அரசின் அறிவுறுத்தல்களும் மக்களின் பொறுப்புகளும் | தினகரன் வாரமஞ்சரி

அரசின் அறிவுறுத்தல்களும் மக்களின் பொறுப்புகளும்

கொவிட்- 19 தற்போது நான்கு நிலைகளில் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. சமூகப் பரவலானது நான்கு நிலைகளில் ஏற்படுவதோடு, இலங்கையில் தற்போது 3 ஆவது நிலையில் கொவிட் 19 தொற்று பரவல் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் கணித்துள்ளதாக அதன் புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. 

புதிய வகைப்படுத்தலின்படி, நிலை 3 கடந்த சில வாரங்களாக உள்நாட்டில் பரவலாக பாதிக்கப்பட்ட தொற்றாளர்களைக் குறிக்கிறது. சூழ்நிலை மதிப்பீட்டின்படி, மேலும் நான்கு சூழ்நிலைகளும் வரையறுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கின்றது. 
சூழ்நிலை நிலை 3 என்பது சமூக பரவல் நிலைமை என வரையறுக்கப்படுகிறது. இதற்கு பதிலளிக்க குறைந்த அல்லது கூடுதல் திறன் மற்றும் சுகாதார சேவைகளுக்கு அதிகமான பாதிப்பாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமையினள் கீழ், நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அதிக நீரோட்டம் நிறைந்த பகுதியாக கருதப்படும் கொழும்பு நகரில் கொவிட் 19 பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

மக்கள் தொகை அதிகமுள்ள அதேபோல் அதிக நீரோட்டம் நிறைந்த பகுதியாக கருதப்படும் கொழும்பில் கொவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டுக்கும் மீன் விற்பனை செய்யும் மத்திய நிலையத்தில் ஏற்பட்ட தொற்றே இன்றைய நிலைக்குக் காரணம். தற்போது மினுவாங்கொட கொவிட் தொத்தணி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கொத்தணி மூலமே நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாம் தோல்வியடையவில்லை. தோல்வியடைய போவதும் இல்லை. நாட்டில் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் என்று வலியுறுத்தியிருக்கிறார் இராணுவத்தளபதி. 

இதேநேரம், மேல் மாகாணத்திலேயே கூடுதலான கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் பத்தாயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளனர். அதிலும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் கடந்த வியாழக்கிழமை 271பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கடுத்ததாக கம்பஹா மாவட்டம் உள்ளது. 

இதன் காரணமாகவே மேல் மாகாணத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்திருக்கிறது. மேல் மாகாணத்திலிருந்து யாரும் வெளி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு நாட்டையும் கருத்திற்கொண்டு பார்க்ைகயில் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் அதி கூடிய தொற்றாளர்கள் இருப்பதால், கொவிட் 19 வேறு பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்ைககளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 

ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்காமல், நோய்த் தொற்று ஏற்படுள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்தி முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்க நிலையில் உள்ள பகுதிகளிலிருந்து யாரும் வெளிச்செல்லவோ, வெளியிலிருந்து உட்செல்லவோ முடியாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கு "ட்ரோன்" கமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு வடக்குப் பகுதியில் அவ்வாறு அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்ட பதினைந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ட்ரோன் கமரா செயற்படுத்தல் நடவடிக்ைக வெற்றியளித்திருப்பதனால், இப்போது படையில் அதற்கென்றே ஒரு தனியான பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. 
இதற்குக் காரணம் மக்களைத் தண்டிக்கும் நோக்கத்திற்காக அல்ல; மக்களைக் காப்பாற்றும் நோக்கத்திற்கானது என்று மக்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பென்னம்பெரிய வர்த்தக நிறுவனங்களை நடத்தும் தொழில் அதிபர்கள்கூட அரசாங்கத்தின் இந்த அறிவுறுத்தலைப் பாராட்டியிருக்கிறார்கள். 

தீபாவளிப் பண்டிகை காலத்தில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக பஸ் போக்குவரத்தையும் ரயில் சேவைகளையும் அரசாங்கம் இடைநிறுத்தியிருக்கிறது. பண்டிகைக் காலப்பகுதியில் ஆன்மிக செயற்பாடுகளில் ஈடபடுவதுடன், அரசாங்கத்தினாலோ அல்லது வேறு மக்கள் நலன்சார் ஸ்தாபனங்களாலோ விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மதித்து நடப்பதே முதன்மையான தர்மமாகக் கருதப்படுகிறது. எனவே, அரசாங்கத்தையோ பொலிஸாரையோ ஏமாற்றுவதாக எண்ணிக்ெகாண்டு செயற்படுவது தங்களைத் தாங்களே ஏமாற்றிக்ெகாள்வதற்குச் சமமாகும். 

ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குப் போவதற்காக ஒரு சிலர் குறுகிய வழிகளைப் பின்பற்றவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. பிரதான பாதை வழியாகச் சென்றால், சிக்குப்பட்டுவிடுவோம் என்று கருதி, பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிடலாம் என்று மாற்றுப் பாதைகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இன்னும் சிலர் தங்கள் அலுவலக அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வேறு வேறு கருமங்களை ஆற்றிக்ெகாள்வதற்கு முயற்சிக்கின்றனர். 

எனவே, நாட்டின் தற்போதைய நிலவரத்தையும் மக்களையும் கருத்திலும் கவனத்திலும் எடுத்து, மக்கள் அரசாங்கத்தினதும் மருத்துவ உலகத்தினதும் அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றியே ஆகவேண்டும். அதன் மூலமாகவே கொவிட் 19ஐ நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்ட முடியும்.  

Comments