பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனாவை தடுப்பது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனாவை தடுப்பது எப்படி?

இப்படி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம் தடுக்க தனிப்பட்ட ரீதியாக முயல்வதே மார்க்கம் 

சீனாவின் ஹுவான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா இன்று 219 நாடுகளுக்கு பரவி பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்த கொரோனா என்ற கொடிய தொற்று மனித வரலாறு காணாத வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தோற்றுக்களாகி இதுவரை 1298285 பேர் தமது உயிரிழந்துள்ளனர். 53046911 நபர்கள் இத்தொற்றுக்கு இலக்காகி பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இதனால் உலக நாடுகளின் வர்த்தகத்துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உலகளாவிய ரீதியான பொருளாதார மந்தநிலை தோன்றியுள்ளது. கோடிக்கணக்கானோர் தொழில் இழந்துள்ளனர். இலங்கையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை இதைப் படிக்கும்போது ஐம்பதைத் தாண்டியிருக்கும்.  

இந்த தொற்று உலகம் முழுவதும் நெருக்கமாக மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எமது நாட்டை எடுத்துக்கொண்டாலும் கூட அதிக சனத்தொகை மிகுந்த பிரதேசங்களிலேயே அதிகமான தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.   இனி மலையகத்துக்கு வருவோம். மலையகம் மக்கள் செறிந்தும் சமூகமாகவும் வாழும் பிரதேசம். இந்நிலையில் இப்பிரதேசங்களிலிருந்தும் பல தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இது தோட்டங்களுக்கும் மலையக நகரங்களுக்கும் பரவினால் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

ஆகவே இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு பொது மக்கள் மற்றும் சமூக பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்நின்று செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் தலவாக்கலை லிந்துலை நகரசபை இதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை, பாதுகாப்பு துறை மற்று நகர வர்த்தக சங்கத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு செயலணி ஒன்றினை உருவாக்கியிருந்தது மிகவும் பாராட்டத்தக்கது.  

மலையக நகரங்களில் தீபாவளி பண்டிகைக் காலத்தில் ஒன்றுகூடும் நகரமாக ஹட்டன் தலவாக்கலை நகரங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் தலவாக்கலை நகரப்பகுதிக்கு வரும் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக கடந்த (11) தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் லெ. பாரதிதாசன் தலைமையில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக விசேட சொரோனா செயலணி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பது மற்றும் இனங்காண்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அங்கிகளும் அளிக்கப்பட்டுள்ளன. நகரத்திற்கு வரும் மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்களின் உடல் உஷ்னத்தை அளத்தல், கைகளை தொற்றுநீக்கம் முகக்கவசம் அணிய வலிறுத்துதல், சுகாதார பாதுகாப்பு நடை முறைகளை பின்பற்றுவதற்கு வலிறுத்துதல் போன்றவற்றை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நகரசபைத் தலைவர் லெ. பாரதிதாசன் தலைமையில் தலைவாக்கலை பஸ் தரிப்பு நிலையத்தில் ஆரம்பமானது.  

இது குறித்து நகரசபையின் தலைவர் லெ. பாரதிதாசனுடன் பேசினோம். கொழும்பு மற்றும் கொரோனா தொற்று பரவி உள்ள வலய பிரதேசங்களில் இருந்த வரும் மக்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும். காரணம் மலையகத்தில் எமது மக்கள் வாழும் வீடுகள் மிகவும் நெருக்கமாகவே காணப்படுகின்றன. அத்தோடு எமது மக்களும் சமூகமாகவே வாழ்கின்றனர். இந்நிலையில் இந் நோய் பரவினால் அது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் எமது உறவுகளை இழக்க நேரிடும். ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்த தொற்றினை மலையகத்திலிருந்து நீக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பல லட்ச ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார். எனவே இவற்றையெல்லாம் உணர்ந்து எமது மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  

இதுபோன்று செயலணிகள் மலையகத்தின் அனைத்து நகரங்களிலும் உருவாக்கி மக்களை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கொரோனா தொற்று இனங்காணப்பட்ட தோட்டங்களிலும் இனங்காணப்படாத தோட்டங்களிலும் இவ்வாறான செயலணிகளை உருவாக்கி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை. அப்போது தான் நாம் இதிலிருந்து ஓரளவாவது தப்ப முடியும். மலையகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். அது மாத்திரமன்றி நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழே வாழ்பவர்கள். இதனால் பெரும்பாலானவர்கள் மந்தபோசனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மத்தியில் இரத்த சோகை காணப்படுகிறது. ஆகவே இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்பட முடியும். அத்தோடு வீடுகளுக்கிடையில் உள்ள இடைவெளி மிகவும் குறைந்த காணப்படுவதனால் இத்தொற்று பரவினால் மிகவேகமாக பரவுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.   

அத்தோடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் வாழும் நிலையில் குறித்த குடும்பங்களில் வாழும் குடும்ப தலைவர்கள் தனிமைப்படுத்தப்பட்டால் மேலும் இவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதுடன் அது பல்வேறு நெருக்கடிகளையும் தோற்றுவிக்கும். கல்வி சுகாதரம் தொழில் ஆகியன உட்பட அனைத்தும் பாதிக்கும் என்பதனை நாம் அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டும்.   இன்று அரசாங்கம் தனிமைப்படுத்தும் விதிகளையும் மாற்றியுள்ளது அதாவது ஒருவர் தொற்றுக்குள்ளானால் அவர்களின் குடும்பத்தினை சேர்ந்தவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மலையகத்தைப் பொறுத்த வரையில் சாத்தியமாகாத விடயமே. இங்கு எமக்கு போதியளவு வீட்டு வசதிகள் கிடையாது. ஒரே மலசல கூடத்தினை தான் முழுக்குடும்பமும் பயன்படுத்த வேண்டும். அத்தோடு ஒரு சில தோட்டங்களில் ஒரு மலசலகூடத்தை பல குடும்பங்கள் பயன்படுத்துகின்றன.  
ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்த்திருக்காமல் நம்மில் ஒவ்வொருவரும் இத்தொற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.  

ஒவ்வொன்றா ஆயிரமா ஒரேயடியா ஆயிரமா என்றொரு மலையக வழக்கு உண்டு. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியாக மிகக் கவனமாக இருந்தால் சமூகத் தொற்றை தவிரத்துவிட முடியும்.   பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனாவைத்  தடுப்பது எப்படி?

ஹட்டன் - கே. சுந்தரலிங்கம்

Comments