விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ புத்தளம் விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ புத்தளம் விஜயம்

புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கின் உள்ளக விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை மேற்பார்வை செய்யும் முகமாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (10) புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  உள்ளக விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை நேரில் பார்வையிட்டார்.

இதற்கான ஏற்பாட்டினை கிராமிய மற்றும் நீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மேற்கொண்டிருந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  ஜனாதிபதியாக பதவி வகித்த 2012 ம் ஆண்டு காலப்பகுதியில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் வேண்டுகோளை ஏற்று இம்மாவட்ட விளையாட்டு அரங்கினை புத்தளம் நகருக்கு வழங்கியிருந்தார். இந்த மாவட்ட விளையாட்டு அரங்கினை வேறு பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பல்வேறுபட்ட முஸ்தீபுகள்  மேற்கொள்ளப்பட்ட போதிலும் அன்றைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர பிதா கே.ஏ. பாயிஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதை புத்தளம் நகருக்கு வழங்கும்படி அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கு அமைச்சர்களான பிரியங்கர ஜயரத்ன மற்றும் மறைந்த முன்னாள் வடமேல் மாகாண சபை விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக வடிகமங்காவ ஆகியோர் ஆதரவு வழங்கியிருந்தனர்.

அன்று நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட ஏழு மாவட்ட விளையாட்டு அரங்குகளில் ஒன்று புத்தளத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் தினகரன் நிருபர்

Comments