எத்தகைய கொடிய கிருமியையும் அழிக்கும் ஆற்றல் மண்ணுக்குண்டு | தினகரன் வாரமஞ்சரி

எத்தகைய கொடிய கிருமியையும் அழிக்கும் ஆற்றல் மண்ணுக்குண்டு

மரணிக்கும் உயிர்கள் மண்ணிலே கலக்க வேண்டும் என்பதுதான் குர்ஆனிய  சமூகத்தின் மரபாகும். மத்திய கிழக்கில் தோன்றிய அனைத்து சமயங்களும் மண்ணிலே  புதைப்பதைத்தான் மரபாகக் கொண்டுள்ளன என்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா. தினகரன் வாரமஞ்சரிக்கு  வழங்கிய செவ்வியில் எப்படிப்பட்ட கிருமியாக இருந்தாலும்  அதனை அழிக்கும் ஆற்றல் மண்ணுக்குத்தான் உண்டு என்றார். செவ்வியின் விபரம் வருமாறு....

கேள்வி - முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது குறித்த உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது? 

பதில் -  2 வது COVID மரணமும் அதற்குப் பிந்திய கொவிட் மரணங்களும் முஸ்லிம்களுடையதாக  இருக்கத்தக்கதாக அவர்களுடைய உடல்கள் தகனம் செய்யப்பட்ட விடயம் மனதை உறுத்துவதுடன் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.  

கேள்வி - முஸ்லிம்களுடைய ஜனாஸா எரிக்கப்படுவதை தடுப்பதற்கான உங்கள் முயற்சிகளை குறிப்பிடுங்கள்? 

பதில் -  இந்தத் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற தீவிர சிந்தனையுடன் முஸ்லிம் சமூகம் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கிவருகின்றது. சர்வதேச சுகாதார அமைப்பின் விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக கொவிடினால் இறப்பவர்கள் உலகவாழ்வின் இறுதிப்பயணத்தை கண்ணியமான முறையில் முடிக்க வேண்டும். ஏனைய நாடுகளில் இது குறித்து அமுல்படுத்தப்படும் நடைமுறையை எமது நாட்டிலும் அமுல்படுத்தப்படவேண்டுமென நாங்கள் கேட்கிறோம். 

கேள்வி - முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படுவதை தடுப்பதற்காக தாங்கள் சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொண்டீர்களா ? 

பதில் - இந்த விவகாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஒருவித காழ்ப்புடன் செயற்படுவது போலத் தெரிகின்றது. நானும்  இந்த விடயத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட பலரும் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தோம். அடுத்த நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது

கேள்வி- இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் நீங்கள் முறையிட்டீர்களா? 

பதில் - கொவிட் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த தருணத்தில் மனிதாபிமான அடிப்படையில் இந்த அத்தியவசியமான, அவசர பொது வேண்டுகோளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடமும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரிடம் முன்வைத்தோம். எங்கள் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள படி எங்களது மார்க்க சுதந்திரத்தை மதித்து கௌரவிக்க வேண்டும். கொவிட்டினால் இறக்கின்றவர்களை நல் லடக்கம் செய்வதும் உலகளவில் நிறுவப்பட்ட நடைமுறையாக இருக்கிறது. அவ்வாறே இந்த நடைமுறையை நமது நாட்டிலும் அமுல்படுத்துமாறான கோரிக்கையை முன்வைப்பதுடன் அனைத்து அரசியல் தலைவர்களும் இது குறித்து இன, மத, அரசியல் பேதங்களை களைந்து உணர்வு பூர்வமாக செயற்படுமாறும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன். 

கேள்வி -20வது திருத்ச் சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

பதில் - இந்த 6 எம்.பி.க்களிடம் வினயமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவுசெய்து உங்களது தனிப்பட்ட அபிலாஷைகளை ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். நீங்கள் பெற்றுள்ள இந்த பிரதிநிதித்துவத்துக்காக எனது பங்களிப்பையும் பிரசாரத்தையும் வழங்கியிருக்கின்றேன். நீங்கள் அளித்த வாக்குறுதிகள் இந்த சிக்கலைத் தீர்ப்பதையும் உள்ளடக்கியவை என்பதை மறந்துவிட்டீர்கள். எனவே இந்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

கேள்வி – கொவிட்-19 நோயினால் மரணிப்பவர்களை புதைப்பதால் சூழலுக்கு பாதிப்பு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

பதில் - இல்லவே இல்லை.மண்ணில் புதைக்கப்படுவதுதான் சமயங்கள் கூறும் மரபாகும். உலகில் 189ற்கும் மேற்பட்ட நாடுகளில் கொவிட் நோயினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்கின்றார்கள்,எமது நாட்டில்மட்டும் எரிப்பதென்ற ஏற்பாடு ஒருதலைப்பட்சமான முடிவாகும். உலகில் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கடைப்பிடிக்கும் நாடுகளில்கூட கொவிட் நோயினால் மரணிக்கும் முஸ்லிம்களை மண்ணிலேயே அடக்குகின்றனர். மரணிக்கும் உயிர்கள் மண்ணிலே கலக்க வேண்டும் என்பதுதான் குர்ஆனிய சமூகத்தின் மரபாகும். மத்திய கிழக்கில் தோன்றிய அனைத்து சமயங்களும் மண்ணிலே புதைப்பதைத்தான் மரபாக கொண்டுள்ளன. எப்படிப்பட்ட கிருமியாக இருந்தாலும் அதனை அழிக்கும் ஆற்றல் மண்ணுக்குத்தான் உண்டு என்பதை அறிவியலும் நிருபித்துள்ளது.

கேள்வி - இலங்கையில் சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வு இல்லாமையும் இவ்வாறு முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதில் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்படும் நிலையில் தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ? 

பதில் - -உலகில் வாழும் மனிதர்கள் எந்த அந்தஸ்த்தில் வாழ்ந்தார்களோ  அந்த அந்தஸ்து அவர்கள் இறக்கும் போது அவர்களுடைய உடலுக்கும்  வழங்கப்பட  வேண்டும். இதுதான் அறநெறியாகும். எத்தனையோ கொடிய கொடிய வியாதிகளால் மாண்டுபோனோரை புதைத்து வந்த நிலையில் கொவிட்டை காரணம் காட்டி முஸ்லிம் சடலங்களை எரிப்பதென்பது அண்மைக்காலமாக தொடர்ந்து வந்த முஸ்லிம் விரோத போக்கின் உச்சநிலையாகவே மக்கள் கருதுகிறார்கள். 

கேள்வி – முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்காமல் பாதுகாப்பதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றியளிக்குமா? 

பதில் -- என்னைப்போல பலரும் முஸ்லிம் கோரிக்கையை  பல வடிவங்களிலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வருகின்றனர். ஒரு முஸ்லிம்மின் ஜனாஸாவை இறந்தபிறகு நல்லடக்கம் செய்வதென்பது அந்த ஜனாஸாக்கு வழங்குகின்ற கண்ணியமாகும்.இஸ்லாமிய பரிபாசையில் நல்லடக்கம் என்பது இறந்த உடலுக்கு செய்கின்ற மிகப்பெரிய கடமையாகும். அவ்வாறு செய்யப்படாமல் மாற்று வழிகளில் நடக்கும் சம்பிரதாயங்கள் பெரும்பாவமாகும்.  

கேள்வி – நீங்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் எவை ? 

பதில் - பணத்திற்கு சோரம் போகும் புதிய தலைமுறையினர் தற்போது உலகில் உருவாகி வருகின்றனர். நல்லவர்களை, பண்பாடு மிக்கவர்களை அடையாளம் கண்டு  தெரிவு செய்வது என்பது அவர்களால் முடியாத காரியமாக உள்ளது. பிரதேசவாதத்தை கிளறி ஊருக்கு ஒரு எம்.பி தேவை என்ற குறுகிய சிந்தனைப்போக்கு கட்டடவிழ்த்து விடப்படுகின்றது. பொதுத்தேர்தல் என்பது   மாவட்டந் தழுவிய தேர்தல் என்பதை மறந்து விடுகிறார்கள். 

கேள்வி – நீங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை அடைந்திருந்தாலும் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பும், மரியாதையும் இன்னும் மாறியதாகத் தெரியவில்லையே ? 

பதில் - எனக்கு அரசியலில் மோசடி செய்யத் தெரியாது. நம்பிக்கைத் துரோகமும் செய்ததில்லை. இன்றைக்கும்  எனது சொந்த ஊரான ஏறாவுரில் எனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றேன். அரசியலுக்கு வந்து நான் சொத்துக்களை சேர்த்ததுமில்லை. அபகரித்ததுமில்லை. ஆயினும் எனது கனிவான பேச்சினாலும் அன்பினாலும் இணைந்தவர்கள்தான் எனக்குரிய அதிகாரங்களை கடந்த காலங்களில் பெற்றுத்தந்திருக்கிறார்கள்.   

வாழைச்சேனை
எல்.எம்.ஹரீஸ் 

  

Comments