யானை − மனிதன் முரண்பாடு; நியாயமாகத் தீர்க்கப்படுவதன் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

யானை − மனிதன் முரண்பாடு; நியாயமாகத் தீர்க்கப்படுவதன் அவசியம்

இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள நாடாகும். இது உலகில் உயிரினப் பல்வகைமைக்கு முக்கியத்துவம் பெற்றுவிளங்கும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் முதல் கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிர்கள் வரையிலான எல்லா வகை உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன. 

ஆன போதிலும் இந்நாட்டில் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைக்கும் மனிதனுக்கும் இடையில் மோதல் அல்லது முரண்பாடு அண்மைக்காலமாக ஏற்பட்டிருகின்றது. இது கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாகப் பெரிதும் அதிகரித்திருக்கின்றது. இதற்கு நாளாந்தம் வெளியாகும் தகவல்களே நல்ல சான்றுகளாக உள்ளன.

அண்மையில் கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரும் யானையின் தாக்குதலால் கொல்லப்பட்டார். அத்தோடு விவசாய மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் மாத்திரமல்லாமல் வீடுகளும் கூட காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் வடக்கு, கிழக்கு, வடமேல், வடமத்தி மற்றும் தெற்கு மாகாணங்களின் பல பிரதேசங்களில் அவ்வப்போது பதிவாகின்றன. 

இவை இவ்வாறிருக்க, மனிதன் மேற்கொள்ளும்  துப்பாக்கி பிரயோகம்,    யானையின் உணவில் நஞ்சூட்டல், யானை வெடி வைத்தல் போன்றவாறான நடவடிக்கைகளின் ஊடாக யானைகளும் கொல்லப்படவே செய்கின்றன. இவை இந்நாட்டில் யானை, மனிதன் முரண்பாடு அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டக்கூடியனவாக உள்ளன. அத்தோடு ரயில்களில் மோதுண்டும் யானைகள் உயிரிழக்கவே செய்கின்றன.
இந்த நிலைமைக்கான காரணம் என்ன? யானைகளின் வாழிடம் குறைவடைந்து வருகின்றனவா? அல்லது யானைகளின் உணவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளனவா? அல்லது யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனவா? என்பன தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அவற்றுக்கு ஏற்ப தீர்மானங்களை மேற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். 

ஏனெனில் யானை, மனிதன் முரண்பாடு காரணமாக வருடமொன்றுக்கு சுமார் 300 காட்டு யானைகள் இந்நாட்டில் கொல்லப்படுகின்றன. அந்த வகையில் 2018 இல் 311 காட்டு யானைகளும் 2019 இல் 361 காட்டு யானைகளும் கொல்லப்பட்டுள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் மனிதர்களிலும் சுமார் 80 -அல்லது 100 பேரளவில் யானைத் தாக்குதலால் வருடாந்தம் உயிரிழக்கின்றனர். அத்தோடு கோடிக்கணக்கான சொத்துக்களும் யானைகளால் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்நாட்டில் யானை மனிதன் முரண்பாடு நிலவாத பிரதேசங்கள் விரல்விட்டு எண்ணி விடக்கூடியனவாக உள்ளன. அவற்றில் கொழும்பு, களுத்துறை கம்பஹா ஆகிய மாவட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். ஏனைய மாவட்டங்களில் கூடிக் குறைந்த மட்டத்தில் இப்பிரச்சி​னை நீடித்து வருகின்றது. குறிப்பாக வனாந்தரங்கள் சார்ந்த மாவட்டங்களில் இப்பிரச்சினை அதிகம் நிலவுகின்றன. இவ்வாறு ஒரு நெருக்கடி நிலையாக யானை மனிதன் முரண்பாடு இந்நாட்டில் தீவிரமடைந்து வருகின்றன. 

ஆனாலும் 'மனிதனை திட்டமிட்டு, இலக்கு வைத்து தாக்கும் ஒரு உயிரினமல்ல யானை. அதனை நேரில் சந்தித்தால் அல்லது அதற்கு அருகில் சென்றால் அவை பயத்தின் காரணமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே மனிதனோடு முரண்படும்' என்பது தான் யானைகள் தொடர்பான வனவிலங்கு வாழிட ஆராய்ச்சியாளரும் பங்களூர் பல்கலைக்கழகப் பேராசிரியருமான கலாநிதி தமிழ் இலக்கியாவின் கருத்தாகும்..  யானையானது நிலத்தில் வாழும் மிகப்பெரிய காட்டு உயிரினமாகும். இது முற்றிலும் தாவரங்களை உணவாக உட்கொண்டு வாழும் உயிரி. இது நாளொன்றுக்கு 150 -− 200 கிலோ கிராம் உணவை உட்கொள்வதோடு 150 லீற்றர் நீரையும் பருகும். ஆனால் ஒரே இடத்தில் வாழும் உயிரினமல்ல இது. நாளொன்றுக்கு 25 - 30 கிலோ மீற்றர்கள் யானைகள் பயணம் செய்யும். 

இவ்வாறான அடிப்படைப் பண்புகளைக் கொண்டுள்ள இந்த யானைகள் தொடர்பில் இந்நாட்டில் 2011 இல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அக்கணக்கெடுப்பின்படி நாட்டில் 5879 யானைகள் காணப்பட்டன. அவை மகாவலி வனஜீவராசிகள் வலயத்தில் 1751, கிழக்கு வனஜீவராசிகள் வலயத்தில் 1573, வடமேல் வனஜீவராசிகள் வலயத்தில் 1189, தெற்கு வனஜீவராசிகள் வலயத்தில் 1086, வடக்கு வனஜீவராசிகள் வலயத்தில் 233, மத்திய வனஜீவராசிகள் வலயத்தில் 47 என்றபடி காணப்பட்டதாக இலங்கை வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி லக்‌ஷ்மன் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் இது சுமார் 09 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு என்பதால் தற்போது யானைகளின் எண்ணிக்கை 7500 வரை அதிகரித்திருக்க முடியும் என நம்பப்படுகின்றது.

இந்த நிலையில் காடுகளில் இருக்க வேண்டிய காட்டு யானைகள் மனித வாழிடங்களுக்கு ஏன் வருகின்றன? மனிதனுடன் ஏன் முரண்படுகின்றன? என்ற கேள்வி பலர் மத்தியில் எழலாம். அது நியாயமான வினாவே. 

யானைகள் பல காரணங்களின் நிமித்தம் காடுகளை விட்டு வௌியேவரும். அவற்றில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுவரும் தாக்கங்களும் பாதிப்புக்களும் குறிப்பிடத்தக்கவை. அத்தோடு யானைகளின்  பாரம்பரிய பயணப்பாதைகளிலும் வாழிடங்களிலும் மனிதன் குடியிருப்புகளையும் நகராக்கல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதும் காடழிப்பும் அவை காட்டை விட்டு வெளியே வர வழிவகுக்கும் ஏனைய காரணங்களாக உள்ளன. 

என்றாலும் காலநிலை மாற்றத்தின் விளைவாக யானைகள் வாழும் காடுகளும் காடுகள் சார்ந்த பிரதேசங்களும் பலவிதமான தாக்கங்களுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக காலநிலை மாற்றத்தினால் மழை கிடைக்கப்பெறும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு மழைவீழ்ச்சியும் குறைவடைந்துள்ளது. இதனால் மழைநீரையே நம்பியுள்ள காடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதாவது யானைகள் உணவாக உட்கொள்ளும் காட்டுத் தாவரங்களும், செடிகளும் வளர்வதும் காடுகளில் குறைவடைந்து வருகின்ற அதேநேரம் அவை உணவாகக் கொள்ளாத தாவரங்களதும் செடிகளதும் வளர்ச்சியும் அதிகரித்து வருகின்றன. அத்தோடு காடுகளில் காணப்படும் நீர்நிலைகளில் தண்ணீர் குறைவடையவும் செய்கின்றது. இவற்றின் விளைவாகவே யானைகள் காட்டை விட்டு உணவு, நீர் தேடி வௌியே வருகின்றன' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

இவை காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் தாக்கங்களாக விளங்குகின்ற போதிலும் யானைகள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில் மனிதன் குடியிருப்புகளை அமைத்திருப்பதும் அவை உணவாகக் கொள்ளக்கூடிய நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் தாவரங்களையும் செய்கை பண்ணுவதும் அவை காட்டை விட்டு வௌியே வர வழிவகுக்கின்றன. குறிப்பாக காட்டில் யானைகளின் உணவு குறைவடைவதால் அவை வௌியே காணப்படும் உணவில் கவரப்பட்டுத்தான் வெளியே வருகின்றன. 

அதன் காரணத்தினால் யானைகள் விரும்பி உணவாகக் கொள்ளக்கூடிய தாவரங்களையும், செடிகளையும் காடுகளில் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதோடு காடுகளில் அவற்றுக்கு ஒழுங்குமுறையான நீர் வசதி செய்துகொடுக்கும் வகையில் குளங்களையும் நீர்தடாகங்களையும் அவ்வப்போது புனரமைக்கவும் வேண்டும். அத்தோடு காடுகளுக்கு அருகில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது யானைகள் விரும்பி உண்ணாத பயிர்களை செய்கை பண்ண வேண்டும். இந்நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்பது அவசியம். இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக யானைகள் காடுகளை விட்டு வௌியே வருவதைப் பெரிதும் குறைத்துக்கொள்ள முடியும். இவற்றுக்கு மேலதிகமாக யானை தடுப்பு மின் வேலி, தேனீகூடு அமைப்பதன் மூலமான தடுப்பு நடவடிக்கை என்பனவும் கூட யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவும். 

ஆனால் யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு உயிரினமாகும். அவை மனிதனுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையவே நன்மை பயக்ககூடியனவாக உள்ளன. குறிப்பாக காடுகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் அவை பாரிய பங்களிப்பை நல்குகின்றன.

அதாவது ஒரு யானை மாதமொன்றுக்கு சுமார் மூவாயிரம் தாவரங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும், 60 -− 70 வருடங்கள் வாழும் யானையொன்று 01 இலட்சத்து 65 ஆயிரம் மரங்கள் வளரப் பங்களிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்று சூழலியல் செயற்பாட்டாளர் ஜெகதீஷ் ரவி 'காக்கைக்கூடு சுற்றுச்சூழல் அமைப்பினர்' அண்மையில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்து கொண்டு குறிப்பிட்டார்.  உண்மையில் காடு வளர்ப்புக்கும், காடுகளில் பாதைகளை அமைப்பதற்கும், காடுகளை சுத்தமாக வைத்திருப்பதற்கும் மனிதனை விடவும் யானைகள் தான் அதிகம் பங்களிக்கின்றன. குறிப்பாக அவை உணவாகக் கொள்ளும் வித்துக்களைக் கொண்ட உணவுகளிலிருந்து  வெளியேற்றப்படும் எச்சங்களில் காணப்படும் வித்துக்கள் நன்கு செழித்து வளரக்கூடியனவாகும். அத்தோடு காட்டிலுள்ள மான், மரை போன்ற தாவர உண்ணி உயிரினங்களுக்கு மாத்திரமல்லாமல் மாமிச உண்ணி விலங்குகளுக்கும் கூட உணவு அளிக்கும் ஒரு உயிரியாகவும் திகழுகின்றது யானை.   ஆகவே யானை மனிதன் முரண்பாட்டை சரியான முறையில் அணுகி அதனை உரிய முறையில் தீர்த்து வைக்க வேண்டும். அது யானைகளினதும் மனிதனினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மர்லின் மரிக்கார்  

Comments