மாவீரர் தின நினைவேந்தல் விவகாரம் தொடர்பாக சுமந்திரனும் சரத்வீரசேகரவும் சபையில் கடும் வாக்குவாதம் | தினகரன் வாரமஞ்சரி

மாவீரர் தின நினைவேந்தல் விவகாரம் தொடர்பாக சுமந்திரனும் சரத்வீரசேகரவும் சபையில் கடும் வாக்குவாதம்

JVPக்கு ஒரு நியாயம் தமிழருக்கு வேறொரு நீதியா ?
ஜே.வி.பியையும் புலிகளையும் ஒன்றாக ஒப்பிட முடியாது ?

மாவீரர் தின நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கும் இடையில் பாராளுமன்றத்தில் நேற்று  கடுமையான வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது. 

ஜே.வி.பி தலைவரை நினைவு கூர முடியுமென்றால் தமிழ் மக்களுக்கு ஏன் தமது உறவுகளை நினைவு கூர முடியாது என சுமந்திரன் எம்.பி தெரிவித்த அதே வேளை ஜே.வி.பியையும் புலிகளையும் ஒன்றாக ஒப்பிட முடியாது எனவும் சுமந்திரன் புலி தலைவர் ஒருவரை நினைவு கூரச் சென்றதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்த எம்.ஏ.சுமந்திரன் எம்.பி,....

ஆகஸ்ட் மாதத்தில் அரசியல் பலிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு விசாரணைக்கு வருமாறு கோரி எனக்கு பல அழைப்பாணைகள் விடுக்கப்பட்டிருந்தன.அவற்றில் என்னை பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்ததோடு சிங்களத்தில் தான் அழைப்பாணை விடுக்கப்பட்டன. பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களிலும் அழைப்பாணைகள் வந்தன.முன்னதாக நான் இரு தடவைகள்
ஆணைக்குவில் ஆஜராகியுள்ளேன். பாராளுமன்ற அமர்வு நடைபெறும் நாட்களில் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது.ஆஜராகாத காரணத்தை எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளேன் என்றார்.சிறப்புரிமை குழு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தேவையான நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த அமைச்சர் சரத் வீரசேகர,

பிரபாகரனின் சிறுபராய நண்பரான புலிகள் இயக்க தலைவர்களின் ஒருவரான பண்டிதரை நினைவு கூர சுமந்திரன் யாழ்ப்பாணம் சென்றார்.பயங்கரவாதியை நினைவு கூர சென்றவர் ஆணைக்குழுவிற்கு செல்ல முடியாதது குறித்து வினவ வேண்டும் என்றார்.
எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மீண்டும் கருத்துத் தெரிவித்ததோடு,

சின்னதுறை மகேஸ்வரி என்ற பெண்ணுக்காக நான் யாழ்.மேல் நீதிமன்றில் ஆஜராகியிருந்தேன். அவருக்கு 83 வயதாகும். அவருடைய மகன்தான் பண்டிதர். 1985ஆம் ஆண்டு அவர் உயிரிழந்திருந்தார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் நாள் அவர் தனது மகனுக்காக அஞ்சலி செலுத்துவார். அவருடைய மகன் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவர். அனைத்து தாய்மார்களுக்கும் தமது பிள்ளைகளுக்கு நினைவேந்தலை நடத்தும் உரிமையுண்டு. அந்த உரிமையை பெற்றுக்கொடுக்கவே நான் ஆஜராயிகிருந்தேன்.

ஜே.வி.பியினர் ஒவ்வொரு வருடமும் கொழும்பில் ரோஹன விஜேவீரவுக்கு நினைவேந்தல்களை நடத்துகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  பொது நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், தமது வீட்டில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டது. அதனை நான் அந்தப் பெண்ணுக்கு விளக்கியிருந்தேன்.  அவரது அழைப்பில் நானும் அவர் வீட்டில் நடந்த நினைவேந்தலில் கலந்துகொண்டிருந்தேன். அது தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

இது தொடர்பில் மீண்டும் குறுக்கீடு செய்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,....

புலிகளின் தலைவருக்காக நீதிமன்றில் ஆஜராகியுள்ள சுமந்திரன் எம்.பி. அதற்காக சிறுபிள்ளைத்தனமான உதாரணங்களை சபையில் முன்வைக்கிறார். தாய்மார் தமது பிள்ளைகளுக்கு இப்போதும் அஞ்சலி செலுத்தலாம். அது பிரச்சினையல்ல. ஆனால், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு புலிகளின் தலைவருக்காக ஆஜராக முடியும். அவர்கள் எமது படையினரை கொன்றொழித்தவராகும். விடுதலைப் புலிகளையும் ஜே.வி.பியையும் ஒன்றாக பார்க்க முடியாது. புலிகள் நாட்டை துண்டாட முற்பட்டவர்களாகும். அவர்களை எவ்வாறு ஜே.வி.பியுடன் ஒப்பிட முடியும் என்று குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Comments