திமிங்கிலங்கள் கரையை நோக்கி வருவது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

திமிங்கிலங்கள் கரையை நோக்கி வருவது ஏன்?

மனிதர்களுக்கு கேட்காத மொழியில் உரையாடும் திமிங்கிலங்கள்

உலகில் இயற்கையின் படைப்பு விசித்திரமானது; ஆச்சரியமானது; அபரீதமானது. மனிதன் நினைத்துப் பார்க்க முடியாத பலவற்றை இயற்கை எமக்கு கொடுத்துள்ளது. அவ்வாறான ஆச்சரியங்கள் பல இந்த பூமியில் கொட்டிக்கிடக்கின்றன. 

அவற்றில் ஒன்று தான் கடல்வாழ் உயிரினமான திமிங்கிலங்கள். மிகப் பெரிய மீனினமான திமிங்கிலம் ஏனைய மீன்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. 

இதில் பல வகைகள் உள்ளன. மிகப் பலம்வாய்ந்த மீனினமாக இவை காணப்படுவதுடன் இது ஒரு பாலூட்டி வகையை சேர்ந்ததாகும். ஏனைய மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதன் மூலமே இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் திமிங்கிலங்கள் மட்டுமே குட்டியிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. 

உலகில் அழிந்து வரும் இனங்களில் உள்ள திமிங்கிலமானது மிக நெருக்கமான சமூக உணர்வுடைய விலங்காக உள்ளது. இதனை 'கடல் மாலுமிகள்' எனவும், மிக வேகமாக தனது இரையை வேட்டையாடுவதால் 'கடல்புலிகள்' எனவும் குறிப்பிடுகின்றார்கள். 

திமிங்கிலங்கள் கடந்தவாரம் இலங்கையின் பாணந்துறை கடற்பரப்பில் அதிகளவில் கரையொதுங்கியிருந்தன. இவற்றை மீள கடலுக்குள் தள்ளுவதற்கு கடற்படையினர் மற்றும் கடலோர காவற்படையினர் போராடியிருந்தனர். 

எனினும் அவற்றில் இரண்டு திமிங்கிலங்கள் உயிரிழந்திருந்தன. இந்நிலையில் இத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதேநேரம் இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியமை மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தன. 
இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. அதாவது வடக்கில் சில இடங்களில் கடல்நீர் உட்புகுந்தமையாலும் இவை இரண்டையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் குறித்து இலங்கை தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் (NARA) சமுத்திரவியல் பிரிவின் தலைவர் கணபதிப்பிள்ளை அருளானந்தத்துடன் தொடர்புகொண்டு வினவினோம். 
அவர் பின்வருமாறு கூறினார். 

இது தொடர்பாக பார்ப்பதற்கு முன்னர், நாம் திமிங்கிலங்களின் இயல்பு தொடர்பாக விளங்கி கொள்ள வேண்டும். திமிங்கிலங்கள் பறவைகளை போல இரையை தேடி இடம்பெயரக்கூடிவை / வலசை செல்லக்கூடியவை. 

இவற்றின் இடப்பெயர்வுகளானது கடலுக்குள் உள்ள காந்தப்புலத்தினை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது. காந்தப்புலம் என்பது வேறு, புவியீர்ப்பு விசை என்பது வேறு. வௌவால்கள் இரையை கண்டுபிடிப்பது போல திமிங்கிலங்கள் காந்தப்புலத்தின் மூலமே இரையை கண்டுபிடிப்பதுடன் தமது இடப்பெயர்வையும் மேற்கொள்கின்றன. 

இவை நுரையீரல் - சுவாசப்பை ஊடாக சுவாசிக்கின்றன. இவற்றின் சுவாசப் வை முதுகின் மீது இருக்கும். கடலில் மேல்மட்டத்தில் இவை செல்லும் போது நீர் பீச்சியடிப்பதை அவதானிக்க முடியும். அதேநேரம் முக்கியமான மற்றொரு விடயம் இவை மிகச் நெருக்கமான சமூக உணர்வு கொண்டவையாகும். 

மனிதர்களை விட இரண்டு தலைமுறை முற்பட்டதாக இவை உள்ளன. அதேநேரம் மனிதர்களை போல உரையாடவும், சமூக உணர்வுடனும் செயற்படுகின்றன. இவற்றுக்கு தலைவர் என்ற வகையில் ஒரு மீன் இருக்கும். அவற்றின் வழிநடத்தலிலேயே இவை செயற்படுகின்றன. 
திமிங்கிலங்கள் மனிதர்களை போல உரையாடக்கூடியவை. ஆனால் அதன் சத்தம் மனிதருக்கு கேட்காது. ஏனெனில் அதன் ஒலியின் கேட்கக் கூடிய அளவு 5 டெசிபிள் ஆகும். எனவே அது மனிதர்களுக்கு கேட்காது. 

இந்நிலையில் இலங்கையில் தென்மேல் பருவக்காற்று காலத்தில் தென் பகுதி கடலின் ஆழ்மட்ட நீர் மேல்நோக்கி வருவதால், அதிகளவான இரைகள் அங்கு கிடைக்கும். இவற்றை தேடியே திமிங்கிலங்கள் இங்கு வருகின்றன. திமிங்கிலங்கள் பொதுவாக கணவாயை அதிகமாக விரும்பி உண்கின்றன. 

இவ்வாறு இரைகளை தேடிவரும் திமிங்கிலங்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சி காற்று தொடங்கியதும் மீண்டும் அவை இங்கிருந்து திரும்பிச் செல்லத் தொடங்கும். 

இலங்கையின் மேற்கு கடற்பரப்பினுடாக இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு சென்று அங்கிருந்து அரேபிய குடாவூடாக திரும்பி அரேபிய கடலுக்குள் நூழைந்து அங்கிருந்து ஓமான் ஊடாக அவை செல்லும். 

திரும்பிச் செல்லும் போது அவற்றுக்கு பிடித்தமான உணவு இடையிடையில் தென்பட்டால் அவற்றை அங்கு நின்று உண்டுவிட்டே செல்லும். அந்தவகையில் இலங்கையில் உள்ள மூன்று முக்கிய கடல் பள்ளதாக்கில் பாணந்துறையில் உள்ள பள்ளத் தாக்கும் முக்கியமானது. (அதனை தவிர மாத்தறை தெவிநுவர மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கடல் பள்ளத் தாக்குகள் உள்ளன.) 

இப் பள்ளத்தாக்கில் அதிகளவு கணவாய் கிடைப்பதால் அங்கு இத் திமிங்கிலங்கள் தங்கிநின்று உணவு உண்டே செல்லும். இதன்போது இவை இரையை வேட்டையாடுவதற்காக 1000 மீற்றர் ஆழம் வரைக்கும் கீழே சென்று மேலே வரும். 

ஏனெனில் இவை சுவாசப் பை மூலம் சுவாசிப்பவை. அது அவற்றின் முதுகின் மேலேயே இருக்கும். அத்துடன் ஆழத்துக்குச் சென்றதும் இருட்டாக இருப்பதால் 15 - 20 நிமிடங்களில் இவை மேலே வந்துவிடும். 

இவ்வாறான நிலையில் மிக வேகமாக கடலின் ஆழத்துக்கு சென்று இரையை பிடித்துவிட்டு மேல் நோக்கி வரும். இவ்வாறு வரும் போது அவற்றின் குட்டிகள் சில நேரங்களில் திசை மாறி கடலின் கரைப் பகுதி / ஆழமற்ற பகுதியை நோக்கிச் சென்றுவிடும். 

கரைக்குச் சென்ற குட்டிகள், தம்மை காப்பாற்றுமாறு தமது ஏனைய திமிங்கலங்களுக்கு குரல்கொடுக்கும். இதன்போது மிக நெருக்கமான சமூக உணர்வு மிக்கவை என்பதால் அவை அனைத்தும் இவற்றை காப்பாற்றுவதற்காக கரைக்கு வரும். 

கரைக்கு வந்த திமிங்கிலங்களின் உரையாடல் ஒன்றுக்கொன்று கடத்தப்படுவதில் வேறுபாடுகள் காணப்படும். அதாவது கரையில் மணல், கற்கள், சிறு பாறைகள் காணப்படுவதால் அவற்றின் ஒலி கடத்தப்படுவதில் குழப்பம் ஏற்படுகின்றது. 

இதனால் அவற்றின் உரையாடலில் ஏற்படுகின்ற தளம்பல்களால் அவற்றின் பயணப் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதிகளவில் கரைக்கு வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு. இது தவிர நாம் முன்னரே கூறியது போன்று இவை காந்தப்புலத்தினை அடிப்படையாக வைத்தே தமது இடப்பெயர்வை மேற்கொள்கின்றன. 

இக் காந்தப்புலமானது நீர்முழ்கி கப்பல்களின் போக்குவரத்தினால் குழப்பமடையும் போதும், அவற்றின் இடப்பெயர்வில் பாதிப்பை செலுத்தும். ஆனால் பானந்துறையில் இத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியதற்கு அவ்வாறு நீர்மூழ்கி கப்பல்களின் போக்குவரத்து காணப்பட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை என்றார்.   

ரி.விரூஷன்  

Comments