கெட்ட கிருமியே எட்டப் போயிடு! | தினகரன் வாரமஞ்சரி

கெட்ட கிருமியே எட்டப் போயிடு!

Short Story

நான்கு நாட்கள் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருந்தபின், இன்று ஆறுமணிக்கு அது தளர்த்தப்பட்டு உள்ளது. மீண்டும் இரவு எட்டுமணிக்கு தொடங்கும். இருதயபுரத்தில் இருக்கும் பொன்னம்பலம் தன் மனைவி தங்கம்மாவையும் கூட்டிக்கொண்டு நாவற்குடா8வில் இருக்கும் மகள் ஈஸ்வரி குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று ஒரு கிழமையாக நினைக்கிறார். ஆனால், தொடர்ந்து ஊரடங்கு இருப்பதால் அது முடியாமல் போய்விட்டது. பேரப்பிள்ளைகள் இரண்டையும் அவர் மிகவும் நேசிக்கிறார். மகளில் பாசமும், மருமகனில் அன்பும் வைத்திருப்பவர்.மேசன் வேலை செய்துதான் மகளைப் படிப்பித்து, கல்யாணம் கட்டிக் கொடுத்தவர். நாவற்குடாவில் இருக்கும் தனது நண்பர் ஆறுமுகம் அவர்களின் மகன் அமுதனைப் பிடித்துப்போக, மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்தவர். அமுதன் வைத்தியசாலையில் மருத்துவ வண்டி ஓட்டுனராக இருக்கின்றார். சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் தனது தாண்டவத்தைக் காட்டியது. அதில் இலங்கையும் தப்பவில்லை.இதைக் கட்டுப்படுத்தவே அரசின் இந்த ஊரடங்கும், தனிமைப்படுத்தலும், சமூக இடைவெளியும். இதை மக்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பது கேள்விக்கு உட்பட்டது.தொடர்ந்து நான்கு நாட்கள் வீட்டில் அடைபட்டு இருந்த பொன்னம்பலத்தார் இன்று எப்படியும் மகளையும், பேரப்பிள்ளைகளையும் தான் மாத்திரமாவது போய் பார்த்துவிட்டு வந்திட வேண்டும் என்ற நினைப்போடுதான் காலையில் எழுந்துகொண்டார். பத்திரிகைகளும் இல்லை. பக்கத்துவீட்டில் போய் இருந்து கதைத்துப் பேசியும் வரமுடியாத நிலை. யோசித்துக்கொண்டே வெளியில் வந்தார் வளவு நிறை குப்பை கூளங்கள். இரவு காற்று பலமாக வீசியிருக்கவேண்டும்,மாமரத்து இலைகளும்,தென்னை மரத்தின் பழுத்த ஓலைகளும் விழுந்து கிடந்தன. ஓலைகளை பொறுக்கி எடுத்து விட்டு,வாருகலை எடுத்து வாசலை பெருக்கத் தொடங்கினார்.

"என்ன பொன்னம்பலம் அண்ணா காற்று நல்ல வேலை வைச்சிட்டுதுபோல " பக்கத்துவீட்டுக் குமாரவேல் கேட்டார்.

"அட ஓமடா தம்பி காத்து கொஞ்சம் உரமாகத்தான் அடிச்சிருக்கு.தென்னை ஓலைகளோட பூக்கநெட்டிகளும்,பன்னாடைகளும் விழுந்திருக்கே."

"ஓம் அண்ணே.இனி கச்சான் காற்று அடிக்கிற நேரம்தானே.இப்போதே தொடங்கிற்று போல."

"ம் ..ம் அதுசரி தம்பி குமார்,இண்டைக்கு நமக்கு அரசாங்கம் தாற அஞ்சாயிரம் கிடைக்கும்தானே"

"நம்மட விதானையார் போனகிழமையே சொல்லிப்போட்டார், இண்டைக்குக் கிடைக்குமென்று நானும் அதுதான் வேலைகளை முடிச்சுபோட்டு நேரத்தோட போய்,அவரோட கந்தோரில் நிற்கவேண்டும். நீங்களும் கெதியில வாங்க சனம் வந்து கூடிவிடும்."என்றார் குமாரவேல்.

"சரி தம்பி தேத்தண்ணிய குடிச்சிட்டு வாறன், நீ டக்கெண்டு வெளிக்கிடு" என்று சொன்ன பொன்னம்பலத்தார் கூட்டிய குப்பைகளைச் சாக்கை விரித்து அள்ளி எடுத்துக்கொண்டு தான் வெட்டி வைத்திருந்த குப்பை கொட்டும் மடுவில் போட்டுவிட்டு அவசரமாகக் கிணற்றடிக்குச் சென்று, மேல்கால், முகம் கழுவி வரவும் தங்கம்மா தேநீர் போட்டுக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"இந்தாங்கோ தேத்தண்ணீ, சுடச்சுட குடியிங்கோ. வாசல கூட்டி களைச்சிபோனீங்க. நான் கூட்டி இருப்பன்தானே அதற்குள்ள என்ன அவசரம் "

"தங்கம், இண்டைக்கு அந்த அரசாங்கம் தாறா காசு குடுக்கிறதாம்..பக்கத்துவீட்டுக் குமார் சொன்னவர் நான் சைக்கிள் எடுத்துக்கொண்டு குமாரோடு போய் அதை வாங்கிக்கொண்டு, அப்படியே கடைகளுக்கும் போய் சாமான்கள் வாங்கிட்டு வாறான். இண்டைக்கு நான் பிள்ளை ஈஸ்வரி வீட்டையும் போக வேண்டும்."

"என்னது பிள்ளை வீட்டையோ, நாவக்குடாவுக்கோ, அங்கெல்லாம் போக ஏலாது. ஊரடங்கு இல்லாட்டியும், கண்டபாட்டுக்குப் போகேலாதாம். அடையாள அட்டை நம்பர்படிதான் ஆக்கள் வெளியில போகவேணும். என்று குமாரின் மாமி திரவியம் சொன்னவள்"

"அது தெரியும். கடைசியில, இருக்கிற இலக்கம் ஒண்டுலயும்,ரெண்டுலயும் முடிஞ்சா திங்கள் கிழமை எண்டு தெரியும்..எனக்கு ரெண்டுலதானே முடியுது.இண்டைக்கு திங்கள்கிழமை. நான் வெளியில போகலாம் .முதல்ல காசை வாங்கிகொண்டு நான் மற்றதை பார்க்கிறன்" என்று சொன்ன பொன்னம்பலத்தார், அறைக்குள் சென்று மேல்சட்டையைப் போட்டுக்கொண்டு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்தார். குமாரவேலும், பொன்னம்பலமும் இருதயபுரம் கிராம அதிகாரி காரியாலயம் வந்தனர். சனங்கள் கொஞ்சப்பேர் நின்று கொண்டு இருந்தனர்.இவர்களும் சைக்கிள்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். பின்னர் ஒவ்வொருத்தராக உள்ளே சென்று கையெழுத்து வைத்து பணம் பெற்றுக்கொண்டு திரும்பினார்கள்.பொன்னம்பலமும் தனது முறை வந்ததும் உள்ளே சென்று பணம் பெற்றுக்கொண்டார்.

பணத்தை பெற்றுக்கொண்டு வரும்போது,குமாரவேல், பொன்னம்பலத்தாரைப் பார்த்துக் கேட்டார்.

"அண்ணே நான் ஊறணிக்கு போகிறேன்.அங்கதான் இப்போ தற்காலிக மாக்கட் போட்டிருக்காம். நீங்க என்ன மாதிரி" என்று.

"தம்பி நானும் வாறன் இண்டைக்கு என் மகளுக்கும் மரக்கறி,அரிசி,சீனி,தேயிலை,மாவு என்று வாங்கிக்கொண்டு குடுத்திட்டு வரப்போறான்."

"சரி வாங்க நேரே மார்க்கட்டுக்கே போவோம் என்ற குமார் தனது சைக்கிளில் முன்னே செல்ல, பொன்னம்பலத்தார் பின் தொடர்ந்தார்.

ஊறணியில் தற்காலிகமாகப் போட்டிருந்த பொதுச்சந்தை காலை பத்துமணிக்கே நிரம்பி வழிந்துகொண்டு இருந்தது. நான்கு நாட்கள் தொடர்ந்து ஊரடங்கி இருந்ததால், மக்கள் இன்று அத்தியாவசிய சாமான்கள் வாங்க கூடி இருந்தார்கள். பொன்னம்பலத்தார், தனியே சென்று தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி, ஒரு பெரிய பொலித்தின் பையில் வைத்துக்கொண்டார். மகளுக்கு கொண்டுபோக மட்டுமே அவர் இப்போது சாமான்களை வாங்கினார்.காய்கறிகள்,வெங்காயம், பச்சைமிளகாய், கீரைக்கட்டு, இஞ்சி, பூண்டு, புளி, மற்றும் சீனி, தேயிலை, அரிசி, பருப்பு எல்லாம் வாங்கியவர் மறக்காமல் பேரப்பிள்ளைகளுக்கு பிஸ்கட்பெட்டியும், கண்டோஸ் சொக்கலேட் பக்கெற்றுகளும் வாங்கிக்கொண்டு தனது சைக்கிள் இருந்த இடத்துக்கு வந்து அதைத் தனது கரியரில் வைத்து இறுக்கமாகக் கட்டிக்கொண்டார். இனி அவர் பயணம் நாவற்குடா நோக்கித் தொடரப் போகிறது. எப்படியும் ஏழு கிலோமீற்றர் தூரம் சைக்கிள் மிதித்தே அவர் செல்லவேண்டும். அறுபத்தியெட்டு வயதை நெருங்கும் பொன்னம்பலத்தார் இன்னும் உடல் உறுதியுடன்தான் இருந்தார்.மேசன் வேலைக்கு இப்போதும் யாரும் கூப்பிட்டால் போய் செய்கிறாரே.

அவருக்கு ஒரு நாட்கூலி மூவாயிரம். அதனால், உற்சாகமாக இருந்தார். கொரோனா வந்து பிழைப்பில் மண்ணை போட்டுவிட்டது. அவரின் சைக்கிள் ஓடத் தொடங்கியது. பிள்ளையாரடி தாண்டி, திருமலை வீதியால் அரசடி சந்திவந்து கல்லடிப்பாலம் ஊடாக கல்லடி தாண்டித்தானே நாவக்குடா செல்லவேண்டும். மிதித்துகொண்டே வருகிறார்.வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது. வாகனங்கள் ஒன்று, இரண்டுதான் அவரை முந்திச் செல்கிறன. ஒருவழியாக கல்லடி பாலம் வந்துவிட்டார் பொன்னம்பலம். பாலத்தின் நுழை வாயிலில் பொலிசார் நின்று மறிக்கிறார்கள். இவர் கிட்ட வந்ததும் இவரையும் மறித்தார், ஒரு பொலிஸ்காரர்.

"ஏய் எங்க போறது.வீட்டில இருக்க சொன்னதுதானே, ஆங், இது என்னா மூட்டையில இருக்கு" ஒரு சிங்கள பொலிஸ்காரர் அவருக்குத் தெரிந்த தமிழில் கேட்டார்.

"நான் என்னோட மகளோட வீட்டுக்குப் போறான் ஐயா. இந்த சாமானுகளை கொடுத்துவிட்டு வரப் போறான் ஐயா"

"ஐடிண்டி காட் நம்பர் படிதானே வரணும். அதுவும் அவசியம் எண்டால் மாத்திரம்தான் வரலாம். ஹரித "

"ஒமையா இது அவசரம்தான் என் மகள் வீட்டுல சமையல் சாப்பாடு செய்ய சாமான்கள் ஒண்டும் இல்லையாம் ஐயா அதுதான் நான் வாங்கிட்டு போறேன்"

"மகள் எங்கு இருக்கு "

"நாவக்குடா மெயின் ரோட்டில் தான் அவட வீடு. இதை குடுத்திட்டு உடனே திரும்பி வந்திடுவேன் "

'"உன்னோட ஐடி கொடு பாக்கிறது " பொலிஸ்காரர் அடையாள அட்டையை கேட்டார். பொன்னம்பலத்தார் தனது சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை எடுத்து கொடுத்தார். அதை வாங்கி பார்த்த பொலிஸ்காரர் . "இண்டைக்கு சந்துதா .என்ன நம்பர் கடைசி இருக்க வேணும் "

"இண்டைக்கு திங்கள்கிழமை கடைசியில, நம்பர் ஒண்டு, அல்லது ரெண்டு இருந்தால் வெளியில் வரலாம் எண்டு சொன்னாங்க.எனக்குக் கடைசி இலக்கம் ரெண்டில் முடியுது ஐயா "

"ஹரி ஹரி. நொம்பர் தெக்காக் ஹரி, ஆ கெதியா போயிட்டு வரணும் " என்று பொலிஸ்காரர் சொன்னதும், சந்தோசத்தில் பயணத்தைத் தொடர்ந்தார் பொன்னம்பலம். பழைய கல்லடிப் பாலத்தால் சைக்கிளைச் செலுத்தி கல்லடி தாண்டி,சிவானந்தாகல்லூரி இசைக்கலூரி எல்லாம் கடந்து ஒருவகையாக நாவற்குடா வந்து தட்டியது பொன்னம்பலத்தாரின் ஈருருளி ரதம். அவர் சொன்னமாதிரி பிரதான வீதியிலேயே அவரின் மகள் ஈஸ்வரியின் வீடு இருந்தது. வாயில் கேற்றை திறந்துகொண்டு வியர்வை வழிந்தோட உள்ளே சென்றார். சத்தம் கேட்டு வெளியில் வந்த ஈஸ்வரி தகப்பனைக் கண்டதும் பதறிக்கொண்டு,

"அப்பா என்னப்பா இதுகோலம்.இந்த வேகா வெயிலில் சைக்கிளில் வந்திருக்கிறீங்க! இவர் இண்டைக்கு வேலையால வந்தபிறகு நான் வரத்தான் இருந்தனான், அம்மாவையும் பார்த்து ஆறேழு நாளாப்போச்சு. நீங்க என்னத்துக்கு அவசரப்பட்டு இப்போ வந்த நீங்க," என்று சொல்லிக்கொண்டே வெளியில் கயிற்றில் தொங்கிய துவாயை எடுத்துக் கொடுத்து "அப்பா இந்தாங்கோ முதலில் இதால வேர்வையைத் துடையுங்கோ." என்றாள். அப்போது பேரப்பிள்ளைகளும் வெளியில் வந்து விட்டார்கள்.ஆனால், அம்மப்பாவுக்கு கிட்டே வராமல் தள்ளியே நின்றார்கள். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களோ? மகள் கொடுத்த துவாய் துண்டால் வியர்வையைத் துடைத்துகொண்டு, சைக்கிளில் கட்டியிருந்த சாமான் பையை அவிழ்த்து எடுத்துக் கொண்டு வீட்டின் மண்டபத்துக்குள் வந்தார்.

"இதெல்லாம் உனக்குத்தான் மகள் வாங்கி எடுத்துக்கொண்டு வந்தனான்.எப்படியும் இண்டைக்கு உங்களை பார்த்திடவேணும் எண்டு இரவே தீர்மானிச்சுப்போட்டன். நல்லவேளை இண்டைக்குக் காசும் கிடைச்சுது. சந்தையும் ஊறணியில் கூடி இருந்தது. அதுதான் அம்மாவுக்கும் தெரியாமல் நேரே இங்க வந்திட்டேன் " என்று சொல்லிக்கொண்டே பையைக் கொடுத்தார். "ஏனப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு இதெல்லாம் செய்தனீங்க. எவ்வளவு தூரம் இந்த பாரத்தோட சைக்கிளில் வந்திருக்கிறீங்களே. எனக்கிட்ட சாமானுகள் எல்லாம் கொஞ்சம் இருக்கு.இண்டைக்கு போய் வாங்கலாம் என்று இருந்தேன் " "சரி விடு பிள்ள. பரவாயில்ல.வீட்டில் அடைபட்டு கிடந்தது அலுப்பா போச்சு. அமுதனும் ஆஸ்பத்திரி வேலைக்கு கட்டாயம் போயாகணும்..அதுதான் யோசிச்சேன் சாமானுகள வாங்கிட்டு போவம் எண்டு."

பிள்ளைகள் இரண்டும் பார்த்துக்கொண்டு நிற்க, பதறிப்போய். அந்தப் பையிலிருந்து முதலில் சொக்லேட் பக்கற்றுகள் இரண்டையும் எடுத்துத் தள்ளி நின்றே இருவருக்கும் கொடுத்தார்.அவர்களும் சந்தோசத்தோட வாங்கிகொண்டு உள்ளே ஓடி விட்டார்கள்.ஈஸ்வரி உள்ளே சென்று எலுமிச்சை சாறு பிழிஞ்சு தண்ணீர் கலந்து, குடிக்க கொடுத்தாள் தகப்பனுக்கு. நல்ல தாகத்தில் இருந்தவர் அதை வங்கி குடித்துவிட்டு." அப்பாடா, இப்பதான் நல்லாக என்ர தாகம் அடங்கியது மகள்." என்றார்."பின்ன, இருக்காதா இவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வாறதெண்டால் சும்மாவா அப்பா""அதெல்லாம் ஒண்டுமில்ல பிள்ள. உங்களைப் பார்ததேபோதும்! சமையல் சாமான் எல்லாம் இருக்கு.நேரத்தோட சமைச்சி பிள்ளைகளுக்குக் குடுத்து நீயும் சாப்பிடு. மருமகன் வந்ததும் அவருக்கும் பரிமாறு. வெயில் உச்சிக்கு வாறதுக்கு இடையில நான் கிளம்புறன் என்ன" "ஓமப்பா உங்களைக் கண்டதில் எனக்கும் சந்தோசம்தான்"என்றவள் உள்ளே அறைக்குள் சென்று ஒரு பையை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தாள். "இதென்ன மகள்?" புரியாமல் கேட்டார். "அது அம்மாட ஆஸ்மா குளிசைகள். இவர் நேற்றே வாங்கி கொண்டு வைத்தவர். இதை அம்மாவிடம் கொண்டுபோய் கொடுங்கள்.முடிந்தால் நாங்கள் அங்கு வருவோம்."என்றவள் அப்பாவின் சட்டைப் பையிலும் எதையோ திணித்தாள்.

"இதென்ன என்ன பிள்ளை?" என்று பதறினார் பொன்னம்பலம்."அது உங்களுக்கு செலவுக்குக் காசு கொடுக்கச்சொல்லி நேற்று இவர் என்னிட்ட தந்தவர். நான் வரும்போது தரலாம் என்று இருந்தேன். பரவாயில்ல நீங்க வந்தபடியா உங்களிட்ட தாறன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஊரடங்கு இருக்குமோ தெரியாது " என்றாள் . "இல்ல மகள் நீ இத வச்சிகொள் பிள்ள.என்னிட்ட இண்டைக்கு அவங்க தந்த காசு மிச்சம் இருக்கு." " அப்பா நீங்க கொண்டுவந்த சாமானுகளுக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியும், அம்மாவின் செலவு வேற இருக்கு. நீங்க வைத்துகொள்ளுங்கோ. சரி நீங்க சொன்னமாதிரி உச்சி வெயிலுக்கு முன்னே வீட்டுக்கு போயிடுங்க.

அம்மாவும் உங்களைக் காணாமல் பயந்துபோய் இருப்பா" என்ற ஈஸ்வரி தகப்பனைப் பத்திரமாக ரோட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து வழியனுப்பி வைத்தாள். அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தன் பார்வையிலிருந்து மறையும் மட்டும் அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்.வம்மிப்பூ வடிவம் கொண்ட கொரோனாவுக்கு தெரியுமா தந்தை மகள் பாசம்!

மகளையும்,பேரப்பிள்ளைகளையும் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் பொன்னம்பலத்தாரின் மனம் சொல்லியது. "கெட்ட கிருமியே நீ எட்டப் போயிடு.! எங்கள நிம்மதியாக வாழவிடு. அப்பா மகள் பாசம் எல்லாத்தையும் விட பெரிசு தெரிஞ்சுக்கோ" என்று சொல்லியது..

- கோவிலூர் செல்வராஜன்

Comments