நாட்டின் சுயாதீனத்தன்மையினைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையாகும் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டின் சுயாதீனத்தன்மையினைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையாகும்

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ கடமைகளைப் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்திருக்கின்றது.  

இந்த ஒரு வருட காலத்தினுள் ஜனாதிபதியின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கான சிறந்த நேரமாகும். அவ்வாறான மதிப்பீட்டினைச் செய்வது அவரை வர்ணிப்பதற்கோ அல்லது புகழ் பாடுவதற்கோ அல்லாமல் அது ஜனாதிபதியின் வெற்றிக்காக வாக்களித்த இந்நாட்டின் 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பதனாலாகும். இதன் மூலம் அவர்களுக்கு தமது தீர்மானம் சரியானதா? பிழையானதா? இதனால் திருப்தியடைய முடியுமா? என்பது தொடர்பில் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.  

சில நாடுகளில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ஒருவர் அல்லது அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அதன் பதவிக்காலத்தில் அரைவாசி கடந்த பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அது “ரிகோல் ரெபரெண்டம்” என அழைக்கப்படுகின்றது.  

வெனிசியுலா மற்றும் இன்னும் பல நாடுகளிலும் இவ்வாறான முறை காணப்படுகின்றது. இதன் மூலம் இடம்பெறுவது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் தொடர்பில் மக்களின் மதிப்பீடு எவ்வாறு உள்ளது என்பதை அறிவதே தவிர அரசாங்கத்தை நீக்குவதல்ல. ஜனாதிபதியின் செயற்பாடுகள் எவ்வாறுள்ளது என்பதை பார்ப்பதேயாகும். இது ஒரு வகையான அளவுகோளாகும். இவ்வாறான கருத்துக் கணிப்பில் அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் அரசாங்கம் விலகிக் கொள்ளவும் முடியும். எனவே இந்த மதிப்பீடும் இவ்வாறான “ரிகோல் ரெபரெண்டம்” ற்கு சமமானதாகும். 

இன்று இதனைச் செய்ய வேண்டியிருப்பது மிகவும் பாதகமான சூழலினுள்ளேயாகும் என்பதை நாம் இங்கு மறந்து விடக்கூடாது. அது கோவிட் - 19 உலகளாவிய பேரழிவின் பரவலாகும். .  

முதலாவது கொவிட் - 19 அலையினைப் போலல்லாது இதன் தொற்றாளர்கள் நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் இனங்காணப்பட்டுள்ளார்கள். எனவே இந்த கருத்துக் கணிப்பை மேற்கொள்வது மக்கள் அச்சத்திற்குள்ளாகி இருக்கும் சந்தர்ப்பத்திலாகும்.  
இந்த அச்சம் மற்றும் அதிர்ச்சியை இந்த அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் பல மடங்கில் பயன்படுத்திக் கொண்டுள்ள நேரம் இது.  

****** 
இந்நாட்டின் அடுத்தடுத்த கால அரசியலில் இவ்வாறான அருவருப்பான அம்சங்கள் இருந்தன. என்றாலும் சமூக ஊடகங்கள் என்று பயன்பாட்டிற்கு வந்துள்ள கருத்துக்களைத் தெரிவிக்கும் மேடைகள் காரணமாக இது மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுள்ளது. இம்முறையின் கீழ் சில நேரங்களில் இரு தரப்பினது அரசியல்வாதிகளும் தமது எதிர்த் தரப்பினரை சமூக ஊடகங்களின் ஊடாகத் தாக்குவதற்கு கூலிப்படைகளை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது இடம்பெறுவது காரணங்களுடன் அன்றி அவமதிப்புக்கள் மற்றும் போலியான விடயங்களை சமூகமயப்படுத்தும் நோக்கிலாகும். 
***** 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அதிகாரத்திலிருந்து விரட்டும் திட்டம் ஆரம்பமானது, 2010ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டாவது தடவையாக அதிகாரத்திற்கு வந்த நேரத்திலிருந்தாகும்.  

இதன் பிரதான தொனிப்பொருளாக இருந்தது, “மஹிந்த ஹொரா” (மஹிந்த திருடன்) என்ற சமூகமயப்படுத்தலாகும். சுற்றியிருப்பவர்களும், அதிகாரிகளும் திருடர்கள் என்றே அந்நேரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டனர். இம்முறை அவர்கள் சமூகமயப்படுத்துவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பது கோட்டாபய தோல்வியானவர் என்ற கருத்தினையேயாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஒரு வருட செயற்பாடுகளை இவ்வாறான பின்னணியிலேயே எம்மால் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கின்றது.  

கோட்டாபய ராஜபக்‌ஷ போன்ற அரசியலே செய்யாதவர்கள் 69 இலட்சத்திற்கும் அதிகமானோரால் தெரிவு செய்யப்படுவதற்கு தாக்கத்தைச் செலுத்திய காரணிகள் என்ன என்பது இங்கு முக்கியமானதாகும். அந்நேரம் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள், 2015ம் ஆண்டில் 62 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளினால் அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்துச் சென்ற மக்கள் எதிரி, மற்றும் நாட்டிற்கு எதிரி, பாதுகாப்பு படையினரைக் காட்டிக் கொடுத்த, நாட்டை நிலையற்றதாக ஆக்கிய, நாட்டின் வளங்களை விற்ற ஆட்சி தொடர்பில் விரக்தியடைந்திருந்தனர்.  

அவர்கள் இதன் காரணத்தினால்தான் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். அவர் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தார். அது தொடர்பான அறிஞர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார். இதன் அடிப்படையிலேயே “செழிப்பான நோக்கு” என்ற தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். இதன் மூலம் இந்நாட்டின் வறுமை, கிராமப் புற மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு கொள்ளப்பட்டது. அரச நிர்வாக செயற்திறனின்மை என்பது, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது, தேசிய பொருளாதாரம் ஒன்று தேவை என்பது, உலக வல்லரசுகளின் கயிறு இழுத்தலில் சிக்கிக் கொள்ளாத பயணம் நாட்டிற்கு தேவை என்பது இனங்காணப்பட்டது.  

இதன் ஊடாக அவர் புதிய திசையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நீண்ட காலமாகவே அனைத்து அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தப்பட்ட வீண் விரயத்தினை முடிந்தளவுக்கு குறைந்த மட்டத்திற்கு கொண்டு வந்தார். விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த அரசியல்வாதிகளின் தனிப்பட்ட யாத்திரைகளை நிறுத்தினார். உறவினர் உபசரிப்புக்களைப் பாரியளவில் நிறுத்தினார். அவர் இவை அனைத்தையும் செய்தது இந்த அனைத்தும் வேரூன்றியிருந்தது அரசியல் கலாசாரத்தினுள்ளேயே என்பதை மறந்து விடக்கூடாது. அத்தரப்பிலும் அந்தக் கலாசாரத்திற்கு இசைவானவர்கள் இருக்கின்றார்கள். அவர் அதிகாரத்திற்கு வந்தது தனிக் கட்சியினலன்றி, முன்னணியிலாகும். அந்த முன்னணியில் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட குழுக்களும் உள்ளார்கள்.  

மிகக் குறுகிய காலத்தினுள், ஐந்து வருடங்களாக வரிசையில் நின்ற 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.  

இந்தத் தொகை மேலும் உயர்ந்தது. மற்றொரு முக்கிய நடவடிக்கையாக சமூகத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் ஏழைக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையாகும். இதன் முக்கியத்துவம் இவர்களுக்குத் தொழில் கிடைப்பதல்ல. அங்கு சாதகமான சமூக கலாசார பிரதிபலன்களும் உள்ளன. எந்த தொழில்களையும் தேடிக் கொள்ள முடியாத இந்த சமூகத் தரப்பினரிடையே சமூக சீர்கேடு, குற்றச் செயல்கள், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடல் என்பன அதிகமாகும். சரியாக கல்வி மற்றும் திறமைகளும் இல்லாத இத்தரப்பினருக்கு சரியான வாழ்வாதாரம் இதன் மூலம் வழங்கப்படுகின்றது. எம்மால் உடனே செய்யக் கூடியவற்றை இறக்குமதியை வரையறுத்து உற்பத்தியை உயர்த்தியதோடு ஏற்றுமதியும் உயர்ந்தது.  
இவை அனைத்தினதும் பெறுபேறுகள் ஒரேயடியாகக் கிடைக்கப் போவதில்லை. வரிகளைக் குறைப்பது போன்ற சந்தர்ப்பங்களில் சில வேளை

அதன் நன்மை நுகர்வோருக்குக் கிடைக்காமல் போகும். எதிர்பார்த்த இலக்கினை பூர்த்தி செய்து கொள்வதற்கு முடியாத இவ்வாறான சந்தர்ப்பங்கள் எப்படியும் இருக்கும்.  

ஒரு வருடத்தினுள் இடம்பெற்ற அனைத்தையும் ஆராய்வதை விட இங்கு நாம் அதிக கவனம் செலுத்துவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தின் முதலாவது வருடத்தினுள் வெளிநாட்டு உறவுகளை முகாமைத்துவம் செய்த முறையினை ஆராய்வதற்காகும். அவர் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது நவம்பர் 18ம் திகதியாகும். டிசம்பர் மாதமாகும் போது சீனாவில் கொரோனா தொற்று ஆரம்பித்தது. 

இவ்வருடத்தின் ஜனவரி மாதமாகும் போது சீனாவின் வூஹான் மாநிலத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை அழைத்து வர வேண்டியேற்பட்டது. அதன் பின்னர் இத்தொற்று உலகின் அனைத்து இடங்களிலும் பரவிய போது உலக சுகாதார அமைப்பு கொரோனா உலகளாவிய தொற்று நிலையினை பிரகடனப்படுத்தியது.  

இலங்கையின் கொரோனா தொற்றின் முதலாவது நோயாளி பெப்ரவரி மாதத்தின் இனங்காணப்பட்டார். அது ஒரு சீன பெண்ணாகும். இந்நாட்டில் சிகிச்சை பெற்ற அப்பெண் சுகமடைந்து தமது நாட்டிற்குச் சென்றார். இந்நாட்டினுள் முதலாவது நோயாளி மார்ச் மாதத்தில் இனங்காணப்பட்டார். அந்நேரத்திலிருந்து உலக நிலைப்பாடானது மிகவும் மோசமான நிலைக்குள் சென்று கொண்டிருந்த போது அந்த முதல் அலையினை மிகவும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையால் முடிந்தது. அந்த முறையினையும், பெற்றுக் கொண்ட வெற்றியையும் உலக சுகாதார அமைப்பும், உலகின் ஏனைய நாடுகளும் பாராட்டின.  

அந்த தொற்று ஏற்பட்ட சமயத்தில் இந்நாட்டில் தங்கியிருக்க நேர்ந்த வெளிநாட்டவர்கள், இலங்கை கடைபிடித்த வேலைத்திட்டங்களோடு, தமது விடயத்தில் நடந்து கொண்ட முறையினை உலகிற்கு மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியிருந்தனர்.  

இந்நாட்டில் எடுத்துக் கொள்ளக் கூடிய முன்மாதிரிகள் தொடர்பிலும் சிலர் குறிப்பிட்டார்கள். உலகில் முதற் தடவையாக இந்தத் தொற்றுக்கு முகங்கொடுப்பதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களை ஏற்படுத்தியது நாமேயாகும். குறுகிய நிலப்பரப்பில் 22 மில்லியன் மக்கள் பரந்து வாழும் நாடாக இருந்த போதிலும் எம்மால் இந்நிலையினை மிகவும் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு முடிந்தது.  

அவ்வாறு செய்வதற்கு முடிந்தது, அடிக்கடி அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, அவற்றை ஆய்வு செய்தும், அதற்கமைய தீர்மானங்களை எடுத்து ஜனாதிபதி ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை இதற்காகவேச் செலவிட்டு அர்ப்பணிப்புடன் வழங்கிய தலைமைத்துவம் மற்றும் சுகாதார, பாதுகாப்பு போன்ற துறைகளின் அர்ப்பணிப்புக்கள் மற்றும் பங்களிப்புக்களினாலாகும்.  

இயற்கையாக ஏற்படும் இவ்வாறான தொற்றுக்கள் உலக வரலாற்றில் அவ்வப்போது தோன்றியுள்ளது.  

அதற்கு நூறு வருடங்களுக்குப் பின்னர் வந்துள்ள கொரோனா உலகளாவிய தொற்றின் இரண்டாவது அலைக்கு முகங்கொடுப்பதற்கு உலகிற்கு நேர்ந்துள்ளது.  

கொரோனா முதலாவது அலையோடு உலகளாவிய பொருளாதாரம் சரிவடைந்தது. சுற்றுலாத்துறை முற்றாகவே சரிவடைந்ததோடு, ஏற்றுமதி இறக்குமதிக்கும் இந்நிலை தாக்கத்தைச் செலுத்தியது. இதன் தாக்கம் இலங்கைக்கும் பொருந்தும். வெளிநாட்டில் தொழில் புரிவோரிடமிருந்து கிடைக்கும் வருமானம் பெருமளவில் குறைவடைந்துள்ளது. ஜனாதிபதியால் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நேர்ந்திருப்பது இவ்வாறான நெருக்கடிமிக்க பின்புலத்தினாலாகும். 

முதலாவது அலையினால் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இலங்கை இந்த இரண்டாவது அலையினையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டதைப் போன்று இதில் சில குறைபாடுகள், பின்னடைவுகள் இடம்பெற்றுள்ளது. அவற்றையும் இனங்கண்டு கொண்டும், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டும் எதிர்காலச் செயற்பாடுகள் திட்டமிடல் பணிகள் இடம்பெறுகின்றன.  

இது கூட்டுச் செயற்பாடாகக் கருதப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் பொது மக்கள் பொறுப்புடனும், குறித்த துறையினருடன் ஒத்துழைப்புடனும் செயற்படுவது மிகவும் முக்கியமானதோடு தேவையானதுமாகும். அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான தொற்றுக்களோடு இந்த தொற்றும் ஒரு நாள் அகன்று விடும். இது தொற்றுக்களின் தன்மையாகும். இலங்கைக்கும் இதற்கு முகங்கொடுத்த போது இருந்த உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு அமைய வரும் காலம் தொடர்பில் கணிப்புக்களைச் செய்ய முடியும்.  

ஒரு வருட பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் போதும், அதன் ஊடாக எதிர்காலத்தைப் பார்க்கும் போதும் உலக அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதும், சரியான நிலைப்பாட்டிற்கு வருவதும் முக்கியமானதாகும். நாம் வாழ்வது மேலாதிக்க உலக முறையைக் கொண்ட சூழலிலாகும். இதன் மூலம் கருதப்படுவது உலகில் செல்வந்த மற்றும் பலமிக்க நாடுகள் அனைத்து உலகையும் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது என்பதாகும்.  

தற்போது இந்த மேலாதிக்க உலக முறையில் உச்சியில் இருக்கும் அதிகார மையத்திற்கு சவால் விட்டுக் கொண்டு மேலதிக அதிகார மையங்கள் சிலவும் எழுந்திருக்கின்றது. அவ்வாறான மேலதிக அதிகார மையத்தினிடையே முன்னணியில் இருப்பது சீனாவாகும். அதற்கு அடுத்ததாக ரஷ்யா இருக்கின்றது.  

இவ்வருட அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலின் போது ஜோ பைடன் கூறியது, அமெரிக்காவுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிரி ரஷ்யா என்றேயாகும். இந்த அதிகார மையங்களிடையே செல்வம் மற்றும் அதிகாரம் என்பவற்றில் உலகில் முன்னணி நிலைக்கு வரும் போராட்டத்தில் வர்த்தக ரீதியில் கடல் போக்குவரத்து துறையிலும், மூலோபாயங்களிலும் மிகவும் முக்கியமான புவியியல் இடத்தில் அமைந்துள்ள இலங்கையைத் தமக்கு கீழ் படிய வைப்பதற்கு அவர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர்.  

அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம், ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகள் எமது நாட்டிற்கு அழுத்தங்களை வழங்கிக் கொண்டிருப்பது இதனாலாகும் என்பது தெளிவானதாகும். இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியிலும் இன்று வரையிலும் வீழ்ந்து விடாமல் இருப்பதற்கு எம்மால் முடிந்திருக்கின்றது.  

MCC ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முயல்வதாக இன்று கோசமிடும் ஜே.வி.பி, அன்று அவர்கள் ஒத்துழைப்பு வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் 2019 ஒக்டோபர் 30ம் திகதி MCC க்காக அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட போது அமைதியாகவே இருந்தது. இன்றிருக்கும் எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் கூட அன்று அந்த அமைச்சரவையில் இருந்தார். இவர்கள் MCC ஐ அரசியல் ஆயுதமாக எடுத்துக் கொண்டுள்ளதோடு, இன்று வரையிலும் அரசாங்கம் இதற்கு விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை.  

சீனாவின் உயர் மட்ட பிரதிநிதி யெங் ஜீயென் வருகை தந்த சந்தர்ப்பத்திலும், அமெரிக்காவில் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பெயோ வருகை தந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மிகத் தெளிவாகவே கூறிய விடயம், இலங்கை பின்பற்றிக் கொண்டிருப்பது கட்டுப்படாத, நடுநிலையான வெளிநாட்டு கொள்கையையே என்பதேயாகும். நாட்டின் இறையாண்மை, சுயாதீனத் தன்மை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பில் எந்த வகையிலும் இடைநிலை சமரசத்தில் ஈடுபடுவதற்கு மேலும் தயாராக இல்லை என்றும் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

எனவே, குற்றச்சாட்டுக்களைச் சுமத்துபவர்கள் அவ்வாறு செய்து கொண்டிருப்பது சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாது, அவ்வாறான ஒன்று செய்யப்பட்டுள்ளது அல்லது செய்வதாக எந்த உத்தரவாதமும் இல்லாத பின்னணியிலாகும். அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணி செயற்படுவது எமது கொள்கையாக உள்ளது. முப்பது வருடங்களாக தொடர்ந்து சென்ற யுத்தம், எல்.டி.டி.ஈ பிரிவினைவாத பயங்கரவாதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் படைகளின் தலைமைத்துவத்தின் கீழ் தோற்கடிக்கப்பட்டதோடு நிறைவடைந்தது.  

அதற்குத் தேவையான அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கி படைகளின் தலைவராக அவர் தீர்மானங்களை மேற்கொண்ட போது யுத்த வெற்றிக்குத் தேவையான இராணு மூலோபாயங்களை உருவாக்கிச் செயற்படுத்துவதற்காக முன்னணிச் செயற்பாடுகளை முன்னெடுத்தது அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவாகும். பயங்கரவாதத்தை ஒழித்ததுடன் இலங்கையின் ஒருமைப்பாட்டின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டதோடு, எல்லா இன மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டது.  

அவ்வாறிருந்தும் ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட அடிப்படை இல்லாத யுத்தக் குற்ற குற்றச்சாட்டிற்கு பதில் வழங்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. நல்லாட்சி அரசாங்க சமயத்தில் அமெரிக்காவில் தலைமையில் இலங்கை தொடர்பில் அந்த பேரவைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரேரணைக்கு இலங்கையும் இணை கூட்டிணை வழங்கியிருந்தது. 
நாட்டிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அவ்வாறே தானும் உடந்தையாக இருந்தது மோசமான ஒன்றாகும். ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வந்த பின்னர் இலங்கை அந்த இணை கூட்டிலிருந்து விலகிவிட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.  
சர்வதேச உறவுகள் விடயத்தில் ஒரு நாட்டில் வெளிநாட்டுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் தொடரே என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் இங்கும் தெளிவானதாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் உள்நாட்டுக் கொள்கையாக இருந்தது, எமது நாட்டு அரசியல், தேர்தல் முறை, வர்த்தகம் போன்ற இவை அனைத்தும் வெளி உலகின் பலமிக்க நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகும்.  

அவ்வாறிருந்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையின் கீழ் உள்நாட்டுக் கொள்கையாக இருப்பது சுயாதீனத் தன்மை, இறையாண்மையினைப் பாதுகாத்தல், தேசிய வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு பலமிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதும் இதனை முதன்மைப் படுத்தியாகும். அது பிளவுபடாத மிதமான வெளிநாட்டுக் கொள்கையாகும்.  

கடந்து சென்ற ஒரு வருட காலத்தினுள் இந்நாட்டின் எந்த ஒரு வளங்களும் வெளிநாடுகளுக்கு அற்ப காசுக்காக விற்கப்படவில்லை. ஜப்பான், இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம் போன்ற உலகின் பலமிக்க பொருளாதாரம் மற்றும் இராணுவ சக்திகளுக்கிடையிலான போட்டியும் எளிதானதல்ல. அவ்வாறான பின்புலத்தில் இந்த சுயாதீனத்தன்மையினை முன்னெடுத்துச் செல்வது சவாலானதும், வெற்றியுமாகும்.  

இலங்கையை முன்னேற்றமடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும், நவீன தரத்திலான அரசாகவும், ஒழுக்கம் மிகுந்த நாடாகவும் ஆக்கும் சவால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது வெளியார் அழுத்தங்களுக்கு மத்தியிலாக இருந்தாலும் பலமிக்க அரசாங்கமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்புடனாகும். இதற்கு சுத்தமான செயற்திறன்மிக்க அரச சேவையும் அவசியமாகும். பிளவுபடாத மத்திய வெளிநாட்டு கொள்கையினை ஏற்படுத்திச் செயற்படுத்துவதும் இதற்கு பொருந்தும். 

கோவிட் - 19 காரணமாக உலகளாவிய பொருளாதாரம் கடுமையான பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கின்றது. அமெரிக்காவில் மாத்திரம் 50 மில்லியன் அளவிலானோர் தொழில்களை இழந்தருக்கின்றார்கள். வரும் காலங்களில் பாரிய பஞ்சத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என கூறப்படுகின்றது.  

இவ்வாறான உலகலாவிய சவால்களுக்கும் பலத்துடன் முகங்கொடுத்துக் கொண்டு சுதந்திர நாடாக எழுந்து நிற்பதோடு, அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும், நியாயமான முறையில் வளங்கள் பிரிந்து செல்லும் நாகரீகமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்துள்ள வேலைத்திட்டங்களைத் தவிர வேறு வெற்றிகரமான மாற்றுவழிகள் இல்லை என்பது தெளிவானதாகும்.

தம்மிக செனவிரத்ன 
தமிழில் - எம். எஸ். முஸப்பிர்  

Comments