கூட்டு ஒப்பந்த பேரத்தின்போது வெளிவாரி பயிர்ச்செய்கை பற்றியும் பேச வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

கூட்டு ஒப்பந்த பேரத்தின்போது வெளிவாரி பயிர்ச்செய்கை பற்றியும் பேச வேண்டும்!

தோட்ட முதலாளிமார் சம்மேளத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இறுதியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் 29ஆம் திகதி காலாவதியாகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இன்றுவரை தொழிலாளர்கள் நாளாந்தம் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவுடன் விசேட கொடுப்பனவாக 50 ரூபாவுடன் மொத்தமாக 750 ரூபாவைப்- பெறுகின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகத் தெரிவானார். அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். அத்தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

2020 மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதாக வாக்குறுதி அளித்த போதிலும் அந்த வாக்குறுதி இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை. 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

தோட்டத் முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர் பாத்திய புலுமுள்ள இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது தற்போது நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தை எக்காரணம் கொண்டும் இடைநடுவில் விலக்கி கொள்ள முடியாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

பெருந்தோட்டங்களை அரசாங்கம் பரிபாலனம் செய்தபோது அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நட்டத்தை தவிர்ப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச பெருந்தோட்டங்களை பரிபாலனம் செய்யும் பொறுப்பை 22 தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைத்தார். அவ்வாறு அவர் செயல்பட்டதால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தவிர்க்கப்பட்டு அரசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகள் மூலம் வருமானத்தை பெறக்கூடிய வாய்ப்பு கிட்டியது.

அதனால் பெருந்தோட்டங்களில் வேலை செய்துவரும் தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்தம் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கக்கூடிய விதத்தில் சம்பளத் தொகையை பெற முடியாதவர்களாகவும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து அவர்களை எதிர்காலத்தில் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என அரசாங்கத்தையும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தையும் வலியுறுத்தி வருகின்றன.

தற்போது அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க மறுக்கும் தோட்டக் கம்பனிகள் நிர்வகிக்கும் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என அறிவித்து வருகிறார்கள். அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் எல்கடுவ பிளாண்டேஷன், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகியவற்றினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. அந்த அமைச்சர்களின் கருத்துக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கான ரூபா நட்டம் ஏற்படும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கம்பெனிகளினால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான தோட்டங்களில் முழு நிலப்பரப்பிலும் பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத காணிகள் காடு மண்டிக் கிடக்கின்றன. முன்னைய காலங்களில் பத்திரிகைகளில் ஏறத்தாழ 35,000 ஏக்கர் காணிகள் பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்களாக உள்ளதாக செய்திகள் பிரசுரமாகின. இக் காணிகள் உட்பட பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவரும் இவ்வாறானதொரு கருத்தையே கொண்டுள்ளதாக சுூசகமாக கூறியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய சில திட்டங்கள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.

பெருந்தோட்டங்களில் நாடளாவிய ரீதியில் கிடக்கும் தரிசு காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் அந்தக் காணிகளில் தேயிலை, இரப்பர், தென்னை அல்லது காணிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலநிலைக்கேற்ப பயிர் வகைகளை பயிரிடவும், கால்நடை வளர்ப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தோட்ட தொழிற்சங்கங்கள் இதுவரை தோட்ட தொழிலாளர்களின் பொதுப் பிரச்சினைகளில் கூட கருத்து வேற்றுமையுடன் செயல்பட்டமையே வரலாறு. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை சுபிட்சமாக்க தொழிற்சங்கங்கள் இனிவரும் காலங்களிலாவது கருத்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு பெருந்தோட்டங்களில் தரிசு காணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தையும் அரசாங்கத்தையும் வலியுறுத்த வேண்டும்.

கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சம்பளத்துடன் மேலதிக வருமானத்தை தேடிக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டினால் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் நிச்சயம் சுபீட்சம் ஏற்படும்.

நாட்டின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள தெனியாய நகரைச் சுற்றி உள்ள பெருந்தோட்டங்களில் தோட்டக் காணிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயத்துக்கான பசளை விலைக்கு வழங்கப்படுகிறது. தேயிலை கொழுந்தை தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகிகளுக்கு ஒப்படைத்து அதற்கான விலையை பெற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு பெறப்பட்ட காணிகளில் வேலை செய்யும் நேரம் தவிர்ந்த ஏனைய நாட்களில் தொழிலாளர்கள் வேறு வேலைகளைச் செய்ய அனுமதிக்கப் படுவதனால் உபரி வருமானத்தையும் பெறக்கூடியதாக உள்ளது.

எனவே தோட்ட முதலாளிமார் சம்மேளனம், அரசாங்கம், தொழிற்சங்கங்கள் ஆகிய முத் தரப்பினரும் சம்பள உயர்வு பற்றி பேசும்போது காணிகளை பிரித்து கொடுத்து வெளிவாரி பயிர்ச் செய்கை குறித்தும் கலந்துரையாடப்பட வேண்டும். தொழிலாளர்களின் தொழில் நிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட வேண்டியது அவசியம். இச் சம்பள பேச்சுவார்த்தையில் சொச்சமாகக் கிடைக்க வேண்டுய சம்பள உயர்வை விட இதுவே முக்கியம்.

சி.ப. சீலன்

Comments