மஹர சிறையில் நடந்தது திட்டமிட்ட சூழ்ச்சியா? | தினகரன் வாரமஞ்சரி

மஹர சிறையில் நடந்தது திட்டமிட்ட சூழ்ச்சியா?

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்து நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் எட்டுப்பேருக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், நூற்றுக்கும் அதிகமான கைதிகள் தப்பிச்சென்று சமூகத்தில் நுழைந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? என்று கேட்கிறார்கள் அதிகாரிகள்!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது அளவுக்கு அதிகமான கைதிகள் தங்க வைக்கப்பட்டிருப்பதால், இடைக்கிடை இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமே என்றாலும், 2012 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்ததன் பின்னர் இரண்டாவது பாரிய சம்பவமாக மஹர சிறைச்சாலை சம்பவம் கருதப்படுகிறது.

கைதிகள் சிலருக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதன் பின்னர், அது ஏனையவர்களுக்கும் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதன்போது கைதிகள் சிலர் களேபரம் ஏற்படுத்திக்கொண்டு தப்பிச்செல்ல முனைந்ததால், பிரச்சினை பூதாகரமானதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் அதற்கமைய எல்லா சிறைச்சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருக்கிறார். மஹரவில் மாத்திரமன்றி நாட்டிலுள்ள எல்லா  சிறைச்சாலைகளிலும் ஒரு கலவர அலை உருவாகியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். போதைப்பொருள் கடத்தல், பாவனையாளர்கள் சிறைகளில் அதிகம் காணப்படுகின்ற நிலையில், கொவிட் 19 நிலவரத்தையும் கருத்திற்கொண்டு சிறைகளில் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால், இந்தச் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலை சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஐவர்கொண்ட குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. அண்மையில் அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது மஹர சிறைச்சாலை சம்பவத்தை வைத்தும் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத்தரப்பினர் கூறுகின்றனர்.

மஹர சிறைச்சாலையில் நடந்தது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியாகும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ச. வெலிக்கடைச் சிறைச்சாலையைக் கொலைக்களமாக மாற்றுவதற்கு முயற்சித்ததுபோலவே மஹர சிறைச்சாலையிலும் திட்டம் தீட்டப்பட்டிருப்பது பற்றிய தகவல் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார். அதாவது, சிறையில் உள்ள ஒரு கைதி சக கைதிகளுக்குப் போதை மாத்திரையைக் கொடுத்து இவ்வாறான வெறித்தனமான ஒரு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்றும் இஃது உண்மையில் ஜனாதிபதிக்கு சர்வதேச ரீதியாக ஓர் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியாகும் என்கிறார் அமைச்சர் வீரவன்ச.

மனித சமுதாயத்தில் சிறைச்சாலைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. பண்டைக் காலத்தில் மன்னர்கால ஆட்சியின் போது சிறைச்சாலைகள் குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்கும் ஓர் இடமாகவே இருந்தது.  

ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டால் அவன் விடுதலை பெற்று சிறையில் இருந்து வெளிவர முடியாது, அவன் பல்லாண்டு காலம் சிறையில் ஒரு மிருகத்தைப் போன்று அடைக்கப்பட்டு உண்பதற்கு போதியளவு உணவும், உறக்கமும் இன்றி நடைப்பிணமாக இருந்து இறுதியில் மடிந்து போவான்.  

அன்று ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டால், அவன் இருக்கிறானா, இல்லையா என்று கூடச் சிறை அதிகாரிகள் பார்க்க மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் ஒரு கைதிக்குப் பல நாட்களாக உணவும், அருந்துவதற்கு நீரும் கிடைக்காமல் பசியோடு வாட வேண்டி இருந்தது. 20ஆம் நூற்றாண்டில் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் சிறைச்சாலைகளை சீர்திருத்த நிலையங்களாக மாற்றி குற்றம் இழைத்தவன் தண்டனைக் காலம் முடியும் வரையில் அங்கு நல்ல முறையில் பராமரிக்கப்படுதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இலங்கையிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறைச்சாலைகள் இவ்விதம் குற்றம் இழைத்தவனை திருத்தி மீண்டும் அவனை நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழ வைப்பதற்கான சீர்திருத்த நிலையங்களாக இருந்தன. ஆயினும், சனத்தொகை பெருக்கம், குற்றம் புரிவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இருந்த வசதிகள் குறைந்தன.
முன்னர் 100 கைதிகள் வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் இப்போது சுமார் 300 கைதிகள் வைக்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக சுமார் 25 ஆயிரம் கைதிகள் நாடு முழுவதிலும் உள்ள 22 சிறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் இழைத்துவிட்டுச் சிறைசெல்லும் எல்லோருமே கெட்டவர்களும் அல்லர், நல்லவர்களும் அல்லர். ஆனால், தீய பழக்கங்களைக்கொண்டவர்கள் மேலும் ஒருபடி அதிகமாகக் குற்றம் இழைப்பதற்குக் கற்றுக்கொள்ளாமலும் நல்லவர்கள் தீயவர்களாக மாறிவிடாமலும் சிறையிலிருந்து வெளியில் வர வழியேற்படுத்தப்பட வேண்டும். 

Comments