விடைபெற்றார் ஷோன் கொன்னரி | தினகரன் வாரமஞ்சரி

விடைபெற்றார் ஷோன் கொன்னரி

தமது சட்டவிரோத கைங்கரியங்கள் மூலம் இந்த உலகத்தையே தன் வசப்படுத்த சில பிரகிருதிகள் முயற்சி செய்கின்றனர். அவர்களிடம் பண பலம், தொழில்நுட்ப பலம் நிறையவே இருக்கிறது. அவற்றின் மூலம் அவர்கள் கோலோச்ச நினைக்கின்றனர். ஆனால் அவர்களது கனவுகளை பிரிட்டிஷ் துப்பறியும் அதிகாரியான ஜேம்ஸ் போன்ட் என்ற உளவாளி இறுதி நேரத்தில் தகர்த்து விடுகிறான்.

இந்த சாராம்சத்தை கொண்ட கற்பனை கதைகளை எழுதி உலகின் கவனத்தை தன்வசம் ஈர்த்தவர்தான் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் ப்ளெமிங்.

1953 ஆம் ஆண்டு இவர் எழுதிய 007 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட கற்பனை கதாபாத்திரமான ஜேம்ஸ் போன்டை மையமாக வைத்து அவர் 12 நாவல்களையும் இரண்டு சிறுகதை தொகுதிகளையும் எழுதியிருக்கிறார்.

1964 இல் இயன் ப்ளெமிங்கின் மறைவுக்குப் பிறகு ஆறு எழுத்தாளர்கள் அதிகாரபூர்வமாக இந்தக் கதாபாத்திரத்தை வைத்து நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி – வானொலி தொடர்கள், சித்திரக் கதைகள் மற்றும் வீடியோ விளையாட்டு ஆகியவை மூலம் ஜேம்ஸ் போன்ட் உலகப் புகழ் பெற்றிருக்கிறான்.

ஜேம்ஸ் போன்ட் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இதுவரை வெளியான 27 ஜேம்ஸ் போன்ட் படங்களும் மொத்தம் 7 பில்லியன் ​ெடாலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளன. ஹாரி பொட்டர் தொடர் வரிசை படங்களுக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ் போன்ட் படங்களே அதிகம் வசூலித்த தொடர் படங்களாகும். ஜேம்ஸ் போன்ட் படங்கள் பிரபலமான பிறகு ஜேம்ஸ் போன்ட் நாவல்களுக்கு மவுசு ஏற்பட்டு இதுவரை இரண்டரை கோடி நாவல்கள் விற்பனையாகியுள்ளன.

ஆங்கில எழுத்துத் துறையில் ஷெர்லொக் ஹொல்ம்ஸ், பெர்ரி மேசன், ஜேம்ஸ் ஹெட்லி சேஸ் மற்றும் நுாற்றுக் கணக்கான துப்பறியும் உளவாளிகள் சிருஷ்டிக்கப்படடுள்ள போதிலும் அவர்களில் யாருக்கும் கிடைக்காத பெயரும் செல்வாக்கும் ஜேம்ஸ் போன்ட்டுக்குத்தான் கிடைத்திருக்கிறது.

இவ்வாறான பெயரும் புகழும் கொண்ட ஜேம்ஸ் போன்ட் கதாபாத்திரத்தில் முதன் முதலாக திரையில் தோன்றி நடித்தவர் ஷோன் கொன்னரி என்ற ஸ்கொட்லாந்துக்காரர். அந்த கதாபாத்திரத்தை முதலில் வெள்ளித் திரையில் பிரதிபலித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்ற ஷோன் கொன்னரி கடந்த வாரம் அவரது 90 ஆவது வயதில் காலமானார். உலகளாவிய ரீதியில் உள்ள கோடிக்கணக்கான ஜேம்ஸ் போன்ட் திரைப்பட ரசிகர்கள் இதனால் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

பஹாமஸ் தீவில் உள்ள நஷாவ் நகரில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி அவரது வீட்டில் உறக்கத்திலிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

1930 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஸ்கொட்லாந்தின் எடின்பரோ நகரில் பிறந்த கொன்னரியின் இயற் பெயர் தோமஸ் கொன்னரி. இவருக்கு நீல் என்ற ஒரு சகோதரர் இருக்கிறார்.

1962 இல் நடிகை Diane Cilento வை திருமணம் செய்த கொன்னரி 1973 இல் அவரை விவாகரத்து செய்தார். அவர்கள் மகன்தான் நடிகர் ஜேசன் கொன்னரி.

அதன்பின் ஷோன் கொன்னரி 1975 இல் ஓவியக் கலைஞரும் தனது நெருங்கிய நண்பியுமான Michaline Roquebrune ஐ திருமணம் செய்தார். இவர்களது திருமணம் இறுதி வரை நிலைத்தது. இவர்களது மகன் Stephane.

1988 இல் ‘The Untouchables’ படத்தில் பொலிஸ்காரர் பாத்தித்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது இவருக்கு கிடைத்தது.

அதே நேரம் 2000 ஆம் ஆண்டு பிரிட்டனின் எலிஸபெத் மகாராணி இவருக்கு பிரபு பட்டம் வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 1999 இல் அமெரிக்காவின் Kennedy Center இன் கெளரவமும் 2006 இல் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் ஆயுட்கால விருதும் இவருக்கு கிடைத்தன.

இவ்வாறு ஆஸ்கார் விருதும் பிரபு பட்டமும் வழங்கப்பட்டு கெளரவத்துக்குள்ளான ஷோன் கொன்னரியின் சிறு வயதுக் காலம் வறுமையிலேயே கழிந்தது.

ஸ்கொட்லாந்தின் எடின்பரோ நகரின் சேரிப் பகுதியில் பிறந்த கொன்னரிக்கு வறுமை காரணமாக கல்வியை தொடர முடியவில்லை. தனது 13 வயதில் பாடசாலையை விட்டகன்ற கொன்னரி தனது வயிற்றுப் பசியை போக்கிக் கொள்ள பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். 13 வயதில் அவரது முதல் வேலை பண்ணையில் பால்காரன். அதன்பின் lifeguard ஆகவும் வேலை பார்த்த ஷோன் கொன்னரி ஒரு சமயம் பிணப் பெட்டிகளுக்கு பாலிஷ் போடுபவராகவும் இருந்திருக்கிறார்.

அவரது 17 ஆவது வயதில் பிரிட்டிஷ் கடற்படையில் சேர்ந்தார். ஆனால் காயங்கள் காரணமாக மூன்று வருடங்களின் பின் கடற்படையில் இருந்து விலக வேண்டிய நிர்்ப்பந்தம் ஏற்பட்டது.

லண்டன் South pacific இசைக்குழுவில் பாட சந்தர்ப்பம் கிடைத்த பின் ஆடல் பாடலில் கொன்னரிக்கு ஆர்வம் அதிகரித்தது. அந்த இரு கலைகளையும் கற்றுக் கொண்டார். அத்துடன் அவரது உடற்கட்டும் பலரைக் கவர்ந்தது. இதன் மூலம்1956 இல் BBC தொலைக்காட்சியில் ‘Requiem for a Heavyweight’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் பலரது பார்வை படக் காரணமாகியது. இதனால் ‘No Road Back’ என்ற தொலைக்காட்சிப் படத்தில் நடித்தார். அதன்பின் 1959 இல் ‘Tarzans Great Adventure’ தொலைக்காட்சிப் படத்தில் டார்ஸானாக நடித்தார். ‘Another Time, Another Place’ என்று பல தொலைக்காட்சிப் படங்களில் நடித்தார்.
BBC தொலைக்காட்சியின் பல்வேறு படங்களில் தோன்றியிருந்ததால் அவரை பலருக்கு தெரிந்திருந்தது. அப்போதுதான் புதிய ஜேம்ஸ் போன்ட் படத்துக்கு உகந்த நடிகர் ஒருவரை

சிபாரிசு செய்யுமாறு ‘Daily Express’ பத்திரிகை அதன் வாசகர்களிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. ஏற்கனவே BBC தொலைக்காட்சியில் கொன்னரி பிரலமாகியிருந்ததால் இந்த கருத்துக் கணிப்பில் கொன்னரி முதலிடம் பிடித்தார்.
1962 இல் முதலாவது அதிகாரபூர்வ ஜேம்ஸ் போன்ட் படமான ‘Dr.No’ படத்துக்கு அதன் தயாரிப்பாளர்களான Cubby Broccoli and Harry Saltzman ஆகியோர் கதாநாயகனை தேடியலைந்தனர். அப்போதைய பிரபல நடிகர் கெரி க்ரான்டை துப்பறிவாளன் ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் நடிக்க வைக்க அவர்கள் விரும்பினர்.

எனினும் இங்கிலாந்தில் பிறந்ந அமெரிக்க நடிகரான க்ரான்ட் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விரும்புவதாக கூறினார். இதனால் ஜேம்ஸ் போன்ட் வேடத்தில் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு படங்களில் நடிக்கக்கூடிய நடிகரை தேடிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் வேறு நடிகரை தேடத் தொடங்கினர்.

இது பற்றி Trevor Howard, Stanley Baker, Rex Harrison, Richard Todd, David Niven மற்றும் தொலைக்காட்சி நடிகர்் Patrick McGoogan ஆகியோரிடம் பேசப்பட்டது. அதனையடுத்து ஜேம்ஸ் போன்ட் நடிகரைத் தேட ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரில் ஷௌன் கொன்னரியும் ஒருவர்.

‘Dr. No’ படத்தின் தயாரிப்பாளர்களான Albert Broccoli and Harry Saltzman ஆகியோருடனான நேர்காணல் மற்றும் திரை ஒத்திகையின் பின்னர் புதிய ஜேம்ஸ் போன்டாக செளன் கொன்னரி தெரிவு செய்யப்பட்டார். எனினும் அது ஒரு சர்ச்சைக்குரிய தெரிவாகவே இருந்தது. ஏனெனில் பிரிட்டனுக்கு வெளியே கொன்னரியை எவருக்கும் தெரியாமல் இருந்தது. எனினும் ‘Dr. No’ வெளிவந்த பி கொன்னரி முழு உலகுக்கும் தெரிந்த ஒருவராகிவிட்டார். அதன் பின் அடுத்த நான்கு வருடங்களில் ‘From Russia With Love’, ‘Gold Finger’ ‘ThunderBall’ ‘Diamonds are Forever’’You Only live Twice’ஆகிய ஜேம்ஸ் போன்ட் படங்களில் கொன்னரி நடித்தார்.

‘Dr. No’ படத்துக்கான சம்பளமாக கொன்னரிக்கு 30 ஆயிரம் டொலர்கள் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் நடித்த அல்ப்ரட் ஹிட்ச்கொக்கின் ‘Marnie’ படத்துக்கு 4 லட்சம் டொலர் சம்பளம் கிடைத்தது. பின்னர் இது ஏழரை லட்சம் டொலர்கள் வரை அதிகரித்தது.

அவரது நான்காவது போன்ட் படத்தின் பின் தயாரிப்பாளர்களான Albert Broccoli and Harry Saltzman ஆகியோர் புதிய போன்ட் ஒருவரை ரகசியமாக தேடிக் கொண்டிருப்பதாக கொன்னரிக்கு தகவல் கிடைத்ததும் அவர் கோபமுற்றார். இனிமேல் பொன்ட் படங்களில் நடிக்கப்போவதில்லை. அடுத்த படத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரினார். அதன்பின் 1983 இல் அவரது கடைசி போன்ட் படமான ‘Never Say Never Again’ என்ற அவரது கடைசி போன்ட் படத்தில் நடித்து முடித்தார். அந்தப் படத்தில் நடிக்க அவரக்கு 30 லட்சம் டொலர்கள், மற்றும் லாபத்தில் சில சத வீதம், திரைக் கதையை அங்கீகரிக்கும் வாய்ப்பம் கிடைத்தது.

அதன் பின் போன்ட் வேடத்தை கைவிட்டு வேறு பாத்திரங்களில் அவர் திரையில் தோன்றினார். ‘Highlander’, ‘The Name of the Rose’, ‘Highlander 2’ , ‘Medicine Man’ ‘Rising Sun’, Just Cause’, ‘First Knight’, ‘A Fine Madness’, ‘ Shalako’, ‘Finding Foorrester’ ஆகிய படங்கள் அவரது போன்ட் பாத்திரம் அல்லாத ஏனைய படங்களாகும். 2003 இல் அவர் நடித்த படம்தான் The League of Extraordinary Gentleman’. 

Comments