விடியலை நோக்கி | தினகரன் வாரமஞ்சரி

விடியலை நோக்கி

இன்று விரைவாகவே வேலைக்குக் கிளம்பி விட்டார் கந்தசாமி. ஆடி மாதம் ஆகையால் கட்டிட வேலையை மாதம் சரியில்லையென்று யாரும் வீடு கட்டும் வேலை செய்யமாட்டார்கள். எப்பாடுபட்டாலும் வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.

என்ன செய்வது எல்லாம் அவரவர் வயிற்றுக்காகக் கடந்த பத்து நாட்களாக எந்த வேலையும் கிடைக்காமல் மிகவும் கஸ்டபடுகின்றனர். இன்று ஏதேனும் ஒரு ரிப்பேயர் வேலையாவது கிடைத்துவிட்டால் போதும். இந்த வாரம் ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் நேரம் போய் கொண்டிருந்தது.

பாதையில் வாகனப் போக்குவரத்து சத்தங்களுகிடையில் ஓர் ஆட்டோ வந்து நின்றது தான் தாமதம், கந்தசாமி ஓடிப் போய் ஆட்டோவில் ஏறிக்கொண்டார். ஆட்டோவில் வந்தவர் பார்ப்பதற்கு முன்னமே இன்னொருவன் கந்தசாமியை இழுத்து கீழே தள்ளிவிட்டான். அவனைப் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். அன்று அங்கு வேலைக்கு வந்த மற்றவர்களும் யாரும் வாயே திறக்கவில்லை. ஓய் நேற்று நான் தானே இவருடன் வேலைக்குப் போனதை பார்த்தாயே அப்புறம் எதுக்கு வண்டியில் ஏறினாய்? இவர் என்னைத் தானே கூட்டிக்கொண்டு போக வந்துள்ளார் என்ன..... அண்ணே சரியா---- "நான் சொல்லுவது" என்று மிரட்டும் தொனியில் கேட்டான்.

ஆட்டோவில் வந்தவர் பயந்தவாறு வேறொன்றும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு விழுந்து கிடந்த அவரைப் பரிதாபத்தோடு பார்த்துவிட்டு, ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தார். கீழே விழுந்தவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. மனத்தில் "காய்ச்சலில் கிடக்கின்ற மனைவியை ஒரு வேளை சோறு கஞ்சி கூட செய்து கொடுக்க முடியாமல் இவ்வளவு கஷ்டப்படவேண்டியுள்ளதே! ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா ஆண்டவனே. இந்த ஆடி மாதத்தில் ஏன் இப்படி எங்களை சோதிக்கின்றாய்" என்று மன்றாடினார்.

"பொலநறுவையில் இரண்டு போகம் விளைகின்ற வயல் நிலத்தை வைத்து அந்த பகுதியிலிருக்கும் பலருக்கு வேலையும் கொடுத்து சோறு போட முடிந்த என்னால், என்னுடைய மனைவிக்கு ஒரு வேலை சோறு கஞ்சி போட்டு கொடுக்க முடியலயே! வட்டிக்குக் கொடுக்கின்ற பயலும் ஏமாத்தி எங்கள் நிலத்தைக் கை மாற்றிக் கொடுத்து விட்டு இப்படி கஷ்டபடவேண்டியுள்ளதே" என்று வானத்தைப் பார்த்து அழுதபடியே கீழேயே கிடந்ததார்.

நெடுநேரமாக கீழே விழுந்து கிடந்தவரைத் தூக்கி அருகிலுள்ள விசித்திர ஹோட்டல் கடையின் சுவரில் சாய்த்து உக்கார வைத்தாள். எடுபிடி வேலை செய்யும் வேலம்மாள். அவரின் முகத்தைப் பார்த்தவுடன் இந்த மனுஷன் இரண்டு நாளா சாப்பிடாமல் இருப்பார் போல் என்று நினைத்துப் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் ஒரு பணிசும், பழமும், டீயூம் வாங்கி வந்து கொடுத்து விட்டு, அவர் அருகில் இருந்து பேச்சு கொடுத்தாள்.

"என்ன அண்ணே நீ ஊருக்கே சோறு போட்ட விவசாய ஆளுனு....... எல்லோரும் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. இந்தக் கொழும்பில் வந்து இப்படி கஷ்டபடுகிறீயே "?

"என்ன பண்ணுறதும்மா நானும் தோள்மேல மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு வயலில் போய் வேலை பார்த்து பல பேருக்கு வேலையும் கொடுத்த ஆளு நான். பல பேர் நல்ல விவசாயினு பாராட்டியிருக்கிறாங்க. அசட்டுக் கெளரவமும் வேறு. யாரு கண் பட்டிச்சோ தெரியல! எங்கோ இருந்து, என்னுடைய பக்கத்துக் காணிக்கு ஒரு குடும்பம் வந்து சேர்ந்திச்சு, இரண்டு குழந்தைகள். பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடைய 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவருக்கு ஏத்தாற் போல் வெள்ளை பொண்டாட்டியுடன் குடியேறினார். அவர் பெயர் சுரேஷ். வீதியால் போகும் போதும் வரும்போதும் நான் வயலில் வேலை செய்யும் போதும் பார்த்துவிட்டுப் போவார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை பொடி நடையாக எனது வயற்பக்கம் வந்தார். மெதுவாக என்னிடம் " எப்படி அண்ணே மிக நீண்ட நாட்களாக இங்கே விவசாயம் செய்கின்றீர்கள் போல" என்று பேச ஆரம்பித்தார். நானும் "ஆமா"என்றதோடு எனது சுயவிபரத்தையும் சொல்லி வைத்தேன். இப்படியாக தொடர்ந்த நட்பு அவர்கள் வீட்டில் சமைத்த உணவு எங்கள் வீட்டிற்கும், எங்கள் வீட்டில் சமைத்த உணவு அவர்கள் வீட்டிற்கும் பரிமாறியது. ஆறு மாத இடைவெளியில் இரண்டு வீட்டாரும் மிகவும் அன்போடு பழகியதால், யார் பேச்சையும் தட்டாத மாதிரி நடந்து கொண்டோம்.

அந்தச் சந்தர்ப்பத்தில் "நான் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி டவுனில் புதிதாக ஆரம்பித்துள்ளேன். " அங்கே நீங்களும் வரவேண்டும்" என்று அன்புக் கோரிக்கை விடுத்தார்.நானும் அதற்கு கட்டுப்பட்டு ஆபீஸை போய் பார்த்தேன். மிக வசதியாகவும் குளு குளு என்று ஏசி வேறு. வேலைக்கு இரண்டு மிடுக்கான தோற்றமுடைய பெண்கள். சற்று நானே வியந்துதான் போனேன். அவர் பெயர் சுரேஷ். கம்பெனி ஓனர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு ஒரு கிழமை கழித்து "அந்த சுரேஷ் என்னிடம் வந்து " அண்ணே எமது ஆபீஸ் பக்கத்தில் நல்ல கடையுடன் காணியும் விற்பதற்கு வந்துள்ளது.

என்னிடமும் கொஞ்சம் பணம் உள்ளது. மிகுதியாக ஒரு 45 லட்சம் தேவைபடுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. "உங்களுக்குத் தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார். நானும் அவரின் பேச்சைக் கேட்டு " வட்டிக்குப் பணம் கொடுக்கும் சுப்புவிடம் கேட்டு சொல்கிறேன் என்று வாக்கு கொடுத்தேன்." சொன்னது போல் இரண்டே நாளில் சுப்புவைக் கண்டு விடயத்தைக் கூறினேன். அதற்கு சுப்பு "அண்ணே நீங்கள் தப்பான ஆளை சிபாரிசு பண்ணமாட்டிர்கள் உங்களுக்கும் ஊரில் நல்ல பெயர் உள்ளது. ஆகையால், நாளை சுரேஷ்சின் ஆபீஸ்சை பார்த்துவிட்டுச் சொல்கிறேன்". என்று நடையைக் கட்டினார். மறுநாள் சொன்ன விடயங்கள் நடந்தன. சுப்பு பணத்தை கொடுப்பதற்கும் சுரேஷ் பணத்தை வாங்குவதற்கும் நானே பொறுப்பாளியானேன்.

"மாதம் ஆறு ஆகிவிட்டது "

சுரேஷ் ஆபீஸையும் பக்கத்துக் காணியையும் காலிபண்ணி விட்டு இரவோடு இரவாக மாயமாக மறைந்துவிட்டான். சுப்பு விடுவாரா? ஆறு மாதமாகியது.ஒரு வருடமாகிவிட்டது. நானும் தேடாத இடமில்லை சொல்லாத பொய்யில்லை . நான் இந்த வயலில் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைக்கும் பண மெல்லாம் வட்டியுடன் சங்கமம். வட்டியும் கட்ட முடியாமல் வருஷத்தில மூணு போகமும் கை நிறைய நெல்லும் எனக்கும் ஊருக்கும் சோறு போட்ட அந்த விவசாய நிலத்தை சுப்புக்கு கொடுக்க வேண்டியதாயிற்று.

எனக்குச் சொந்தமான விவசாய காணியை கொடுத்ததிலிருந்து. மனசு ஒடைஞ்சு போச்சு. மனசே கேட்கல. இதற்கு மேல் இங்கே இருந்தால் புத்தி கெட்டுபோய் வயலுக்கு தெளிக்கும் பூச்சு மருந்தைக் குடிச்சிட்டுச் செத்துப் போய்விடுவேனு பயந்துகிட்டுத்தான், குடி கெட்டாலும் பட்டணம் போனால் பொழச்சுக் கொள்ளலாம், என்று யோசித்து இந்த கொழும்புக்கு வந்தோம். எங்களுக்கோ புள்ள குட்டினு ஏதும் இல்லை. இங்கே வந்த பிறகுதான் " பணத்தின் அருமை தெரிந்தது" நடந்ததை நினைத்துக் கண் கலங்கினார் கந்தசாமி.

அந்தக் கைக்கூலி பெண் வேலம்மாவும் கந்தசாமியின் கதையைக் கேட்டு மூக்கை சிந்தி முந்தானையால் துடைத்துக் கொண்டிருக்கும் போதே முகத்துவார பகுதி வாசி "எமது அப்பாட்மென்டில் டெனேஜ் லைன் அடைச்சு இருக்கு, யாராவது வந்து பார்த்து கொடுத்தீங்கனா 2500/= தாரேன். கொஞ்சம் வந்து செய்து கொடுத்தால் நல்லா இருக்கும் " என்றார்.

ஒரு சிலர் தயங்கி நிற்க கந்தசாமி கண்ணை துடைத்துக்கொண்டார். மூன்று போகம் விளைவித்த விவசாயி அந்த 2500/= ரூபாய்க்காக அவர் பின்னால் செல்ல அந்த வானமும் ஒரு சில நீர்த் துளிகளையும் கசிந்தது.

பள்ளி செல்லாத இளம்வயது பருவத்துப் பெண்கள். இளம் விதைவைகள், நாற்பது நாற்பத்தைந்து வயதை தொட்டுக்கொண்டிருக்கும் அம்மாக்கள் என எடுபிடி கூட்டம் ஒவ்வொரு நாள் காலையிலும் அங்கே நின்றுகொண்டிருக்கும்.

வேலை செய்த களைப்பைப் போக்க தினம் தினம் குடித்துவிட்டு அன்று கிடைத்த சம்பளத்தையும் உயிரையும் தொலைத்து விடுகின்றனர் தினக்கூலியாக்கள். மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்த கூலி (சம்பளத்தை) வீட்டிற்குப் போகும் முன்னே வழியிலேயே வழிப்பறி செய்து குடிக்க வைக்கும் "வைன் ஸ்டோர்ஸ்" இருக்கும் வரை இளம் விதவைகள், கைவிடப்பட்ட தாய்மார்கள். அதிகரிக்கத்தான் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. அன்றாடம் உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களும் தானாக யோசித்து முன்னேறுவார்களா எனத் தெரியவில்லை. இன்று இதை யாரும் கண்டிப்பதும் இல்லை.

வேலை தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் தள்ளாத வயதிலும் படிக்காத புதிதாக கட்டிட வேலை தேடி வருபவர்களும் அங்கே கூட்டமாகப் பேசிச் சிரித்தபடி ஜெம்பட்டாத்தெரு பொலிஸ் பக்கமும் விசித்திர ஹோட்டல் பக்கமும் தினமும் நின்று கொண்டிருப்பர். இங்குதான் கட்டிடம் கட்டும் என்ஜினியரோ சுப்பர்வைசரோ அல்லது சிறிய கொந்தராத்து எடுக்கும் நபர்கள் தினக்கூலிக்கு தேவைப் படும் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். ஏழைத் தொழிலாளி வாழ்வு விடியலை நோக்கி எப்போழுது எப்படி பயணமாகுமோ?

பொன். பத்மநாதன்
 

Comments