்ளனர். இம்மக்களின் பிரதிநிதியாக ஆளும் தரப்பில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதை மனதிற் கொண்டுதான் நான் 20ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன். இதில் தவறு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நான் சார்ந்த மலையக மக்கள் முன்னணியின் கட்டுப்பாட்டை மீறவில்லை. 20ஆம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களிப்பது தொடர்பாக மலையக மக்கள் முன்னணி எந்த முடிவையும் எடுக்கவில்லை.

கேள்வி: இதன் மூலம் அரவிந்தகுமார் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டாரா?

பதில்: நிச்சயமாக இல்லை, என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தான் என்னை தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர். எனது இந்நிலைப்பாட்டை பலர் ஆதரித்து வாழ்த்தி வருகின்றனர். என்னை விமர்சிப்பவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாளை போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்பர் அவர்களுக்கும் என் பணி தொடரும். மலையகத்தில் மாற்றுக் கட்சி அரசியல் செய்தவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டு ஆதரித்த சம்பவங்கள் நிறையவே அரங்கேறி இருக்கின்றன. மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதை நீங்கள் உணரும் நாள் தொலைவில் இல்லை.

கேள்வி: அறிவுரைப்படித்தான் வாக்களிக்க முடிவுசெய்ததாகச் சொல்கிறார்களே!

பதில்: நிச்சயமாக இல்லை. அரசியலில் மக்கள் நலன் கருதி சுயமாக முடிவெடுக்க கூடிய தற்றுணிவும், அனுபவ அறிவும் எனக்கு இருக்கிறது. எனக்கு வாக்களித்த மக்கள் நலன் கருதி மனசாட்சியுடன் எடுக்கப்பட்ட முடிவு இது. இதில் யாருடைய அழுத்தங்களும், ஆலோசனைகளும் எனக்கு இருக்கவில்லை, என்பதே உண்மை.

கேள்வி: பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த பின் செந்தில் தொண்டமானை அரசு கைவிடவில்லை. ஊவா மாகாணத்துக்கான பிரதமரின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சராகவும் வரலாம் என்கிறார்கள். ஆதரவாக வாக்களித்ததன் மூலம் ஊவாவில் தொண்டமானுக்கு சமமாக வளர முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்: அரசியலில் யாருக்கு யாரும் போட்டியாக வரமுடியாது என்றே நான் கருதுகிறேன். மக்கள் பணியிலே இது தங்கியுள்ளது. உதாரணமாக 2015 இல் ராஜபக்ஷ குடும்பத்தினரை எதிர்க்கட்சியில் அமரவைத்த மக்கள் 2020இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கி அழகு பார்க்கின்றனர். எனவே மக்கள் பணியை அடிப்படையாக கொண்டும் அவர்களின் மனநிலையை கொண்டும் எல்லாம் தீர்மானிக்கப்படும்.

​கேள்வி: பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்களே!

பதில்: இது எனது சமுக நலன் சார்ந்த முடிவை கொச்சைப்படுத்தும் வதந்திகளாகும். பணம் கொடுக்கப்பட்டதாக பேசுவது தவறு. பணம் கோடிகளில் கேட்கப்பட்டதாக பேசுவதே பொருத்தமாக இருக்கும். நான் சார்ந்த பதுளை மாவட்டத்திற்கும், மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா உட்பட ஏனைய மாவட்ட மலையக மக்களின் அபிவிருத்தி, நலனோம்பல் வேலைத்திட்டத்திற்காக கோடிக்கணக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என அரசாங்க தரப்புடன் பேரம் பேசினேன்.

நான் பணத்திற்கு அடிமையாகி பணி செய்ததாக எவரும் என்னை குறைகூறி விரல் நீட்ட முடியாது. கடந்த காலங்களில் பல்வேறு அரச நியமனங்களை இளைஞர், யுவதிகளுக்கு பெற்று கொடுத்தேன். கோடிக்கணக்கான நிதியில் அபிவிருத்தி பணி செய்தேன். இவற்றை ஏனையோர் போல விலைக்கு விற்றேன் என எவராலும் குற்றம் சுமத்த முடியாது. இவை அனைத்தும் நயவஞ்சக விமர்சனங்களாகும். எல்லாவற்றுக்கும் அபிவிருத்தி பணிகள் மூலம் எதிர்காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பேன் என்றார்.

நேர்காணல்: ஆ.ஜோன்சன்

Comments