கம்பனிகள் நினைத்தால் ஆயிரம் ரூபாவை வழங்க முடியும்! | தினகரன் வாரமஞ்சரி

கம்பனிகள் நினைத்தால் ஆயிரம் ரூபாவை வழங்க முடியும்!

நாட்டின் 75 ஆவது வரவு செலவு திட்ட உரையில் பிரதமர்,  தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு நன்றியையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்.  

நாங்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி பல்வேறு போராட்டங்களை செய்துள்ளோம், ஆயினும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. தொழிறசங்கங்களும் எமக்கு ஆயிரம் ரூபா பெற்றுத்தருவதாக பல தடைவைகள் வாக்குறுதியளித்தன. ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. 

எங்களுக்கு கிடைக்கும் வருமானம் சாப்பிடுவதற்கு கூட போதுமானதல்ல. இதில் நாங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். நல்லது கெட்டது அத்தனையும் இந்த சம்பளத்தைக் கொண்டே செய்ய வேண்டும். இந்நிலையில் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறோம் என்பது தொழிலாளர் மனநிலையாக உள்ளது.  

அதேநேரம் ஆயிரம் சம்பளம் என்று சொல்லிவிட்டு பறிக்க முடியாத அளவுக்கு உச்சபட்ச தேயிலைக் கொழுந்து கிலோவை நிர்ணயித்துவிட்டும் வேலை நாட்களை குறைத்துவிட்டும் ஆயிரம் ரூபாவை எட்டாக் கனியாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தையும் சிலர் வெளியிடுகிறார்கள்.  

கடந்த தேர்தல் காலங்களில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதற்கு முன்னரும் ஆயிரம் ரூபா உயர்வு பற்றி தெரிவித்தனர். ஆனால் எவ்வித சம்பள உயர்வும் கிடைக்கவில்லை. கடந்த தீபாவளிக்கு முன் சம்பளம் தருவதாக தெரிவித்தார்கள். ஆனால் இந்த தீபாவளியும் வந்துவிட்டது இப்போதும் ஆயிரம் ரூபா சம்பளம்தான் பேசு பொருளாக உள்ளது.  

அரசாங்கம் ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாக அறிவித்தவுடன் முதலாளிமார் சம்மேளனம் கூடி ஊடக சந்திப்பினை நடத்தியது. ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கையை கைவிட வேண்டும் எனவும் தாங்கள் ஆயிரம் ரூபாவை விட அதிகமான தொகையைக் கூட வழங்கத் தயார்தான். ஆனால் நாங்கள் சொல்லும் பொறிமுறைக்கு தொழிற்சங்கங்கள் சம்மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

கூட்டு ஒப்பந்தம் ஜனவரி மாதம் காலாவதியாகும் நிலையில் இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது தொழிலாளர் கவலை. இவ்வாறான ஒரு நிலையில் ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்று இவர்கள் கேட்கிறார்கள்.  

இன்று எமது நாட்டில் விற்கப்படும் சாதாரண நல்ல தேயிலைத் தூள் கிலோ ஒன்றின் விலை 1000 ரூபாவாக காணப்படுகின்றது. ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை கொழுந்தினை கொண்டு நான்கு கிலோ தேயிலை உற்பத்தி செய்ய முடியும். ஆகவே எமது நாட்டிலேயே ஒரு தொழிலாளியின் உழைப்பின் பெறுமதி நான்காயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.  

இதே நேரம் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ தேயிலையின் விலை சராசரி 697.00 ரூபாவிற்கு விற்கப்படுவதாகத் தெரிகிறது. அப்படியாயின் ஒரு தொழிலாளியின் ஒருநாள் உழைப்பு சுமார் 2800 ஆகும். ஆகவே பெரும் லாபத்தினை மாத்திரம் எதிர்பார்க்கும் கம்பனிகள் இந்த ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுத்தர முன்வருமா என்பது கேள்விக்குறியே.  

அதேநேரம் இன்று பல தோட்டங்கள் காடுகளாக காட்சியளிக்கின்றன. பெரும்பாலான தோட்டங்களில் தேயிலை மலைகள் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. சிறுத்தை, குளவிகள், வேறு வன விலங்களின் அச்சறுத்தலும் உருவாகியுள்ளன. தேயிலை பராமரிப்பு குறைந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகங்கள் கோரும் கிலோ உச்ச வரம்பை நாள்தோறும் பறிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே!  

மறுபக்கமாக பார்ப்போமானால், ஆரம்ப காலத்தில் தோட்ட நிர்வாகங்களினால் முன்னெடுக்கப்பட்ட நலன்புரி விடயங்களை இன்று அரசாங்கமே முழுமையாகச் செய்து வருகிறது. குறிப்பாக வீதி, அபிவிருத்தி மின்சாரம், குடிநீர் வசதி, மலசல கூட வசதி, பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், வீடுகளின் கூரைகள்  சீர்திருத்தம், புதிய வீடுகள், சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  
ஆரம்ப காலத்தில் இவையாவும் கம்பனிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டன. சுண்ணாம்பு அடிப்பது முதல், சகல அடிப்படை வசதிகளையும் தோட்டங்களே செய்து கொடுத்தன. அப்படிப் பார்க்கும்போது தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவது அவ்வளவு சிரமான காரியமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.  

இன்று தனியார் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தோட்டத்தொழிலாளர் ஒருவருக்கு பகல் உணவு மற்றும் தேநீர் ஆகியன அடங்கலாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படியென்றால் அவர்கள் நட்டப்பட்டுதான் சம்பளம் வழங்குகிறார்களா? பெருந்தோட்டங்கள் மாத்திரம் எவ்வாறு வருடா வருடம் நட்டத்தில் இயங்கும் என்பது சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்றே.  

ஆகவே தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் இணைந்து சரியான தரவுகளை பெற்று தொழிலாளர் தரப்புக்கும் கம்பனிகளுக்கும் பாதிப்பின்றி சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். தோட்டங்களில் மகிழ்ச்சியாக வேலை செய்யும் சூழல் ஏற்படுத்தப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்பதை கம்பனிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.  

இதேநேரம் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க விடமாட்டார் என்பது போல் பட்டல்கலை தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகஸ்தர் ஒருவர் நடந்துகொண்டதை இங்கே குறிப்பிட வேண்டும். தொழிலாளர் தரப்பின் கருத்து கேட்பது என்றாலும் கூட நிர்வாகத்தின்  அனுமதியை பெற்றாக வேண்டும் என்பதுபோல் நடந்து கொண்டார் ஊடகங்கள் ஊடகத்தை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டுவதாகவும் இவர் தெரிவித்தார். ஊடகப் பணிகளுக்கு இவர் இடையூறு விளைவித்தார்.  

எனவே, இவரை போன்றவர்களுக்கு தோட்ட நிர்வாகங்களும் உரிய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தோட்ட நிர்வாகங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படவே செய்யும்.  

ஹற்றன்
கே.சுந்தரலிங்கம்

Comments