கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பும் இனிப்பும்-Kasappum-Inippum-Column

கசப்புகள்

அந்த 1935களில், 85 ஆண்டுகளுக்கு முன்பு -

‘கருணா முஹூதே நமு கிலீலா” என உச்சக் குரலில் ஒரு சிங்கள பக்தி கீதம். ரேடியோ சிலோன், சிங்கள ஒலிபரப்பிலும், விகாரைகளின் விசேட வைபவங்களிலும் ஒலித்தது.

பாடியவரோ ஒரு முஸ்லிம்! அதுவும் வட – இந்திய உருதுவை அன்னை மொழியாகக் கொண்டவர்.

எவரும் முகம் சுளித்தாரில்லை. அன்றைய இலங்கை மானுடம் அப்படி மகோன்னதமாக இருந்தது.

கலைஞன் என்பவனை இனத்தாலோ மதத்தாலோ கணிக்கவில்லை. நஹீ! நஹீ!!

சிங்களத் திரைத்துறை, தழைத்தபொழுது 1947லில் ‘அசோகமாலா சக்கைபோடு போட்டது. பாடல்கள் அமிர்தம்! ‘பெய்க் மாஸ்டர்’ பட்டித் தொட்டி எல்லாம் பேசப்பட்டார். (ஆம்! பிற்கால அல்ஹாஜ் மொகிதீன் பெய்க். பேக் என்பது பிழை உச்சரிப்பு)

அதன் பின்னும் ஒரு ‘புத்தம் சரணம் கச்சாமி’, மாஸ்டரை உன்னதமான இடம் ஒன்றில் கொண்டு போய் எப்போதாவது வைத்து விட்டது.

‘புத்தம் சரணம்’ எனப்பாடி ஒரு சமூகத்தின் நம்பிக்கையை மேம்படுத்தினாலும் கொழும்பு, மருதானைப் பள்ளி வாசலுக்கு எதிர்ப்புறத் தெருவில் வாழ்ந்த அவர் ஐவேளை தொழுகை விட்டவரில்லை.

அந்தக் கலைஞரது மூதாதையர் குடியேறி வாழ்ந்தது திருச்சி மாநகரத்தில், அவர் பிறந்ததும் அங்கே. (1918- டிச.05) ஒரு பொலிஸ்காரராக உத்தியோகம். கொழும்பில் வசித்த சகோதரின் இறப்புக்கு வந்தவர். அப்படியே இங்கே தங்கி விட்டார். கௌரவப் பிரஜை அந்தஸ்தைப் பின்னாட்களில் அரசு வழங்கியது. இஸ்லாமிய சிங்கள இசைக்கலைஞராகப் பரிணமித்தது காரணம்.

‘அன்னவரது இறுதி மூச்சும் அந்த உச்ச தொனி வெண்கலக்குரலும், 1991 நவம்பர் 04லில் அடங்கி ஒடுங்கியது.

ஆண்டுகள் 29, இருபத்தொன்பது நாட்கள் என என் கணிப்பு. இன்று நிலை என்ன?, அதைத்தான் காலத்தின் கோலம் என்பது பாடிய பல பௌத்தப் பாடல்கள் செவிகளில் ஒலிக்க இயலாத படி எங்கோ ஒரு கருவூலத்தில் தூசு மண்டிக்கிடக்கின்றன அல்லது அழிக்கப்பட்டு விட்டன.

ஒரு பிற இனத்தவர் பாடியதை ஒலிக்க வைக்கக்கூடாது என்பதில் ‘சிலருக்கு் நல்ல ஒற்றுமை. அவர்களது எழுதப்படாத சட்டம் செல்லுபடியாகும் காலமிது!

எவ்வாறாயினும், இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய கீதங்கள் ஒலிக்கின்றன அதுவும் முக்கிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி எஞ்சிய கொஞ்ச நேரத்தில்!

****

கடந்த 01ல் ‘கசப்பு இனிப்பும்’ வழங்குகையில், கசப்பைத் தரும்பொழுது, ‘கடந்த பத்து நாட்களாக வீட்டிற்குள்ளேயே நன்றாகவே முடங்கிப் போய்க் கிடக்கிற நாம், வரும் நாட்களிலும் அப்படியே இருக்கலாம்” என ஒரு வார்த்தை சொன்னேன்.

பலித்துப் போனது! இன்றைய 08ஆம் திகதி ஞாயிறு பொழுதிலும் வீடே சொர்க்கம். நாளை விடியும் வரை காத்திருப்பு வெளியில் தலைகாட்ட எனினும் கடைசி நிமிசத்தில் மாறவும் செய்யலாம்.

இப்பவே, 11ல் ஆரம்பிக்க இருந்த மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் நம் தலைமுறைகளுக்கு இல்லை என்றாகி விட்டது. இரு கிழமைகளுக்குப் பிற்போடல்.

இந்த வகையில் இரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய ஒன்று ‘இனிமேல் தான் அதிகம் கவனம் தேவை’

அவசர அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல முடிவெடுப்போம். அப்படிச் செல்லும் பொழுது கூட ஒருவர், இருவர் போனால் போதும். மறக்காமல் முகக்கவசம் அணிய வேண்டும்.. மீண்டும் சென்றால். அதையே பாவிக்கலாமா என்பதை யோசித்து முடிவெடுங்கள்.

உயர்ரகம் இல்லாத சாதாரணத்திற்கு நான்கு மணி நேரமே உத்தரவாதமாம்.

மேலும், வெளியில் யாருடன் பேசினாலும் நெருங்காமல் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மறக்காமல் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தல் அவசியம்.

இதெல்லாம் தெரிந்தவை தானே, நீங்களும் சொல்லி நாங்களும் படித்துத் தொலைக்க வேண்டுமா என்பீர்கள் என் ‘குழந்தை மனசு’ கேட்க மாட்டேன் என்கிறது. மன்னியுங்கள், நினைப்பூட்டுவதற்காக.

ஆனால் உங்களில் சிலருக்கு மட்டுமே தெரிந்த இரு தகவல்களை ‘லைட்ரீடிங்’ பாணியில் தருகிறேன்.

கிருமி எதிர்ப்புக்கு ஊட்டச் சத்து உணவு வகைகள் மிக முக்கியம். அதிலும் நம் உடலைக் காக்கும் தோலுக்கு டீ (D) சத்து தேவை. இது எந்த உணவிலும் இல்லையிலும் இல்லை. சூரியனில் மட்டும் உண்டு. மகா மகா சக்தி படைத்த சூரிய வெளிச்சமே ‘D’ தரும் ஆக, வீட்டு ஜன்னல்களை அகலத்திறந்து வைத்து வெளிச்சம் உடலில் பட விடுங்கள். மொட்டை மாடிக்காரர்கள் பாக்கியசாலிகள். போய் நில்லுங்கள் 10--15 நிமிடங்கள்! (காலை 9.10 அல்லது நண்பகல் வேளை!)

இரண்டாவது தகவல்: கொரோனாவுக்கு வாசனை இழப்பும், சுவை இழப்பும் முக்கிய அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தடுமல் ஏற்பட்டிருப்பதற்கான பொதுவான அறிகுறியும் இதுவே ஆகும். அதனால் தான் மருத்துவ ஆய்வை உடனே மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.

நல்லது, மருத்துவன் அல்லாத சாதாரணப் பத்தி, எழுத்தாளன் என்ற வகையில் படித்துத் தெரிந்ததைப் பகிர்ந்தேன். இனி, இனிப்பு ஒன்றே ஒன்று சுவைக்க அழைப்பு....

****

இனிப்புகள்

மலேசியா, கோலாலம்பூரில் எனக்குச் சில இனியவர்கள் உள்ளனர். பேரெழுத்தாளர் பீர்முகம்மது, நாவலாசிரயர் பாக்கியம் அம்மா, ஆய்வு எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், இலக்கிய ஆர்வலர் மூதாட்டி மங்களகௌரி எனப் பட்டியல் உள்ளது.

இங்கே, திருமதி மங்கள கௌரியின் நிழற்படம் ஒரு புது விதமாகக் காட்சி கொடுக்கிறது.

“அய்யா உங்கள் வாசக அபிமானிகளைக் கிளுகிளுக்க வைக்க, இனிப்பு இனிப்பாக ஒரு நாட்டுப்பாடலை அனுப்பிவைக்கிறேன்’ என்று குறித்து ‘ஒன்றை’ அனுப்பியுள்ளார். படியுங்கள் முதலில் பாடலில் பெரிய புதிர் உள்ளது.

“மானா மதுரை போன மச்சான்
மாவில பூத்தது வாங்கி வாரும்
மாவில பூத்தது கெடைக்காட்டி
பக்கம் பழுத்தது வாங்கிடுங்க
அதுவும் கெடைக்காட்டி
ஒக்கச் சிரிக்குறது வாங்கி வாருமையா
அதுவும் கெடைக்காட்டி
உமக்கும் எமக்கும் வாங்கி
வந்திடுங்க!”

புரிகிறதா அபிமானிகளே, அதுதான் புதிர் என்று சொன்னேனே! திரும்பவும் படியுங்கள் சரி இப்பவும் புரியவில்லையா?

இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள். இதாவது புரியுமா?

“வாங்கி வாங்க
தள தளத்தது
இல்லையின்னா
கொழு கொழுத்தது
அதுவும் இல்லையின்னா
குடுமி வச்சது
அதுவும் இல்லையின்னா
கொக்கரக்கோ
வாங்கி
வாங்க!”

இது, திருமதி மங்கள கௌரியுடையது. அவரது தமிழக சினேகிதி ராஜி ராஜம், மதுரை, வெள்ளக் கோவில் ஊரிலிருந்து அவருக்கு அனுப்பியதை என்னையும் உங்களையும் கிளுகிளுக்க அனுப்பி வைத்துள்ளார்.

ஆமாம், பாடலிரண்டும் பெரிய புதிர்கள் போடுகின்றனவே (விடுகதை?) விடைகள் தான் என்ன?

உங்கள் நேரத்தை எடுக்காமல் வெளிச்சமிட்டு விடுகிறேன். (முதல் பாடல்)

மாவில பூத்தது – இட்லி, அல்லது பணியாரம்
பக்கம் பழுத்தது – பலாப்பழம் ஒக்கச் சிரிப்பது – கண்ணாடி உமக்கும் எமக்கும் – உறங்கப் பாய்!
இரண்டாவது பாடல்:
தள தளத்தது – தக்காளி
கொழு கொழுத்தது – கொய்யாப்பழம்
குடுமி வச்சது – தேங்காய்
கொக்கரக்கோ – கோழி

மலேசியா, சகோதரி மங்களகௌரி, தமிழக சகோதரி ராஜி ராஜம் இருவருக்கும் உங்களனைவர் சார்பாகவும் நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், தனிக்கட்டையாக அறையில் முடங்கிக் கிடந்தால் முணுமுணுத்துக் கொள்ளலாம். அல்லது குடும்பமாக இருந்தால் எல்லோருக்கும் முன் பாடி ஆடி குதூகளிக்கலாம். கொரோனா முடக்கம் பறக்கும்! செய்யுங்கள்.

நன்றி: தினத்தந்தி

Comments