முஸ்லிம்களுக்கு எதிரான பிரான்ஸின் வெறுப்புணர்வு | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம்களுக்கு எதிரான பிரான்ஸின் வெறுப்புணர்வு

முஸ்லிம்களுக்கு எதிரான பிரான்ஸின் வெறுப்புணர்வு-France-Against-Muslims

பிரான்ஸை சேர்ந்த 47 வயதான சாமுவல் பாடி என்ற வரலாற்று ஆசிரியர் தனது வகுப்பறையில் இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மது நபியை அவமதிக்கும் வகையிலான கேலிச் சித்திரங்களை காட்சிப்படுத்தினார். அதனால் ஆத்திரம் அடைந்த ஒரு முஸ்லிமால் அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலைகாரனை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

பிரான்ஸின் ஜனாதிபதி எமானுவல் மெக்ரோன் பிரான்ஸில் இஸ்லாத்தின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு பற்றி கருத்துத் தெரிவித்தார். பிரான்ஸின் பொது நிறுவனங்களில் இருந்து இஸ்லாத்தின் செல்வாக்கு ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இன்னும் 18 மாத காலத்தில் பிரான்ஸ் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் அவருடைய கருத்து பிரான்ஸ் சமூகத்துக்குள் ஆழமாக ஊடுருவியுள்ள ஒரு பிரச்சினையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. பிரான்ஸ் அதன் மிகப் பெரிய வெள்ளையரற்ற முஸ்லிம் குடியேற்றவாசிகளின் சனத் தொகையைக் கொண்ட பகுதியையோ அல்லது அந்தப் பிரதேச மக்களையோ அரவணைத்துக் கொள்ள நீண்டகாலமாகத் தவறி வந்துள்ளது. இது பிரான்ஸில் சமத்துவம் அற்ற நிலை அதிகரிக்கவும் காரணமாக இருந்துள்ளது.

மேற்குலகில் ஆகக் கூடுதலான அளவு முஸ்லிம்கள் பிரான்ஸில் உள்ளனர். அதன் முன்னைய காலனித்துவ பிராந்தியமான வட ஆபிரிக்காவில் இருந்து பெரும்பாலான மக்கள் குடிபெயர்ந்தமை இதற்கு பிரதான காரணமாகும். பிரான்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை சுமார் 57 லட்சத்து 60 ஆயிரம் ஆகும் அல்லது மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 8.8 வீதமாகும்.

அங்குள்ள பெரும்பாலான முஸ்லிம்களின் கோரிக்கை இயல்பு நிலைக்கான உரிமைகள் மட்டுமே. எந்த விதமான அழுத்தங்களும் இன்றி தங்களது சமயத்தைப் பின்பற்றும் உரிமை தமக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. ஆனால் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தல் விளையாட்டு அங்கு ஒரு தொடர் கதையாக நீடிக்கின்றது. 2020 ஜனவரி முதல் அங்குள்ள 73 பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், பாடசாலைகள், சிற்றுண்டிச் சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளன என்று பிரான்ஸின் உள்துறை அமைச்சர் டார்மெனின் அறிவித்துள்ளார்.

பிரான்ஸின் பத்தி எழுத்தாளர் மாலியா புவோட்டியா சர்ச்சையில் சிக்கி இருப்பது இஸ்லாம் அல்ல மெக்ரோனும் அவரது அரசும் என்கின்றார். சுமார் 57 லட்சம் பிரான்ஸ் முஸ்லிம்களிடம் இருந்து அவர் தன்னை தூரப்படுத்தி உள்ளார். அவரது கொள்கைகளால் அந்த நாட்டு முஸ்லிம்கள் பாரிய அளவு தாக்கங்களை எதிர் கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களில் அவர் எவ்வித கரிசனையும் அற்றவராகக் காணப்படுகின்றார். சமூக மட்டத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய சம அந்தஸ்து மிகவும் மோசம் அடைந்துள்ளது. அவர்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக பொருளாதார ரீதியாகவும் அவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் அவர்கள் மீது பாரபட்சம் பிரயோகிக்கப்படுகின்றது. அரச மட்டத்தில் அவர்கள் பல இழப்புக்களைச் சந்திக்க வேண்டி உள்ளது. அவரது அரசியல் நிகழ்ச்சி நிரல் இவை எல்லாவற்றையும் மூடி மறைத்துள்ளது. அவரது அரசியல் தளத்தில் தங்கி இருப்பவர்களின் நலன்கள் மட்டுமே அங்கு பேணப்படுகின்றது. அதுவே அங்கு தொடருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

நியூ யோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நவீன அரபு அரசியல் மற்றும் புத்தி ஜீவிகள் வரலாறு தொடர்பான பேராசிரியர் ஜோஸப் மஸாத் பிரான்ஸ் அராங்கத்தினதும், அந்த நாட்டு பண்டிதர்களினதும், ஊடகங்களினதும் தினசரி பேச்சுக்களின் ஒரு பகுதியாக முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு வெளிப்படுத்தல் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வழமையாக்கப்பட்டுள்ளமையானது முஸ்லிம்கள் அங்கே நிறுவனப்படுத்தப்பட்ட விதத்தில் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுவதை சட்டரீதியாக்கும் வகையில் அமைந்துள்ளது. அது மட்டும் அன்றி பிரான்ஸுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் மீது வன்முறைகள் தூண்டப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்கிறார்.

பிரான்ஸுக்கு வெளியே 2019ல் நியூஸிலாந்து கிறிஸ்சேர்ச்சில் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தி வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 54 பேரைக் கொலை செய்து மேலும் 49 பேரைக் காயப்படுத்திய பயங்கரவாதி தனது இந்தச் செயலுக்கு காரணமாக அமைந்தது தான் பிரான்ஸில் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய அச்ச உணர்வை விதைக்கும் சிந்தனையாளர் ரெனோட் கேமஸின் சிந்தனைகளால் தூண்டப்பட்டமையே என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்தை விடுவிப்போம் என்ற தோரணையிலான அழைப்புக்கள் பண்டைய காலத்தின் பாரம்பரிய சமயப்போக்கற்ற பிரான்ஸின் மரபாகும். 1789ல் நெபோலியன் பொனபார்டே பலஸ்தீனத்தையும் எகிப்தையும் ஆக்கிரமித்த போது எகிப்திய மக்கள் மத்தியில் தானும் தனது இராணுவமும் விசுவாசம் மிக்க முஸ்லிம்கள் என்று பொய்யான அறிவித்தலை விடுத்து அந்த மக்களை தந்திரமாக ஏமாற்றினான். அன்றைய கொடுங்கொல் ஆட்சியாளர்களான மம்லூக் வம்சத்தவரிடம் இருந்து முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விடுவிக்கவே வந்துள்ளதாக அவன் கூறினான்.

ஆனால் இந்த ஏமாற்று வித்தை அந்த மக்களிடம் எடுபடவில்லை. ஏகிப்தியர்களும் பலஸ்தீனர்களும் அவனை எதிர்த்து நின்றனர். பலஸ்தீனர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் எதிராக நெப்போலியனின் படைகள் பல கொடுமைகளைப் புரிந்தும் கூட அவர்களால் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. தோல்வியுற்று மீண்டும் அவன் பிரான்ஸ் திரும்பி வரவேண்டியதாயிற்று. பலஸ்தீன நகரமான ஆக்ரேயில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் தோற்கடிக்கப்பட்டது முதல் ஆரம்பமானது தான் நெப்போலியனுக்கும் பிரான்ஸுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான இந்த சர்ச்சை. அதன் பிறகு மூன்று தசாப்தங்கள் கழித்து பிரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமித்தது. முஸ்லிம்களை வெற்றி கொள்ளவும், கொள்ளையடிக்கவும், அவர்களின் வளங்களை சூறையாடவும், அவர்களின் வழிபாட்டுத்தலங்களை தரை மட்டமாக்கவும் இனிமேலும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் பிரான்ஸுக்கு இருக்கவில்லை.

1830 ஜுன் மாத நடுப்பகுதியில் அல்ஜீரியா மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியது. ஜுலை மாதம் ஐந்தாம் திகதி அல்ஜீரியா வீழ்ந்தது. நிதி ரீதியாக நெருக்கடி நிலையில் இருந்த பிரான்ஸ் அல்ஜீரியாவின் சொத்துக்களைச் சூறையாடி அந்த நாட்டின் நிதிக்கருவூலத்தை நிர்மூலமாக்கியது. தங்கமும் வெள்ளியுமாக 43 மில்லியன் பிராங்குகள் சூறையாடப்பட்டதாகவும் அதற்கப்பால் பிரான்ஸின் ஆக்கிரமிப்பு இராணுவத்தை பராமரிப்பதற்கான செலவு என்ற பெயரில் மேலும் பெரும் தொகை அழிக்கப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் இராணுவம் பள்ளிகளைச் சூறையாடி அவற்றுள் பலதை ஆலயங்களாக மாற்றியது. துப்பாக்கி முனையில் இவை இடம்பெற்றன. அல்ஜியர்ஸ் நகரில் மிகப் பெரிய பள்ளிவாசலாக இருந்த துருக்கிப் பேரரசின் கெச்சிஓவா பள்ளிவாசலும் இவ்வாறு மாற்றப்பட்டது. இது 1612ல் கட்டப்பட்ட பள்ளிவாசலாகும். 1832 டிசம்பரில் சென்ட் பிளிப் கத்தெற்றலாக இது மாற்றப்பட்டது. அதே ஆண்டு பிரான்ஸ் படைகளால் ஒயுபியாஸ் இனத்தவர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டனர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் என ஒருவர் கூட விட்டு வைக்கப்படவில்லை. ஓட்டு மொத்தாக அழிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த எல்லாமே பிடுங்கப்பட்டன.

1871ல் அல்ஜீரிய முஸ்லிம்கள் மீண்டும் பிரான்ஸ் படைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். பிரான்ஸின் இனவாத அழிப்பு இயந்திரம் மீண்டும் சுறுசுறுப்படைந்து நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்தது. இந்த இனவாத ஒழிப்பு இயந்திரத்தின் ஈவு இரக்கமற்ற தொடர் செயற்பாட்டால் 1860களில் கொல்லப்பட்ட அல்ஜீரியா மக்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது. அதன் பிறகும் கூட பிரான்ஸுக்கு இஸ்லாம் மீது இருந்த ஆத்திரம் தணிந்ததாகத் தெரியவில்லை. பிரான்ஸ் அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் அதன் முஸ்லிம் பிரஜைகளுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட பாரபட்சம் இன்றைய ஜனாதிபதி மெக்ரோனின் தலைமையின் கீழ் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பேரினவாத ஆதிக்க சாக்கடைக்குள் மூழ்கிக் கிடக்கும் ஒரு நாடாகவே பிரான்ஸ் இன்றும் காணப்படுகின்றது. வெறுப்புணர்வு அங்கே தலைவிரித்தாடுகின்றது. பிரான்ஸ் புரட்சிக்கு முன்பிருந்தே பிரான்ஸின் கலாசாரத்தோடு எல்லா கால கட்டத்திலும் இரண்டறக் கலந்துள்ள வெறுப்புணர்வில் இருந்தும் இது வித்தியாசமானதும் அல்ல.

லத்தீப் பாரூக்

Comments