அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; உலக நாடுகளின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வாய்ப்பாக அமையுமா? | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; உலக நாடுகளின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வாய்ப்பாக அமையுமா?

நவம்பர் மூன்றாம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அந்நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. தேர்தல் நடைபெற்று நான்கு நாட்களாகின்ற போதிலும் இலங்கை நேரப்படி ஏழாந்திகதி காலை பதினொரு மணி வரையிலும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளிவந்து வெள்ளை மாளிகைக்கு செல்லப்போவது யார் என்னும் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை. 91 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில் மொத்த வாக்குகளில் 50.53 சதவீத வாக்குகளை ஜனநாயக்கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் 47.83 சதவீதமான வாக்குகளை குடியரசுக்கட்சி வேட்பாளரும் பதவி வகிக்கும் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பும் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்தமாக 538 தேர்தல் வாக்காளர் குழாம்கள் (electoral colleges -−- ஏறத்தாழ நமது தேர்தல் தொகுதிகளைப் போல) உள்ளன. இவற்றுள் 270 இல் வெற்றி பெறுபவர் தேர்தல் வெற்றியாளராவார். இப்போதைய நிலவரப்படி பைடன் 253 குழாம்களிலும் ட்ரம்ப் 214 குழாம்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  

தேர்தல் இடம் பெறுவதற்கு நெடுநாள் உள்ளபோதே தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக வராதபட்சத்தில் அதை எற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தேர்தலில் முறைகேடுகள் இடம் பெறப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்கத் தேர்தல் முறைமையின் நம்பகத் தன்மையினை முற்றிலும் கேலிக்குள்ளாக்கும் இக்கருத்துபற்றி அப்போது பெரிதாக அலட்டிக் கொள்ளப்படவில்லை. அதிபருடைய உத்தியோகபூர்வமான உரைகள் கூட தொழில்சார் வகையிலன்றி தெருவில் பேசப்படும் பேச்சுவழக்கில் அமைந்திருந்தமை இதற்கொரு காரணமாக இருக்கலாம்.  

ISIS அமைப்பின் தலைவர் அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டதை அவர் அறிவித்த விதம் தொழில்சார் தன்மையற்ற அடாவடித்தனமான அவரது பேச்சுக்கு நல்லதொரு சான்றாகும். தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு சாதகமாக ஆரம்ப முடிவுகள் அமைந்தபோது புளுகத்தில் முந்திரிக் கொட்டை மாதிரி நடைபெற்று முடிந்த தேர்தலில் தாமே வெற்றிபெற்று விட்டதாக ஜாலியாக அறிவித்துக் கொண்டார். ஆனால் போகப்போக தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளிவர அடிவயிற்றில் கலக்கம் ஏற்படத் தொடங்கியது. எதிர்க்கட்சி வேட்பாளர் படிப்படியாக முன்னேற்றம் காணத் தொடங்கிய நிலையில் ஏற்கெனவே தான் தயாராக வைத்திருந்தசதிவேலைக் கோட்பாட்டை(conspiracy theory) எடுத்துவிடத் தொடங்கினார்.  

சட்டபூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குகளின்படி தாமே வெற்றியாளர் எனவும் சட்டபூர்வமற்ற வாக்குகளால் தமது வெற்றி பறிக்கப்பட்டு வருவதாகவும் எனவே உடனடியாக வாக்குகள் எண்ணப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தபால்மூல வாக்குகள் தேர்தல் முடிவடைந்த பின்னரும் பதிவு செய்யப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். அமெரிக்க நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் அவரது தரப்பினரால் பதிவு செய்யப்பட்டன. ஆனால் சில நீதிமன்றங்கள் வழக்குக்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென வழக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டன. பொதுவாகத் தேர்தல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சி வேட்பாளர்களாலேயே முன்வைக்கப்படுவது வழக்கம். உலகின் அதிசக்திவாய்ந்த பதவியாகிய அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் அதிகாரத்தில் இன்னும் இருக்கும் ஒருவர் தனது நாட்டின் தேர்தல் நடைமுறைபற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊகத்தின் அடிப்படையில் முன்வைப்பது மிகமோசமான முன்னுதாரணமாகவே இருக்கும். அவரது கூற்று உண்மையாயின் அது அவரது நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்தும்.  

அமெரிக்க அதிபரின் ஊடக மாநாட்டை நேரலையாக ஒளிபரப்பிய ஊடகங்கள் அவரது பேச்சின் உள்ளடகத்தின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரது பேச்சை ஒளிபரப்புவதை இடைநடுவில் நிறுத்திவிட்டன. 

தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் ஜனாதிபதி அந்த நாட்டின் தேர்தல் நடைமுறையின் மீது குற்றம் சுமத்துவது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கோபத்தைத் தூண்டியுள்ளது. கையிலிருந்த விளையாட்டுப் பொருளை ஒருவர் பறித்துவிட்ட நிலையில் கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டு அழும் ஒரு பாலர் வகுப்புச் சிறுவனைப்போல ட்ரம்ப் புரண்டு புரண்டு அழுவதாக ஓர் ஊடகம் கூறியது. சுட்டெரிக்கும் வெய்யிலில் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்ட ஒரு ஆமை சூடுதாங்காமல் கால்களை மேலே உயர்த்தி துடிப்பதைப் போல ட்ரம்ப் நிலைதடுமாறி அலறுவதாக பிரபல ஊடகவியலாளர் ஒருவர் விமர்சித்தார். ஒரு மூன்றாம் உலக நாட்டின் அரசியல்வாதியைவிட மோசமாக நடந்துகொள்வதாக கடும் விமர்சனங்கள் வந்தவண்ணமுள்ளன. வெள்ளை மாளிகைக்குச் செல்வது பைடனா ட்ரம்பா என்பது குறித்துத் தமக்கு அக்கறையில்லை எனவும் ஆனால் அமெரிக்காவில் ஜனநாயக விழுமியங்களும் நடைமுறைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமக்கு அக்கறை இருப்பதாகவும் ஐரோப்பிய நாடொன்றின் தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.  

தற்போது எதிர்கட்சி வேட்பாளர் பைடன் படிப்படியாக வெற்றிக் கம்பத்தை நெருங்கிவரும் நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ளக் கூடாது எனவும் ட்ரம்ப் கூறுகிறார். தேர்தல் முடிவுகள் அரைகுறையாக வந்த நிலையில் தம்மைத்தாமே வெற்றியாளர் என ட்ரம்ப் அறிவித்ததையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தம். அத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தாம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அறிவித்துள்ளமை வெள்ளை மாளிகை நிருவாகத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சிக்காரர்களும் தற்போது அவரது நடவடிக்கைகள் பற்றி அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அதன் மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அமெரிக்க இரகசிய பாதுகாப்புச் சேவைப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.  

தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் கூட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உடனடியாக நிருவாகம் எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. தேர்தல் முடிவுகளின்படி பைடன் வெற்றிபெறும் பட்சத்தில் யாராவது ட்ரம்புக்கு நல்லபுத்தி கூறி அமைதியான முறையில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுப்பதே அமெரிக்க ஜனநாயக பாரம்பரியங்களுக்கு நல்லது. அல்லது இதே அமெரிக்க உதாரணத்தைப் பின்பற்றி அதிகாரப் பேராசை கொண்ட அரசியல்வாதிகள் ஏனைய நாடுகளிலும் ஜனநாயக விழுமியங்களுக்கு சவால் விடுக்கலாம்.  

நடந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் ட்ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமன்றி உலகப் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. கொவிட் 19 கொள்ளை நோய் குறித்த அமெரிக்க அதிபரின் பார்வைகள் பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக நோய்ப்பரவல் தீவிரமாக ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரிய தொழிலதிபர் என்பது தெரிந்ததே.

அவர் பெருமளவில் வரி ஏய்ப்புச் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. வெள்ளையின அமெரிக்கர்களுக்கு சார்பானதும் கறுப்பின அமெரிக்கர்களுக்கு எதிரானதுமான ட்ரம்பின் நிலைப்பாடுகள் அவரை ஒரு இனவாதியாக இனங்காட்டியது. இதனால் கறுப்பு அமெரிக்கர்களும் வெள்ளையர் தவிர்ந்த ஏனைய அமெரிக்கர்களும் பெருமளவில் இத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அவ்வாக்குகளில் மிகப்பெரும்பான்மையானவை ட்ரம்புக்கு எதிராகவே அளிக்கப்பட்டுள்ளன. எனவே பைடன் வெற்றிபெறும் பட்சத்தில் அதற்கு காரணமாக இருக்கக் கூடியவர்கள் கறுப்பினத்தவர்களே.  

இத்தேர்தலில் எவர் பதவிக்கு வந்தபோதிலும் சீனா குறித்த அவர்களின் நிலைப்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. ஆனால் அமெரிக்காவின் கடும் போக்கில் சற்று தளர்வான தன்மையும் உலகநாடுகளின் பொருளாதார முன்னேற்றங் குறித்த கரிசனைகளும் மாற்றமடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.  

உலகம் பூராகவும் ட்ரம்ப் அவர்களுக்கு ரசிகர்கள் உள்ளது போலவே இலங்கையிலும் அவருக்கு இரசிகர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் வரும் வலைப்பதிவுகளை நோக்கும் போது தெளிவாகத் தெரியும் விடயம் என்னவெனில் இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்கொடி துாக்கும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலானோர் ட்ரம்பின் ரசிகர்களாக இருப்பதுதான்.
ஆனால் அதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்.

Comments