கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

“வாசியுங்கள் நேசியுங்கள்” என்று நூல்களைப் படிப்பதன் அவசியத்தை அவ்வப்போது உணர்த்துவது என் பழக்க தோசம். 

இந்த வாரமும் அப்படித்தான். ஆனாலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு வாசிப்பு. நுால் பக்கங்களைப் புரட்டி பதினெட்டுத் தலைப்புகளில் பல பேரறிஞர்கள், படைப்பிலக்கியத் துறையினரது பங்களிப்புகளின் தொகுப்பு. 

விசேடமாக, பாடசாலைகளில் பத்துப் பதினோராம் தர வாளைப் பருவத்தோர் வாசிக்க, கற்க, தமிழ் அறிவு பெற வெளியானது.  

‘தமிழ் இலக்கியத் தொகுப்பு’ என்பது தலைப்பு. வெளியிட்டதோ பெரிய இடம். கல்வித் திணைக்களம். முதல் பதிப்பு 2014. மறுபதிப்பு 2015. 
பங்களித்தோர் படிக்காசு புலவர், காளமேகப் புலவரிலிருந்து பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஏ. பெரியதம்பிப்பிள்ளை, தி.ந.சரவணமுத்துப்பிள்ளை தனிநாயகம் அடிகளார். ஈராக தும்பிசேர்கீரன், தொடித்தலை விழுத்தண்டினார், அ.முத்துலிங்கம், அகளகங்கன், சி.வி.வேலுப்பிள்ளை, க.தியோடர் பாஸ்கரன், சோலைக்கிளி, ஓட்டமாவடி அரபாத் வரை. 

அத்தோடு, முண்டாசுக் கவிஞன் பாரதியார் சுயசரிதை, நீதிப்பாடல்கள், குற்றாலக் குறவஞ்சிக் குறிப்புகள், நாட்டார் பாடல்கள், குகப்படலம், திருக்குறள் (பேதைமை) அற்றைத் திங்கள், கிருட்டிணன் தூதுச் சுருக்கம் என்றெல்லாம் சேர்ப்புகள். 

இங்கே நான் பதியப் போவது சில நெருடல்களை, கருத்துப் பிழைகளை, தகவல்களில் காணப்படும் குறைகளை. 
முதலில் பாரதியார் பற்றிய குறிப்பில் அவரை   ‘நாவலாசிரியர்’ என்று கூறியிருப்பது ஏற்புடையதல்ல. அதுவும் “நாவாசிரியர்” என்றே அச்சேறியுள்ளது! (கடவுளே) ‘சந்திரிகையின் கதை’ என்று முற்றுப் பெறாத நெடுஞ் சிறுகதையை மட்டும் வைத்துக் கொண்டு நாவலாசிரியர் என்று உயர் வகுப்பு மாணவர்களுக்கு அறியக் கொடுப்பது சிறப்பாகாது. வேண்டுமானால், முற்றுப் பெறாத ஒரு நாவலையும் பாரதியார் எழுதியிருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கலாம். 

முதலாம் பாடத்தின் 05 ஆம் பிரிவில், புலவர்மணி ஆ.மு. ஷரீபுத்தீன் பற்றிய குறிப்பில், "இவரது நூல்களாக முதுமொழி வெண்பா, சூறாவளிப் படைப்போர்,  புலவர்மணி செய்து புதுகுஷ்ஷாம் என்பவற்றைக் குறிப்பிடலாம்" எனப் பதிவு.

இப்படி ‘புலவர் மணி’ செய்து புதுகுஷ்ஷாம் என்றொரு நூல் எப்போதுமே இயற்றப்படவில்லையே. புலவர்மணி புரிந்ததெல்லாம் புதுகுஷ்ஷாம் காப்பியத்திலிருந்த பாரூக்கியாக் காண்டத்திற்கு உரை எழுதியமை மட்டுமே!

அடுத்து, 07ஆவது பிரிவில் இனியவை நாற்பதிலுள்ள 16ஆவது இன்னிசை வெண்பா இடம்பெற்று, பாடியவர் பூதந் தேவனார் எனக் குறிப்பு. ஆனால் மதுரைத் தமிழாசிரியராக இருந்த பூதனின் மகனார் ‘பூதஞ் சேத்தனார்’ என்பவரால் தான் பாடப்பட்டிருப்பதாக வரலாறு பேசுகிறது.

ஒருவேளை அந்தப் பெயரும் வழக்கிலிருந்தால் மாணவர்களுக்குச் சுட்டிக் காட்டல் அவசியம். 

இரண்டாவது பாடமான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையினது 'நாவலர் எழுந்தார்' என்ற கட்டுரையில் இரண்டு இடங்களில் மிக அவசியமான இரண்டு எழுத்துக்கள் தவறிப் போயிருக்கின்றன. இது மெய்ப்புப் பார்ப்பவரையும் (புரூப்) மீறி நடந்திருப்பதாகக் கருதலாம். 
மூன்றாவது பாடமாக அமைந்துள்ளதில் பாரதியாரின் ஐந்து கவிதைகள். இது இன்னவகை வெண்பா, இது கட்டளைக் கலித்துறை, இது கட்டளைக் கலிப்பா என மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருந்ததால் தான் மாணவர்களுக்கு நல்லறிவு தரும். 

மேலும், இப்பாடத்தின் இறுதியில் ‘முயற்சிக்க வேண்டும்’ என்ற பிழை உள்ளது. ‘முயற்சி’ பெயர்ச்சொல். இதனை வினைச் சொல்லாக்க இயலாது. எனவே ‘முயற்சி செய்ய வேண்டும்’ என்றோ ‘முயற்சி எடுக்க வேண்டும்’ என்றோ அமைதல் அவசியம். 

நான்காம் பாடத்தில் புகழேந்திப் புலவர் பாடல்கள் நான்குள்ளன. ‘புகழேந்திப் புலவர்’ என இருவர் இருந்துள்ளனர். 12ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் ஒருவர் 'நளவெண்பா' நல்கியவர். ஆனால் 15ல் ‘சாருபெளமன் புகழேந்தி’ என ஒருவர் திகழ்ந்து அம்மானை முதலியவை பாடியுள்ளார். ஆகவே பாடத்தில் உள்ள பாடல்களை யார் பாடியது என்பதில் ஒரு மயக்கம்! மயக்கம்! 

மற்றது, ஒரு பாடலின் மூன்றாம் அடியில் ‘கொங்கர்க் கமரா பதியளித்த’ என வருவது பாடபேதம்! கொங்கைக் கமரா பதிலளித்த என்றிருக்க வேண்டும். அதுபோல ‘விழிவேளே என முடிவது ‘விழியாலே’ என்று முடியவேண்டும். 

முற்றும் முழுதான பிழையான பொழிப்புரையும் காணப்படுகிறது. இங்கே விரிவஞ்சி விடுகின்றேன். ஓர் ஆளுமை மிகு பேரெழுத்தாளர், ஆய்வாளர், கவிஞர் எம்மிடையே இருக்கிறார். அவரை அணுகிக் கேளுங்கள். தேநீர் எல்லாம் கொடுத்து விளக்குவார்! அவர் இப்பாட நூலில் முத்துக்குளித்துள்ளார் நன்றாக! 

கடைசியாக, 05ஆம் பாடத்தில் கை வைக்கின்றேன். இது முதுபெரும் படைப்பிலக்கியர் அ.முத்துலிங்கத்தின் ஒரு கதையை வழங்கியுள்ளது. இச்சிறுகதை மாணாக்கர்களுக்கு எந்தப் படிப்பினையைக் கொடுக்கும் என்பதை என் சிறுபுத்தி புரியாது தவிக்கிறது. இதில் பிழைகள் 136 காணப்படுகின்றன. அதுவும்  மனைவியிடம்,  "இது வேறுவிதமாக" என்று ஆரம்பிக்கும் 22ம் பந்தி நீக்கப்பட்டிருக்க வேண்டும். 

பாலியல் கல்வி என்பது வளர்ந்த மாணவர்களுக்கு தேவையே. ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே முதலிரவு அனுபவத்திற்கு அழைத்துச் செல்லல் முறையா? வகுப்பு ஆசிரியர் ஒரு பெண்மணியாக இருப்பின் சங்கடம்! கற்பிக்கக் கஷ்டப்படுவாரே? 

நல்லது. அடுத்தடுத்த பாடங்களிலும் சொல்ல பல உள்ளன. இங்கே இந்தப்பத்தி எழுத்தில் இதற்கு மேல் இடமில்லை. மொத்தப் பாடங்களிலும் காணப்படுகின்ற குறைகளை விலாவாரியாக நான் சற்று முன் குறிப்பிட்ட ஆளுமைமிகு பேரெழுத்தாளர் தன் முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். அந்தப் பிரபல ‘அல்-அஸுமத்’தின்  நட்புவட்டத்தில் ஒருவராகி இன்னுமின்னும் நிறைய அறிந்து கொள்ளுங்கள். 

அதே நேரம் அவரது வெளிச்சத்தின் உதவியாலேயே நானும் கசப்புகளை வழங்கினேன் என்பதையும் ஆழ்ந்த நன்றிப் பெருக்குடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இறுதியாக ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது. இப்படியான ஒரு எசகுபிசகு பாடநூலுக்குப் பொறுப்பான பதிப்பாசிரியர்கள், எழுத்தாளர் குழுவினர் யார், யார் என்பதை அபிமானிகள் அறியவேண்டாமா? இதே பட்டியல், பாதிப்பாசியர் குழு : பேரா. செ.யோகராசா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.அருளானந்தம், ஓய்வு நிலை பிரதிப் பரீட்சை ஆணையாளர் ஜி.போல் அந்தனி, தேசிய கல்வி நிறுவனத் தமிழ்த் துறைப் பணிப்பாளர் வ. விஜயலெட்சுமி, பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர் லெனின் மதிவாணம். 

பதிப்பாசிரியர் (மொழி) : பண்டாரவளை த.ம.ம வித்தியாலய ஆசிரியர் எஸ்.சேதுரத்னம். 

எழுத்தாளர் குழு : கலாநிதி ந. இரவீந்திரன் ஆசிரிய ஆலோசகர் எஸ்.கணபதிப்பிள்ளை, ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எம்.நூறுல் பக்கியா, உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. உதயகுமார், கிண்ணியா தாறுல் உலூம் ம.வி. ஆசிரியர் ஆர். சாதாத் (இவ்விவரங்கள் 2014−15 பதிப்புகளில் உள்ளபடி). 

என் கணிப்பிலும் கருத்திலும் சொல்லக்கூடிய ஒன்று. இந்தப் பதிப்பாசிரியர்களும் எழுத்தாளர் குழுவினரும் நூல் பூர்த்தியாகி அச்சுக்குப் போக நாள் பார்த்திருக்கையில் அனைவருமாக ஒன்றுகூடி  பரிசீலனை செய்து ஒரு கலந்துரையாடல் நடத்தியிருந்தால் இத்தகைய குற்றங்குறைகளை ‘அல்-அஸ_மத்’ முகநூல் மூலமோ அல்லது நான் கசப்பாகவோ வழங்கும் அவசியம் வந்திருக்கவே வந்திருக்காது.
********
 

இனிப்பு

ஒரேயொரு இனிப்பு!! அதுவும் தமிழக மதுரைப் பகுதி ‘ஜிகிரிதண்டா’ சுவையில்! நிகழ்விடம் கூட மதுரைதான். 

முதலில் படத்தையும் விளம்பரத்தையும் பாருங்கள். புரிகிற மாதிரியில் இருக்கிறதா விளம்பரம்? எதற்கும் பிரதி செய்து தருகிறேன். 

பக்கத்தில் உள்ள புதிய முகம் ஓர் இளம் சங்கீத வித்துவான். மதுரை T.M. சௌந்தரராஜன். நல்ல கர்னாடக சங்கீத அனுபவமும், இனிமையான சாரீரமுள்ளவராகவும் இருக்கிறார். பற்பல நாடகத்துறையிலும் அனுபவம் பெற்றுள்ளார். ஸ்ரீஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் கிரமபோன் கம்பெனியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் 29.01.47 இல் அகில இந்திய ரேடியோ திருச்சினாப்பள்ளி நிலையத்தில் பாடுகிறார். ரசிகர்கள் இதைக் கேட்டு ரசிக்கக் கூடியது. 

சினிமாவில் நடிக்கவும் மேற்படி நண்பர் மிக்க ஆர்வத்துடன் இருக்கிறார். இவருக்கு வயது 24. உயரம் 5 அடி 5 அங்குலம். பட முதலாளிகள் இவரைக் கொண்டு சினிமா உலகத்தில் ஓர் புதிய நட்சத்திரம் உற்பத்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

“கச்சேரி மற்றும் விவரங்களுக்கு கீழ்க் கண்ட விலாசத்திற்கு எழுதவும்” 

மதுரை T.M. சௌந்தரராஜன்.
3, South Krishan Kovil Street,
Madurai

எழுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இருபத்து நாலே வயது கொண்ட இளைஞன் ஒருவன் இசையிலும் நடிப்பிலும் இமயத்தின் உச்சிக்குப் போக மேற்கொண்ட ஒரு யுக்தி இதழொன்றில் சிறு விளம்பரம். 

காலம் பதில் சொல்லும் என்று சும்மாவா சொன்னார்கள். அது நன்றாகவே பதில் சொல்லியது.  ஆனால் நட்சத்திரமாக அன்று பிரபல பாடகராக ! ‘டி.எம்.எஸ்’ என்ற மூன்றெழுத்தை நம் நெஞ்சங்களில் பதித்துப் பாடிப்பாடிப் பறந்தே போய்விட்டது. 

இந்த இனிப்பை விசேடமாக அனுப்பியிருந்தார் ஏ.பி.ராமன் சிங்கப்பூர் முதுபெரும் எழுத்தாளர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ஆரம்பகால நண்பர் அவருக்கு என் நன்றிக்கடன். 

Comments