புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கை குடும்பஸ்தர் மரணம்; விஸா பூரணத்துவம் இன்மையால் அவரது குடும்பத்தை நாடுகடத்தவுள்ள அவுஸ்திரேலியா | தினகரன் வாரமஞ்சரி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கை குடும்பஸ்தர் மரணம்; விஸா பூரணத்துவம் இன்மையால் அவரது குடும்பத்தை நாடுகடத்தவுள்ள அவுஸ்திரேலியா

இலங்கையிலிருந்து சென்று அவுஸ்திரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்ததையடுத்து அவரின் மனைவியும் பிள்ளைகளும் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக   அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ராஜ் உடவத்த என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கெம்ப்ஸி பகுதியில் தற்காலிக தொழில் விசா ஒன்றின்கீழ் குடியேறியிருந்தார்.  

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 2016 இல் அவரது மனைவி 4 பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியா சென்று அவருடன் இணைந்துள்ளார்.   எனினும் 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜ் உடவத்த, தொடர்ந்தும் தொழில் செய்யமுடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், தொழில் விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு அவர் உள்ளாகியிருந்தார். 
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த ராஜ் உடவத்த சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நாடுகடத்தப்பட்டுவிடுவோமா என்ற அச்சத்தில் மாணவர் விசாவிலுள்ள மூத்த மகளைத் தவிர அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனையவர்கள் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர். 

ஆனால் அவுஸ்திரேலியாவின் குடியுரிமை சட்டத்தின் படி ராஜ் உடவத்த மரணமடைந்து ஒரு மாதத்தில் அந்தக் குடும்பத்தின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாக குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் அல்லது ஒருமாதத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்ற தெரிவையும் குடிவரவு அமைச்சு அவர்களுக்கு வழங்கியுள்ளது. 

இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள ராஜ் உடவத்தவின் மனைவி ப்ளொரென்ஸ் உடவத்த,  
கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் கணவனையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தனக்கு அவுஸ்திரேலிய அரசு கருணைகாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், தொடர்ந்தும் கெம்ப்ஸி பகுதியிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   

Comments