கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்புகள்

74 ஆண்டுகளுக்கு (1946) முன் ஓர் ‘இஸ்லாமிய தாரகை’ வார இதழாக இதழியல் வானில் மின்னியது. நான்கே ஆண்டுகளில் (1950) வெளிச்சம் குறுகியது. ‘தாரகை’ என்று மட்டும் பெயர் தாங்கி 1953-ல் இன்னொரு இதழ். ஓரிரண்டு ஆண்டுகளே அதன் ஒளியும்.  

பிறகு, ஆறேழு ஆண்டுகளுக்கு அப்புறம் அதே பெயரில் இன்னொரு முயற்சி. (1960)  

இந்த மூன்று முயற்சிகளிலும் முனைந்து நின்றார், தமிழ்நாடு, திருநெல்வேலிப்பகுதி ஆழ்வார் திருநகரிக்காரர் கே.எம்.முகம்மது சாலிஹ். இங்கே, கொழும்பு -12, ‘வாழைத் தோட்ட’ வாசி.  

கடைசியாக வந்த மூன்றாம் வெளியீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ‘அபியுக்தன்’ எச்.எம்.பி. முஹிதீன் தோன்றாத் துணையாகி  ஆசிரியராகவும் சேவை செய்தார்.  

இத்தனை வரலாற்றையும் அச் சொட்டாக இங்கே வழங்கக் காரணம், அக்காலத்தில், அரை நூற்றாண்டுகளையும் தாண்டிய நிலையில், இலங்கை முஸ்லிம் சமூகக் குரலாக இருந்த ஒரேயொரு இதழின் பாரம்பரியத்தையும் அதன் ஓரிதழில் (31.03.1961) வெளியான கசப்பு கசப்பான தலையங்கம் ஒன்றையும் வெளிச்சமிடவே!  

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளை அண்மிக்கும் அந்தத் தலையங்கத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு

“இலங்கை முஸ்லிம்களின் தலைவர் யார்?”

என்ன, சற்றே நிமிர்ந்தே உட்கார்ந்து கண்களை உறுத்திப் பார்ப்பது போல் இருக்கிறதே!  

பாருங்கள், பாருங்கள் தலையங்கக் கருத்துகளை ஊன்றிப் படியுங்கள் கவனமாக!  

*"இன்றைய இலங்கை முஸ்லிம்களின் நிலை தலைவனில்லாத நிலையையே அடைந்திருக்கிறது. கண்ட கண்டவரெல்லாம் தங்களைத் தலைவரென்று கருதிக்கொண்டு இலங்கை முஸ்லிம்களுக்கு அறிக்கைகள் விடுகின்றனர். இவ்வறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரணாயிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களை வழி நடத்திச் செல்வது யார்?  

"ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் தலைவர் எப்படிப்பட்டவராயிருக்க வேண்டும்? ஜின்னாவைப் போன்றிருக்க வேண்டும், அப்துல் நஸாரைப் போன்றிருக்க வேண்டும், ஐயூப் கானைப் போன்றிருக்க வேண்டும், அப்படியில்லாமல் பட்டத்துக்காகவும், பதவிக்காகவும் தொப்பிகளைப் புரட்டும் பச்சோந்திகளாக இருக்கக் கூடாது.  

இப்படிப்பட்ட பச்சோந்தித் தலைவர்களினால்தான் இன்றைய இலங்கை முஸ்லிம்கள் கோணாரில்லாத ஆட்டுக்கிடைகள் போன்று திசைத்தெரியாது அலைந்து திரிகிறார்கள். நெல்லிக்கனி போன்று சிதறிக் கிடக்கின்றார்கள்.  

‘நாவசைத்தால் நாடசையும்’ என்பார்களே, அப்படியிருக்க வேண்டாமா ஒரு தலைவரின் கட்டளை! இத்தகைய கட்டளையைப் பிரகடனம் செய்யத் தக்க ஒரு தலைவர் இலங்கையிலுண்டாவென்று நாம் கேட்கும் இக் கேள்விக்கு இங்குள்ள எந்த முஸ்லிமாவது தங்கள் நெஞ்சில் கைவைத்து பதில் கூற முன்வருவார்களாவென்று மிகமிக பணிவன்புடன் கேட்கிறோம். இவ்விதம் நாம் கேட்பதனால் எம்மீது ஆத்திரம் கொள்ளற்க உண்மையை ஓர்மின்!  

"நமக்குத் தலைவர்களென்று கூறித்திரியும் போலி வேஷதாரிகளின் வெறும் பொம்மைகள், கோமாளிகள். பட்டம் பதவிக்காக தங்களை விற்பனை செய்பவர்கள். இவர்கள் யாரும் இலங்கை முஸ்லிம்களுக்குத் தலைவர்களல்லர். இலங்கை முஸ்லிம்களுக்கு இனிதான் சர்வ சக்தியுள்ள ஒரு தலைவர் உண்டாக வேண்டும். அப்படிப்பட்ட தலைவரால் தான் இலங்கைப் பெருங்குடி மக்களை நேரான பாதையில் சீராக வழி நடத்திச் செல்ல முடியும்.  

"பாக்கு வெட்டிக்கு மத்தியில் அகப்பட்ட பாக்குப்போன்ற நிலையிலிருந்து வரும் இன்றைய இலங்கை முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்ட சக்தியற்றவர்கள், தாங்கள் தான் இலங்கை முஸ்லிம்களின் ஏகபோகத் தலைவரென்று நினைத்துக் கொண்டு அறிக்கைகளும், விளக்கங்களும் விட்டுக்கொண்டு காலத்தை கரியாக்குகின்றனர். இந்த வெற்றறிக்கைகளினால் யாருக்கென்ன பயன்? சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி முஸ்லிம்களிடையிலுள்ள வேற்றுமையை ஊரெங்கும் பகிரங்கப்படுத்துகின்றனர். இப்படிச் செய்பவர்களா இலங்கை முஸ்லிம்களின் தலைவர்கள்? தங்களுக்குத் தலைகளிருப்பதனால் தங்களைத் தலைவர்களாகக் கருதிக் கொண்டுள்ள இந்தப் போலிகள் தங்கள் தலை காலியாயிருப்பதை எப்படி அறிவார்கள்?  31.03.1961  4ம் பக்க தலையங்கம்  

உண்மை, உண்மை! எப்படி அறிவார்கள்? நல்ல கேள்வி இப்போது அறிந்தோர் பதில் சொல்லலாம் என்று என் பங்குக்கு 'அறிக்கைவிட்டு' இந்தக் கசப்பை நிறுத்திக் கொள்கிறேன்.  
********  
 

இனிப்புகள்

இந்தக் கிழமை அபிமானிகளுக்கு ‘அல்வா கொடுத்தால்’ என்ன என்ற ஒரு யோசனை. அதாவது பத்தி எழுத்துக்களை வழங்காமல் ஏமாற்றுவது!  

இன்னும் விளக்கினால், மற்றவர்களை ஏமாற்றுகின்ற ஒருவிடயத்திற்கே ‘அல்வா கொடுப்பது’ என்பது.  

வேண்டாமே! மதிப்பிற்குரிய ஆசிரியர் ரொம்பவே கவலைப்பட்டுவிடுவார். தொடர்கிறேன்.  

இந்த, இனிப்புச் சமாசாரத்திற்கு நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கிற அர்த்தம் இருக்கிறதே அப்பப்பா! ஆயிரம்! 11-=-12 ஆண்டுகளுக்கு முன் படித்து ரசித்த ஓர் இனிப்பான குட்டிக்கதையை வழங்கும் முன், 814 பக்க நர்மதா பதிப்பக தமிழ்-= தமிழ்= ஆங்கில அகராதியின் 53 ஆம் பக்கத்தில் காணப்படும் தமிழ் ஆங்கில விளக்கத்தைப் பார்வைக்குத் தந்து விடுகிறேன்.  

* சர்க்கரைப் பாகினைக் கோதுமைமாவில் ஊற்றிக் கிளறிச் செய்யப்படும் ஒருவிதமான வழுவழுப்பும் இனிப்பும் உடைய பலகாரம்.  

* A soft smooth and jelly like sweet meat made of sugar treacle and wheat flour.  

இந்த விளக்கத்தில், நெய், பட்டர், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஏதொவதொன்றைச் சேர்த்துக்கிளறுவது பற்றி அகராதி மூச்சே விடவில்லை.  

யதார்த்தத்தில் நமக்கல்லவா தெரியும், ஏதாவதொரு நெய், அல்லது தாவர எண்ணெய் கலந்து கிளறப்பட்டு கையில் எடுக்கையில் நழுவி வழுக்கி விழக்கூடிய இனிப்பு என்று!  

நல்லது இருக்கட்டுமே. எல்லாம் இங்கே நான், மனிதப்பிறவிகள் எப்படி அல்வா கொடுக்கப்பழகியிருக்கிறார் என்பதை தாய் – மகன்- –மருமகள் மூவரையும் கதாபாத்திரங்களாக்கி ஒரு வேடிக்கைக் கதையை இனிப்பு இனிப்பாகச் சுவைக்கத் தருகிறேன்.  

* புதிதாகத் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினர், கணவன் மாலையில் வீடு திரும்பும் போது, மனைவிக்கு கொடுப்பதற்காக முறுக்கு வாங்கி வருவான். வீட்டில் அவளது அம்மாவும் இருப்பதால், இரவு நேரத்தில் அவளது மனைவி முறுக்கைத் தின்ன ஆரம்பித்தாள். முறுக்கைத் தின்னும்போது கறுக்முறுக் என்று சத்தம் வரும் அல்லவா?  

இந்தச் சத்தம் அவரது மாமியாருக்க கேட்டுவிட்டது. காலையில் எழுந்த அவர் தனது மகனிடம் “என்னடா இது நீ உன் பொண்டாட்டிக்கு மட்டும் முறுக்கு வாங்கி வந்து கொடுத்தாயே! அதற்குள் என்னை மறந்து விட்டாயா? என்று வேதனையுடன் கேட்க மகனுக்கு தர்மசங்கடமாகிவிட்டது.  
அம்மாவுக்குத் தெரியாமல் மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பதற்கு என்ன வழியென்று யோசித்தான். அப்போதுதான் அவனுக்கு அந்த யோசனை பிறந்தது. அதாவது அல்வா வாங்கிக் கொடுத்தால் எந்தப் பிரச்சினையுமே இருக்காது என்று அவன் புரிந்து கொண்டான். ஏனென்றால் வெளியில் சத்தமே கேட்காதே!  

இப்படித்தான் மற்றவர்களை ஏமாற்றுகிற விடயத்திற்கு ‘அல்வா கொடுக்காதே எனச் சொல்வது ஆரம்பித்தது.  
எப்படியோ, திருவாளர் (அல்லது திருவாட்டி) கிருமி நம்மைவிட்டு அகன்றதும் என் சின்னக் குடிசையாகிய வதிவிடத்திற்கு வாருங்கள், உண்மையான சுவையான நெய் அல்வா வழங்கி மகிழ்கிறேன்.  

***  

இன்னுமொரு வேடிக்கை வார்த்தையும் இருக்கிறது –அல்வா கொடுக்கிற மாதிரியே!  

“மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!”  

இது பழமொழியோ, நாட்டுப்புற வழக்குச் சொல்லோ, அந்த ஆய்வு அவசியமில்லை. ‘மண்ணினால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றில் பயணம் செய்தால் ஆபத்து! கரைந்து நம்மைத் தண்ணீரில் அடித்துச் செல்ல வைத்து விடும்’ என்று தான் பெரும்பாலானோர் கருதுவீர்கள்.  
‘மண் குதிரையை’ என்று சொல்வதைத் தவிர்த்து அதாவது ‘ரை’ யையும் ‘யை’யும் நீக்கி, ‘மண்குதிர்’ என்று கொஞ்சம் சொல்லிப் பார்த்து இந்த இனிப்பை ருசியுங்கள்.  

‘மண்குதிர் என ஒன்று ஆற்றில் இருப்பது (தென்படுவது) உண்மையிலும் உண்மை. நாம் ஆற்றங்கரையில் இருந்து பார்க்கும் பொழுது ஆற்றின் சில இடங்களில் மண் நிறைந்து மேடு போல் காட்சியளிக்கும். (மணல் திட்டு என்றும் சொல்வார்கள்) அங்கே மணல் குதிர் தான் இருக்கிறது என்று நாம் நம்பிப்போய் அதில் காலை வைத்தால் அவ்வளவு தான். நாம் அப்படியே உள்ளே போய் விடுவோம்” மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே அது ஆபத்து" என்று முன்னோர்கள் எச்சரித்து அபாயமணி ஒலிக்க, பாவம், நம் பாமரர்கள் ஒரு “யை”ச் சேர்த்து, ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே” எனக் கூக்குரல் போடத் தொடங்கி விட்டார்கள்!  

போனால் போகட்டும். (போடா சேர்க்காதீர்கள்!) அவர்கள் பாமரர்கள். நாமெல்லாம் அறிவு ஜீவிகள். நல்லவர்கள் அல்லாதவர்களை, நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை அறிய வந்தால், அல்லது பழக நேர்ந்தால், “மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கி விடாதே” என்று அழகுத் தமிழ் பிரயோகியுங்கள். நன்றி!  

Comments