உற்பத்திப் பொருளாதாரத்தின் இலக்கினைகொண்ட 'பட்ஜட்' | தினகரன் வாரமஞ்சரி

உற்பத்திப் பொருளாதாரத்தின் இலக்கினைகொண்ட 'பட்ஜட்'

புதிய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு நேற்று (21) சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.  

நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.  

2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், அதற்கமைய கடந்த ஒக்ேடாபர் 20 ஆம் திகதி அதனைப் பிரதமர் சபையில் முன்வைத்தார்.  

வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 17ஆம் திகதியிலிருந்து நான்கு நாட்களுக்கு இடம்பெற்று நேற்று வாக்ெகடுப்பு நடத்தப்பட்டது. மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  

நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இலங்கையின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகக் கருதப்படுகின்றது. அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை பொதுஜன முன்னணி) அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டமாகும். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நான்காண்டு காலத்தில் பாராளுமன்ற அதிகாரத்தை அதுவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் கைப்பற்றிச் சாதனைபடைத்த ஒரே கட்சியென்றால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிதான்.  
பொதுவாக வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படும் யோசனைகள் சலுகைகளையும் வரி விலக்குகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், இந்த வரவு செலவுத் திட்டமானது சலுகைகளையும் உற்பத்திப் பொருளாதாரத்தையும் இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.  
கடந்த காலத்தில் முடக்கப்பட்டிருந்த நாட்டின் தேசிய அபிவிருத்திப் பணிகளை மீளவும் முடுக்கிவிடுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அனைத்துத் தொழில் துறைகளையும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளன.  

அதனைவிடவும், கடந்த காலத்தில் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் முன்வைத்திராத பல புதிய செயற்றிட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.  
இதில் முக்கியமானதாக அரச ஊழியர்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் அல்லது அவர்கள் உபரி வருமானத்தைத் தேடிக்ெகாள்ளும் வகையில், தொழில் நேரம் தவிர்ந்த நேரங்களில் வேறு தொழில்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவிருக்கிறது.

அத்தோடு இரண்டு வருடங்கள் கொடுப்பனவுடன் விடுமுறை எடுத்துக்ெகாண்டு வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளுக்குச் செல்லவும் வழிவகுக்கப்படவுள்ளது. மேலும், அரச, தனியார் துறையில் பணியாற்றுவோர் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரித்து ஆண்பெண் சமத்துவத்தைப் பேணி, அவர்களின் விளைதிறன் மிக்க சேவைகளைப் பெற்றுக்ெகாள்ள வரவு செலவுத்திட்டத்தில் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.  

அதேபோன்று, விவசாயம், மீன்பிடி, தேயிலை உற்பத்தி உள்ளிட்ட தொழிற்துறையில் ஈடுபடுபவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கும் பிரதமர் யோசனைகளை முன்மொழிந்துள்ளார்.  

விசேடமாக, தொழில் துறையில் ஈடுபடும் இளைஞர், யுவதிகளுக்குக் காணிகளைப் பெற்றுக்ெகாடுத்து மூலதனத்தையும் வழங்குவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் தனி மனித வருமானத்தையும் நாட்டின் தேசிய வருமானத்தையும் மேம்படுத்திக்ெகாள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.  

2021 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவினம் 2.678 பில்லியன் ரூபாயாகும். மேலும், இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே 2,900 பில்லியன் ரூபாய் வரையறைக்கு உட்பட்டு கடன்களைப் பெறவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இவை அனைத்து முன்மொழிவுகளைவிடவும், வரவு செலவுத்திட்டத்தின் வரலாற்றில் முதன் முறையாகத் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் தொடர்பில் யோசனை முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் யோசனை முன்வைத்ததன் மூலம் நாட்டிலுள்ள அனைத்துத் துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு முன்பு இவ்வாறான ஒரு வரசு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவில்லை.  
எனினும், சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதேச ரீதியான கண்ணோட்டத்தில் வரவு செலவுத்திட்டத்தை நோக்குகிறார்கள் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள். விமர்சனங்களை முன்வைக்கும்போது அதிலுள்ள சாதக நிலவரங்களையும் எடுத்துச்சொல்வதுதான் ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்கும். சுருங்கச் சொல்லின் இந்த வரவு செலவுத் திட்டமானது உற்பத்திப் பொருளாதாரத்தின் இலக்கினைக் கொண்டதென்றால் மிகையில்லை!   

Comments