தனிமைப்படுத்தலும் அந்நியப்படுத்தலும்! | தினகரன் வாரமஞ்சரி

தனிமைப்படுத்தலும் அந்நியப்படுத்தலும்!

இலங்கையில் கொவிட் 19 மரணமானது நேற்று சனிக்கிழமையுடன் (நவம்பர் 7) 30 ஆக உயர்வடைந்துள்ளது. முப்பதாவதாக உயிரிழந்தவர் 23 வயது வாலிபர் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வைரஸ் தொற்றானது வயது வித்தியாசம் இல்லாமலும் பரவத்தொடங்கித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.  

எவ்வாறாக இருந்தாலும் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தொற்றொதுக்கல் ஊரடங்குச் சட்டம், நாளைய தினம் நீக்கப்படலாம் என்று இராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார். அது மீண்டும் அமுல்படுத்தப்படுமா என்பது வேறு விடயம். ஆனால், நாட்டை தொடர்ந்தும் முடக்க முடியாது. ஆகவே மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுவதற்குப் பழக்கப்பட வேண்டும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். சுகாதார அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நாட்டை முன்கொண்டு செல்ல முடியும். சரியான முறையில் முகக்கவசத்தை அணிதல், கைகளைக் கழுவுதல் போன்ற விடயங்களை மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.  

ஊரடங்குச் சட்டம் அமுலானால்தான் மக்கள் வீட்டுக்குள் இருக்கின்றார்கள். ஆனால், மக்கள் இந்த விடயத்தை அவதானமாகக் கடைபிடிக்க வேண்டும். நாளாந்தம் உழைத்து வாழ்கின்றவர்கள் தொடர்பாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாட்டை முடக்கினால், அவ்வாறான நாளாந்த உழைப்பாளர்கள் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதற்குப் பல வருடங்கள் செல்லும்.  
ஜனாதிபதியானாலும், அமைச்சர்களானலும் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.  

நாட்டை முடக்க முடியாது. பாடசாலைகளை இலகுவதாக மூடுவதற்கு உத்தரவிட முடிந்தாலும் பாடசாலைகளை மூடிவைப்பதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.  
அநேரம், நாட்டில் பீடித்துள்ள கொரோனாவின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என்று சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருக்கிறார்.அத்தோடு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலானது, ஓரளவு அபாயநிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டில் நேற்று வரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், பலர் வேறு வேறு தொற்றுள்ள நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் அதே சந்தர்ப்பத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணாயிரம் வரை அதிகரித்திருக்கிறது. எவ்வாறாயினும் இன்னும் ஆறாயிரம்பேர் வரை சிகிச்சை பெற்றுக்ெகாண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சுகதேகிகளாக வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதில் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

ஆகவே, நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களாக இருந்தாலும், சந்தேகத்திற்கு உள்ளானவர்களாக இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டு வந்தவர்களாக இருந்தாலும் சமூக மட்டத்தில் அவர்களை அந்நியப்படுத்தும் போக்கு முற்றாகக் களையப்பட வேண்டியது கட்டாயமாகும். அவர்களையும் சக மனிதர்களாக முன்னர்போல் மதிக்க ​வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும். 

அவ்வாறான அந்நியப்படுத்தல் அறிகுறிகள் சமூக மட்டத்தில் வௌிப்படுகின்றபோதுதான், இந்த நோயின் தாக்கம் ஒரு தனி மனிதரிலிருந்து சமூக மட்டத்திற்குச் சென்று பல்வேறு உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. 

அந்தத் தாக்கத்தைத் தாங்கிக்ெகாள்ள முடியாதவர்களாக அல்லது சகித்துக்ெகாள்ள முடியாதவர்களாக உணர்வோர் தங்களது உண்மையான தகவல்களை மறைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள். 

இதன் காரணமாகவே தங்களின் உண்மையான பெயர் விபரங்களையும் முகவரியையும் வழங்காமல் போலியானவற்றை வழங்கிச் சென்றுவிடுகின்றனர். பின்பு அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்க வேண்டியவர்களை, தப்பிச் சென்றவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்தவேண்டியிருக்கிறது. எனவே. இந்த நிலையை மாற்றுவதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியாக வேண்டும். 

நாட்டில் முதன் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டபோது ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதன் நேரடித்தாக்கம் ஏற்பட்டது. நாடு முடக்கப்பட்டபோது ஏனைய பிரதேசத்தின் மக்களும் நோயின் தாக்கத்தைப் புரிந்துகொண்டார்கள். அதனால், அவர்கள் இம்முறை மிகுந்த அவதானத்துடன் செயற்படுகின்றனர். ஆனால், அநேகமான பகுதிகளில் இது முதலாவது முறை. எனவே, அந்தப் பிரதேச மக்களுக்கு மீண்டும் மீண்டும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றும் நடைமுறை பற்றித் தௌிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். தனிமைப்படுத்தல் என்பது ஓர் அந்நியப்படுத்தும் செயற்பாடு அல்ல என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

Comments