அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள 2021 இற்கான வரவு செலவுத்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள 2021 இற்கான வரவு செலவுத்திட்டம்

2021ம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டத்தை பிரதமர்  மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில் அரசாங்கத்துக்கு எந்தவித சிரமமும் இருக்கப் போவதில்லை. 

அரசியல் யாப்பில் 20வது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டைப் பெற்றவர்களால் சாதாரண பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற வைப்பது சர்வசாதாரணமாக          விடயமாகும். 

இந்த வரவு செலவுத்திட்டம் பற்றி அரசாங்கத் தரப்பினர் நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும்  உற்பத்தி பெருகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும், வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உள்நாட்டுக் கடன்களால் அரசாங்கம் எதிர்நோக்கும் கடன் சுமை படிப்படியாகக் குறையும், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் சுமை நான்கு ஆண்டுகளுக்குள் குறைந்து விடும், இந்த நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாகிவிடும் என்றெல்லாம் ஆட்சியிலுள்ளவர்கள் வழமையாக சொல்வது போல தொடராக சொல்கின்றனர். 

நீளமான அழகான பொருளாதார இலக்குகள், மூல உபாயங்கள், தந்திரோபாயங்கள் கொண்ட முகவுரைகளுடன் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது இதுவல்ல முதற் தடைவை. சுதந்திரம் பெற்ற இலங்கையில் இது ஒரு மரபான விடயமாகவே உள்ளது. 
ஏனைய பெருந்தொகையான குறைவிருத்தி நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தேர்தல் கொள்கைப் பிரகடன அறிக்கைகள் போலவே இங்கு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளும் அமைகின்றன. 

ஒரு வரவு செலவுத் திட்டத்தின் உண்மை பொய்: சரி பிழை: நடைமுறைச் சாத்தியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு நாட்டின் பொருளாதார நிலை அதாவது பொருளாதார மற்றும் மனித வளங்களின் நிலைமை,  அடிப்படை உற்பத்தித்தொழிற் துறைகளில் நாடு கொண்டிருக்கக் கூடிய பலங்கள் பலயீனங்கள், அரசின் வருமான நிலைமை என்பவற்றோடு வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உள்நாட்டுக் கடன்கள் தொடர்பான நிதிச் சுமைகள், வேலையில்லா இளைஞர்கள், பணவீக்கம் ஆகியவற்றுடன் மேலும் நாட்டின் அரசியல் ஸ்திர நிலை, வெளிநாடுகளுடனான ராஜரீக உறவுகள் தொடர்பான விடயங்கள் போன்றவும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். 

பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான ஆட்சியை அமைத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களது முயற்சிகளுக்குச் சாதகமாக நாட்டின் முப்படைகளும்,  சட்டம் ஒழுங்கு நிறுவனங்களும் உள்ளன. நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை எப்படி தங்களது இலக்குகளுக்கு வகையாக வளைத்து இயக்குவது என்பதில் தற்போதைய அரசு அநுபவமும் ஆற்றலும் கொண்டது. 

அரசின் வரவுகள் செலவுகள் தொடர்பான நிதி பற்றிய விடயங்களை விட இப்பந்தியில் முற்கூறப்பட்டுள்ளவற்றை நம்பித்தான் இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளார்கள் என்றால் மிகையாது. 

அத்துடன் இலங்கையுடன் பொருளாதார உறவு கொண்டுள்ள நாடுகளைக் கையாள்வது பற்றிய தங்களது திறமைகள் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதுவம் இங்கு தெரிகின்றது. 

அதீத வருமான எதிர்பார்க்கை ஆனால் அவர்கள் திட்டமிட்டுள்ளபடி அரச வருமானத்தை 2021ல் 200000 ரூபாவாக உயர்த்த நினைப்பது மிக அதீதமான விடயமே. 

கொரோனா இல்லாத 2019ம் ஆண்டைப்போல 2021ம் ஆண்டைக் கற்பனை பண்ணுவதுவும் அதீதமான ஒன்றேயாகும். 
இவர்களது வெளிநாட்டுக் கொள்கையானது அரசாங்கம் எதிர்பார்க்கின்ற அளவுக்கு வெளிநாட்டு கடன்கள் மற்றும் கொடைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதா என்பதுவும் கேள்வியாகும்.

ஏற்றுமதிகளைப் பொறுத்த வரையில் அரசாங்கம் மேலைத் தேச நாடுகளையே நம்பியிருக்கின்றது. இலங்கையின் ஏற்றுமதிகளை சீனாவால் உத்தரவாதம் செய்ய முடியாது. அரசாங்கம் இவ்வளவு பெரிய கடன் தேவைக்கு சீனாவைப் பெருமளவில் நம்பியிருக்க முடியாது என்பது வெளிப்படையான ஒன்றாகும்.   இந்தியாவுக்கு இலங்கை ஒரு மூலோபாய மையமெனலாம். 

சீனா இலங்கையோடு சிந்தாந்த ரீதியான உறவு கொண்டதல்ல. மாறாக தனது பொருளாதார மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான தந்திரேபாயங்களுக்கான உறவுகளையே கொண்டிருக்கின்றது. 

அரசாங்கம் எல்லா நாடுகளையும் தான் சமனாக நடத்துவது போல் காட்ட முற்படுகிறது. ஆனால் பெருமளவு கடன்களுக்கு இந்தியாவையும் மேலைத் தேய நாடுகளையும் அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அமைப்பு ஆகியவற்றையே இலங்கை நம்பியிருக்கின்றது. 

இந்த வகையில் அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்து எதிர்பார்க்கும் வரவு தேவையான அளவுக்கு கிடைப்பதென்பது மிகவும் சந்தேகத்தற்குரிய ஒன்றே. எவ்வாறாயினும் இந்த ஆண்டு சமாளித்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில்; கடன்கள் தொடர்பாக பெரும் நெருக்கடிகளை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும். 

நவதாராளாதவாத ஆழத்துள் இறக்குமதிப் பிரதியீட்டுப் பொருளாதாரம்ஏற்றுமதியால் கிடைக்கும் வரவைவிட இறக்குமதியால் வெளிச் செல்லும் அந்நியச் செலாவணியின் அளவு சுமார் இரண்டு மடங்குகளாகும். அதற்கான அந்நிய செலாவணி கையிருப்போ வரவோ மிகக் குறைவாகவே உள்ளது. 

அடுத்த ஆண்டே கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் ஏற்றுமதி இறக்குமதி இடைவெளியைச் சரிப்படுத்துவதற்கான அளவுக்கு அந்நியச் செலாவணி வரவு ஏற்பட மேலும் பல ஆண்டுகளாகும்.  ஆனாலும் இலங்கை அரசின் படுகடன் தொடர்பான சுமைகள் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலைமையைத் தொடர்ந்து தக்க வைத்திருக்கப் போவதாகவே உள்ளது. 

1970 – 75ம் ஆண்டு காலப்பகுதியில் நிதி அமைச்சர் என் எம் பெரேரா நடைமுறைப்படுத்திய இறக்குமதி பிரதியீட்டுப் பொருளாதாரக் கொள்கை வேறொர் உலக அரசியல் பொருளாதாரச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

அவரது கொள்கையில் 1976ஆம் ஆண்டு ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான வர்த்தக இடைவெளி சாதகமான நிலையை நோக்கி நகரத் தொடங்கியது.

ஆனால் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை மிகப் பெருமளவில் இழந்து போனது.  1970ல் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையைக் பெற்று ஆட்சி அமைத்த சிறி லங்கா சுதந்திரக் கட்சி அணியினர் 1977ம் ஆண்டு தேர்தலில் நாடாளுமன்றத்தில் வெறுமனே 8 ஆசனங்களை மட்டுமே பெற்றனர். 

இந்த அரசாங்கம் தற்போது கடைப்பிடிக்கும் இறக்குமதி பிரதியீட்டுக் கொள்கை புதினமானது. உலக மயமான முதலாளித்தவத்தின் நவதாராளவாதப் பிடிக்குள் ஆழமாக அமிழ்ந்து கிடந்து கொண்டே வரையறுக்கப்பட்ட இறக்குமதிப் பிரதியீட்டுக் கொள்கையை கடைப்பிடிக்க முற்படுகிறது. 

சீனா மிக வலுவான அரசியல் – பொருளாதார அடித்தளங்களின் மேலேதான் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை தன் நாட்டுக்கு உள்ளே அனுமதித்தது. இந்தியா தேரதல் ஜனநாயக அரசியற் கட்டமைப்பைக் கொண்ட போதிலும் நேரு – இந்திரா ஆட்சிக் காலத்தில் மிக வலுவான பொருளாதார அடித்தளங்களைக் கட்டியெழுப்பிவிட்டது. அதன் மீதுதான் மன்மோகன் சிங்கின் நவதாராளவாதம் காலடிகளைப் பதித்தது. 

இருப்பினும் இந்தியாவின் கிராமிய- விவசாயப் பொருளாதார கட்டமைப்பிலுள்ள பலயீனங்கள் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அடிக்கடி நிரம்பலுக்கும் கேள்விக்கும் இடையில் அதிகரிக்கும் வெளிகளாலும், பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையிலான எதிர் மோதல்களாலும் போத்தல் கழுத்து பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடப்படுகின்றது. 

இலங்கை சுய வலுவான பொருளாதார அடித்தளங்கள் அற்ற ஒரு நாடு. உணவுக்கும் உடைகளுக்கும் பெருந்தொகையான அந்நிய செலாவணியை அள்ளி இறைக்கின்ற நாடு. 

வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுயமான சமூக பொருளதார நம்பிக்கைகளை வழங்கமுடியா நிலையிலுள்ள நாடு. 

85 லட்சம் உழைக்கும் மக்கள் தொகை கொண்ட நாட்டிலிருந்து 15 லட்சம் பேர் மத்திய கிழக்கு மற்றும் கொரியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளை நம்பிக்கையிருக்கின்றனர். 

15 லட்சம் பேர் பொருள் உற்பத்தி எதுவும் சாராத அரசாங்க உத்தியோகத்தில் உள்ளனர். 

இன்னுமொரு சுமார் 8 லட்சம் உழைப்பாளர்கள் பணக்கார வெளிநாடுகளுக்குப் போய் நிரந்தரமாக குடியேறி விட்டனர்.  20 லட்சம் உழைப்பாளர்கள் விவசாயத் துறையிலிருந்து தேசியப் பொருளாதாரத்துக்கு 8 சதவீதமான பங்களிப்பை மட்டுமே செலுத்துகின்றனர்.   5 சதவீதமான உழைப்பாளர்கள் மட்டுமே முறையான தொழிற்சாலைகள் கொண்ட பொருள் உற்பத்தித் தொழில்களின் ஈடுபடுகின்றனர். 

10 சதவீதமான உழைப்பாளர்கள் ஏதோ வெவ்வேறு வகைகளில் மிகச் சிறிய மற்றும் குடிசைக் கைத்தொழில்களில் காலத்தை ஓட்டுகின்றனர். 
இவ்கையான பொருளாதார தளங்களைக் கொண்ட இலங்கையை உலக முதலாளித்துவத்தின் பேராளுமைக்குள் இருந்து கொண்டு சுய சார்பான தனினிறைவுப் பொருளாதாரமாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் முனைகின்றது.

வரவு செலவுத் திட்டத்தின் உண்மை விபரங்கள் 

அரசாங்கம் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கூலிகளாக 90500 கோடியும்  பொருட்கள் மற்றும் சேவைகளை அரசாங்கம் பெறுவதற்காக 18800 கோடியும் மானியங்களாகவும் மற்றும் மாற்றுக் கெடுப்பனவு வகையாகவும் 58100 கோடியும் அரசாங்கம் மற்றும் உள்நாட்டுக் கடன்களுக்கான வட்டியாக 86000 கோடியும்  அபிவிருத்தி தொடர்பாகவும் மற்றும் அரச கட்டமைப்பின் விருத்திக்காகவுமான மூலதனச் செலவாக 107000 கோடியும் செலவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டள்ளது. 

ஆக இவற்றிற்கான மொத்தத் தொகை 354400 கோடி ரூபாயாகும். இதைவிட அரசாங்கம் வெளிநாடுகள் உள்நாட்டு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதியை இந்த ஆண்டு கட்டாயமாக திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

அதனையும் உள்ளடக்கிப் பார்க்கையில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் உண்மையில் 480800 கோடி ரூபாக்களென வரவு செலவுத் திட்டத்தோடுள்ள இணைப்பு இரண்டு குறிக்கின்றது. 

அந்த இணைப்பின்படி அரசாங்கம் தனது சொந்த நிகர வருமானமாக 199400 கோடி ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. 
மற்றொரு புறம்.அரசு எற்கனவே பெற்ற கடன்களில் இவ்வாண்டு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய தொகையானது 125700 கோடியாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கம் திட்டமிட்டபடி கடன் தொகைகளைப் பெற்றாலும் இந்த வரவு செலவத்திட்டம் மூலம் அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையை 2021ஆம் ஆண்டில் 174000 கோடி ரூபாவால் அதிகரிக்க உள்ளமை உறுதியாகிறது. 
 
அ. வரதராஜா பெருமாள்  

Comments